

சமூக வலைத்தளங்களில் எலான் மஸ்க் பற்றிய மீம்கள் அலையடிக்கின்றன. பூனையின் பிடியில் அகப்பட்டுக்கொண்ட குருவியாக ட்விட்டர் நிறுவனம் திணறிக் கொண்டிருக்கிறது. 2006 இல் ஜாக் டோர்ஸியால் தொடங்கப்பட்ட ட்விட்டர் வலைத்தளம் ஒரு தசாப்தத்தைக் கடந்து நன்றாகத்தான் சிறகடித்துப் பறந்துகொண்டிருந்தது. குதிரைப் பந்தயத்தில் ஜெயிக்கிற குதிரையின் மேல்தான் பணம் கட்டுவார்கள். அதன்படி கோடிக்கணக்கில் சந்தாதாரர்களையும் பின்தொடர்பாளர்களையும் சம்பாதித்து வைத்திருந்த ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் - 100 கோடி) கொடுத்து வாங்கியிருக்கிறார் எலான் மஸ்க் என்கிற உலகின் நம்பர் 1 பில்லியனர்.
இவரிடம் இருக்கும் சொத்து மதிப்பைக் கணக்கிட நம் கை, கால் விரல்கள் மட்டுமல்ல, பக்கத்தில் இருப்பவரின் விரலையும் விட்டு எண்ணினாலும் எண்ணி முடிக்க முடியாது என்பார்கள். இவர் விதவிதமாக போஸ் தந்து செய்யும் சேட்டைகள் தனி ரகம். ஏலம் கேட்டுவிட்டு எடுப்பதா, வேண்டாமா என்று குழம்பிப் போகும் ஏலச்சீட்டுக்காரனைப் போல் ’ட்விட்டரை நான்தான் வாங்கப் போகிறேன்’ என்று அதே ட்விட்டரிலேயே ட்வீட்டினார் எலான். ஆனால், என்னவெல்லாமோ கம்பி கட்டுகிற கதையை எல்லாம் அதற்குப் பின்பு சொல்ல ஆரம்பித்தார். 2017 லேயே ஐ லவ் ட்விட்டர் என்று தனது ஆசைக்கு அச்சாரம் போட்டார் மஸ்க். ‘அப்ப வாங்க வேண்டியதுதானே’ என்று ஒருவர் கேட்க, ‘எத்தனை ரூபாய்க்கு... இல்லையில்லை டாலருக்கு..” என்று அவரிடமே கேட்கவும் செய்தார். ட்விட்டரில் வேலை செய்தவர்களுக்கு அப்போதே எச்சரிக்கை மணி அடிக்கத் தொடங்கிவிட்டது. ஒருவழியாக நாள் பார்த்து, நட்சத்திரம் குறித்து, கையில் வாஷ் பேசினுடன் ட்விட்டர் அலுவலகத்துக்கே வந்துசேர்ந்தார். கைகளைக் கழுவி சிம்பாலிக்காக ஊழியர்களுக்கு எதையோ உணர்த்திச் சென்றார் மஸ்க்.
கடந்த வருடம் இதே நவம்பர் மாதத்தில் சிஇஓவாக அலங்கரிக்கப் பட்டு அமரவைக்கப்பட்ட நம்ம நாட்டுக்காரர் பராக் அகர்வால் அதே நவம்பரில் இந்த ஆண்டு மஸ்கால் ஃபயர் செய்யப்பட்டிருக்கிறார். ஒட்டுமொத்த குருவிக்கூட்டையே கலைத்துவிட்டு, “நான் இப்ப ட்விட்டர் சிஇஓ இல்ல, சீஃப் ட்விட்’ என்று புதிய நாமகரணத்தையும் தனக்குத்தானே சூட்டிக்கொண்டார். இத்தனை நாளும் ப்ளூ டிக்கை வைத்துக்கொண்டு அலப்பறை செய்து வந்தவர்களை அலற வைக்கும் விதமாக ‘டிக்’ வேண்டுமானால் 8 டாலரை வெட்டு என்று கட் அண்ட் ரைட்டாகக்கறார் காட்டத் தொடங்கினார். இதனால் எங்களுக்கு அக்கவுண்ட்டே வேண்டாம் என்று ட்விட்டரை விட்டு வேறு சமூக வலைத்தளங்களை நோக்கி தலைதெறிக்க ஓடத் தொடங்கி யிருக்கிறார்கள் ப்ளூ டிக்கர்கள். இதுதான் வாய்ப்பென்று முன்னால் ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்ஸியும் புதிய தளத்தைத் திறந்து நீலக் கம்பளம் விரித்து வரவேற்கத் காத்திருக்கிறார்.
முதலில் பராக் அகர்வால், பின்னர் பயனர்களுக்கு அடுத்தபடியாக இப்போது ட்விட்டரில் பணிபுரியும் ஊழியர்களின் தூக்கத்தைக் கெடுக்க அடுத்ததாக ஒரு புதிய யோசனை உதித் திருக்கிறது மஸ்க்குக்கு. ஏற்கெனவே வேலைக்கு வந்தவர்களையும் புறப்படுவதற்காக பேண்ட் சட்டையை எடுத்து உடுத்த இருந்தவர்களையும் அப்படியே ’ஃப்ரீஸ்’ செய்து உட்கார வைத்தது அந்த அறிவிப்பு. தன்னிடமிருந்து ஓலை (மெயில்) வரும்வரை அவரவர் வீட்டில் காத்திருக்கும்படியும் அலுவலக ஐடிக்கு ஓலை வந்தால் புறப்பட்டு வருமாறும் அதுவே தனிப்பட்ட ஐடிக்கு வந்தால் வேறு வேலையைப் பார்க்கும்படியுமான ஓர் ‘அருமையான’ யோசனைதான் அது. இந்த நிமிடம்வரை ட்விட்டர் ஊழியர்கள் இரண்டு மெயில்களையும் திறந்து வைத்துக்கொண்டு தூக்கம் மறந்து விழிபிதுங்கிப் பார்த்துக்கொண்டிருக் கின்றனர். இந்தச் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்கப் போகுதோ என்று கலங்கி நிற்கின்றன மற்ற ட்விட்டர் குருவிகள்.