

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தீவிர மடைந்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு அவ்வப்போது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் தவிர்த்துத் தன்னார்வமாக வானிலைச் செய்திகளை அளிப்போரும் உண்டு. இதில் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜானைப் பின்தொடர்வோர் சற்று அதிகம். எனவே அவர் பதிவிடும் பதிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தவும் செய்கின்றன. அந்த வகையில், ‘விடுமுறைக்கான வாய்ப்பு குறைவு’ என அவர் பதிவிட்டதற்கு ‘மாணவர்களின் வில்லன் பிரதீப் ஜான்’ என 2கே கிட்ஸ் கமெண்ட் செய்துள்ளனர். முன்னதாக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மெசேஜ் அனுப்பிய மாணவர்கள், ’செல்லம், நாளைக்கு லீவ் வேண்டும்’ என குறும்பு செய்தனர். 2கே கிட்ஸ்களின் இந்தச் செயல் பலரைச் சிரிக்க வைத்தாலும் எந்தவொரு சூழலையும் கலாய்க்கப் பழகி இருக்கும் இந்தத் தலைமுறையைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா எனப் புலம்பி வருகின்றனர்!
ஒரு நடிகையின் கிரிக்கெட் சத்தியம்: இருபது ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றிப் பெற்றால், ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொள்வதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நடிகை ஷெகர் சின்வாரி. இந்தியாவை ஜிம்பாப்வே வென்றால், பாகிஸ்தானுக்கு அரையிறுதி செல்ல வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால், நெட்டிசன்கள் அவரைக் கலாய்த்து வருகின்றனர். எனவே, ஷெகர் சின்வாரியின் வைரல் பதிவை இந்திய ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ஏற்கெனவே இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதிய போட்டியின்போது ‘இந்தியா தோற்க வேண்டும்’ எனத் தொடர்ந்து ட்வீட் செய்து இந்திய ரசிகர்களிடம் இவர் வாங்கிக் கட்டிக்கொண்டார்.
திங்கள்கிழமை பிடிக்காதா? - வெள்ளிக்கிழமை வந்தாலே பலருக்கும் குதூகலம் தொற்றிக்கொள்ளும். சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையை ஆராதிப்பவர்கள் பலருண்டு. ஆனால், வார விடுமுறையை அடுத்து திங்கள்கிழமை அன்று புது வாரத்தை எதிர்கொள்ளத் தயாராக பலருக்கும் பிடிக்காது. எனவே, பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்பவர்களின் சோகமான நாளாக திங்கள் இருந்து வருகிறது. மக்களின் ‘திங்கள்கிழமை மனநிலையை’ப் புரிந்துகொண்ட கின்னஸ் அமைப்பு, ‘வாரத்தின் மிக மோசமான நாள் திங்கள்கிழமை’ என்பதை அறிவித்திருக்கிறது. இதை உலக மக்கள் பலரும் வரவேற்றுள்ளனர். கின்னஸின் இந்த அறிவிப்புக்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் ‘திங்கள்கிழமை மீம்’கள் வைரலாகின. - தொகுப்பு: ராகா