

மீன் பிடித்து முடித்தவுடன் கரைக்குத் திரும்பும் மீனவர்கள், ஒருகாலத்தில் படகுப் போக்குவரத்துக்கும் பயன்பட்ட கூவம் ஆறு, கோயில் வளாகத்தில் குழந்தையை ஆசீர்வதிக்கும் யானை எனப் பல தத்ரூபமான ஓவியங்கள் சென்னை, ஆழ்வார்பேட்டையிலிருக்கும் சி.பி.ஆர்ட் சென்டரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. `எக்ஸ்பிரஷன்ஸ்’ என்னும் தலைப்பில் இந்த ஓவியங்களை வரைந்திருக்கிறார் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மருத்துவம் படிக்கும் எஸ்.தணிகைவேல்.
சிருஷ்டி ஓவியப் பள்ளியில் பல்வேறு பாணி ஓவியங்களையும் வரைவதற்கு கற்றுத் தேர்ந்த தணிகைவேலின் பயணம், யு.என்.இ.பி. நடத்திய 18-வது சர்வதேச ஓவியப் போட்டியில் பரிசு, தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர் சங்கம் நடத்திய போட்டியில் முதல் பரிசு எனப் பல எல்லைகளைத் தொட்டது.
கடந்த வாரம் இவரின் ஓவியக் கண்காட்சியைத் தொடங்கிவைத்து தணிகைவேலின் திறமைகளைப் பாராட்டியும் சில ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறார் பிரபல ஓவியர் டிராட்ஸ்கி மருது.
ரியலிஸ்டிக் பாணியில் அமையும் ஓவியங்களை வரையும் தணிகைவேலின் படைப்புகளில் மீன் விற்கும் மூதாட்டி, பூ விற்பவர், தச்சுத் தொழில் செய்பவர் என எளிய தொழில்களைச் செய்யும் சாமானியர்களின் வலி மிகுந்த வாழ்க்கையைப் பற்றிய பதிவாக மிளிர்ந்தன.