

அண்மையில்தான் தோசையைச் சுட்டுத் தள்ள பிரின்டர் போன்ற இயந்திரம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இப்போது இட்லியைச் சுட்டுத் தள்ள ‘இட்லிபாட்’ எனும் ரோபாட் இட்லிப் பானை வந்துவிட்டது. இதை வடிவமைத்துள்ள பெங்களூருவைச் சேர்ந்த பொறியாளர், தன்னுடைய மகளுக்காகக் கடைகடையாக அலைந்து திரிந்தும் இட்லி கிடைக்காததால், இந்த இட்லிபாட்டை வடிவமைத்திருக்கிறார். இது ஏடிஎம் போல இட்லியைத் தரும் இயந்திரம். இந்த இயந்திரத்தில் இட்லி மாவை ஊற்றி வைத்திருப்பார்களாம். இட்லி தேவைப்படுவோர் ஏடிஎம்மில் இருக்கும் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து பட்டனைத் தட்டினால் சுடச்சுட இட்லி வார்த்துத் தந்துவிடுமாம். ‘கிளவுட் கம்ப்யூட்டிங்’ என்கிற தொழில்நுட்பத்தில் இதைச் சாத்தியமாக்கியிருக்கிறார்கள். இட்லி மட்டுமல்ல, சட்னி சாம்பாரையும் சேர்த்து பார்சல் செய்து தருமாம் இந்த இயந்திரம். இப்படித் தயாரிக்கப்படும் இட்லிகள் ஜோடி ரூ.25க்கு விற்கப்படுகின்றன. இட்லிக்கடை ஆயாமார்கள், தள்ளுவண்டி கடைகளோடு போட்டிபோடாமல் இருந்தால் சரி!
இன்னொரு ‘காக்கா முட்டை’!
மேற்கத்திய உணவு வகையான பீட்சா, பர்கர் போன்றவற்றை ருசிபார்த்துவிட வேண்டும் என்கிற ஆவல் பலருக்கும் உண்டு. அதுவும் குழந்தைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இதை மையமாக வைத்துத்தான் தமிழில் ‘காக்கா முட்டை’ என்கிற படமே வெளிவந்தது. அந்தப் படத்தில் வரும் காட்சி போலவே ஒரு சம்பவம் நொய்டாவில் நடைபெற்றிருக்கிறது. ஆனால், சேல்ஸ்மேன் இதில் நடந்துகொண்ட விதம், அவரை ‘வைரல் மேனா’க மாற்றியிருக்கிறது. பிரபல கடை ஒன்றில் ஒரு ஏழைச் சிறுமி பர்கர் வாங்கிச் சாப்பிட வந்தார். ஆனால், அந்தச் சிறுமியிடம் வெறும் 10 ரூபாய்தான் இருந்தது.
பர்கரின் விலையோ 90 ரூபாய். ‘காக்கா முட்டை’ படத்தில் வருவதுபோல் அடித்து விரட்டாமல், அங்கிருந்த சேல்ஸ் மேன் தீரஜ், அந்தச் சிறுமிக்கு பர்கரைக் கொடுத்திருக்கிறார். அந்தச் சிறுமியின் 10 ரூபாயோடு தன்னுடைய 80 ரூபாயைக் கொடுத்து பில்லுக்குப் பணமும் கொடுத்திருக்கிறார். இதை அங்கிருந்த ஒருவர் ஒளிப்படம் எடுத்து சோஷியல் மீடியாவில் பகிர, அந்தச் செய்தி வைரல் ஆகிவிட்டது. அதுவும் உலக உணவு தினத்தன்று இந்த நிகழ்வு நடைபெற்றதால், அதுவும் ஹைலைட்டாக அமைந்துபோனது. இப்போது சேல்ஸ் மேன் தீரஜ்ஜுக்கு அந்நிறுவனம் பாராட்டு விழா நடத்தி இருக்கிறது. அதை அந்த நிறுவனம் சோஷியல் மீடியாவில் பகிர அதுவும் வைரலாகிவிட்டது. காசு இல்லாவிட்டாலும் சின்னஞ்சிறு குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய அந்த சேல்ஸ்மேனின் மனசுதான் கடவுள்!
தொகுப்பு: நிதிஷ்