

தீபாவளி என்றாலே மறக்க முடியாத அலப்பறைகள் ஒவ்வொருவருக்கும் நினைவில் இருக்கும். அப்படிப்பட்ட தீபாவளி அலப்பறைகளில் சில: பண்டிகைக் காலத்தில் பேருந்தில் செல்லும் பயணம் இருக்கிறதே, அது கொடுமையிலும் கொடுமை. ‘ஹேப்பி தீபாவளி’ என்று தோழிகளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினால் அருகில் இருப்பவர் குறுகுறுவென்று மொபைலைப் பார்த்து வெறுப்பேற்றுவார். அந்த வேதனையைத் தாண்டி மொபைலை மறைத்து நோண்டிகொண்டே இருந்தால், அதே நபர் குறட்டை விட்டுக்கொண்டே அவருடைய மண்டையை நம் தோளின் மீது ‘பார்க்’ செய்திருப்பார். இதையெல்லாம் ஒருவழியாகக் கடந்து வீடு வந்து சேர்ந்தால், ஒரு கும்பல் அப்படியே நம்மை ‘பேக்’ செய்து துணிக் கடைக்குக் கூட்டிச் சென்றுவிடும். அங்கிருக்கும் கூட்டம் ஜவுளி கடையையே புரட்டி போட்டுக் கொண்டிருக்கும். அதில் புகுந்து நாமும் ஒரு துணியை எடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும் போதுதான், ‘அந்தப் புடவைக்கு இந்த பிளவுஸ் மேட்சிங்கா இருக்கா, அந்த பேன்ட்டுக்கு இந்தச் சட்டை மேட்சிங்கா இருக்கா’ என்று யோசனையிலேயே அந்த இரவு முடிந்துவிடும்.
நரியில்லாத காட்டைகூடப் பார்த்துவிடலாம். தீபாவளி அன்று கறியில்லாத வீட்டைப் பார்க்க முடியுமா? ஸ்டைலாக ராஜ்கிரணைபோல் நல்லி எலும்பைக் கடிக்க ஆசைபட்டு கடித்து ‘ஆ.. ’ என்று பல் வலியில் கத்த, ‘உங்கள் பற்பொடியில் உப்பு இருக்கிறதா பருப்பு இருக்கிறதா’ என்று தொலைகாட்சியில் வரும் விளம்பரத்தைப் பார்த்து சேனலை மாற்றினால் பட்டிமன்றத்தில் வாடகைத்தாய் மூலம் தங்கள் வாரிசைப் பெற்றுக்கொள்வது சரியா என்கிற வாக்குவாதம் நம்மைத் திணறடிக்கும். இதெல்லாம் வேண்டாம் என்று சேனலை மாற்றினால் இந்தியத் தொலைகாட்சிகளில் முதன்முறையாக என்று தமிழ் ராக்கர்ஸ் என்றோ சுட்டு ரீலீஸ் செய்த படத்தை அன்றுதான் போடுவார்கள்.
இந்த ஆணியெல்லாம் வேண்டாம் என்று டிவியை அணைத்துவிட்டு, புதுப் படம் பார்க்க நண்பர்களோடு தியேட்டர் சென்றால், அங்கு ‘மன்னன்’ படத்தில் வரும் ரஜினி, கவுண்டமணிபோல் டிக்கெட் வாங்குவதற்குள் புதுச் சட்டை புது டிசைனாக மாறியிருக்கும். குதூகலத்தோடு சீட்டில் உட்கார்ந்தால், நமக்கு முன் இருப்பவர் ஊட்டச்சத்து பானத்தை மட்டுமே குடிப்பவர் போல் உயரமாக உட்கார்ந்துகொண்டு திரையைப் பாதி மறைப்பதோடு, அவ்வப்போது எழுந்து நின்று ஆட்டம் போட்டு மொத்த படத்தையும் பார்க்கவிடாமலேயே செய்துவிடுவார். அந்தக் கோபத்தில் தியேட்டரை விட்டு வெளியே வந்தால், “படம் எப்படி இருக்கு ப்ரோ” என்று மைக்கை வாய்க்குள் விடும் யூடியூபர்களிடம் முறைத்துப் பார்த்துத் தப்பிப்பதற்குள் அப்பப்பா..
படம் பார்க்க முடியாத சோகத்தில் வீட்டுக்கு வந்தால், தீபாவளிப் பலகாரங்களுடன் சொந்தங்களும் பந்தங்களும் வரிசைக் கட்டி நிற்பார்கள். அடுத்த நாலு வாரத்துக்கு சாம்பார் சாதத்திற்கும் ரசம் சாதத்திற்கும் தொட்டுக்கொள்ள இந்தப் பலகாரங்கள்தான் பிரதானம் என்பதை நினைக்கும்போதே தீபாவளி பலகாரங்கள் சாப்பிடாமலேயே திகட்டிவிடும். ஊரிலிருந்து வந்தது முதல் அலைந்த அலைச்சலுக்கு அப்பொழுதுதான் தூக்கம் நம்மை தழுவத் தொடங்கும். அப்போது பார்த்து, ‘டமால் டுமீல்’ என்று நம்மை நோக்கிப் பாய்ந்த தோட்டாக்களைச் சமாளித்து தூக்கம் கலைந்து எழுந்தால் அக்கம்பக்கத்து வாண்டுகளின் துப்பாக்கிச் சத்தத்தில் “அட போங்கடா” என்று நினைக்கத்தோணும்.
இப்படியாகத் தீபாவளி மதிய மயக்கம் மண்ணாய்ப் போக மாலையில் வீட்டுக்கு வெளியில் நின்றால் பக்கத்து விட்டுப் பையன், அவன் அடித்த கிரிக்கெட் பந்தை நான் கொடுக்கவில்லை என்கிற கோபத்தில் ராக்கெட்டைப் படுத்தவாக்கில் விடுவான். ராக்கெட்டைச் சமாளித்து இவர்கள் மத்தியில் பட்டாசு வெடிக்க ஃபண்டு போட்ட பட்டாசு பாக்ஸ்ஸைத் திறந்தால் அனைத்து ரகத்திலும் ஒரு வெடி மட்டும் இருக்கும். வெடிக்காத அந்தப் பட்டாசை மொத்தமாகக் கொளுத்திவிட அதிசயமாக ஒன்றிரண்டு வெடிக்கும். ஏதோ பொருளுக்கு ஆசைபட்டு ஃபண்டு போட்டு பட்டாசு வாங்கினால் தீபாவளி அன்று போகிதான் கொண்டாட வேண்டியிருக்கும்.
ஒருவழியாக இரவில் தூங்கப் போனால், வரிசையாக கைபேசி அலறும். அர்த்த ராத்திரியிலும் “ஹேப்பி தீபாவளி” என்று நண்பர்கள் அனுப்பும் வாட்ஸ்ப் குறுஞ்செய்தி அலப்பறைகள் நீளும். “அடேய் தீபாவளி முடிஞ்சுபோச்சு” என்று புரிய வைப்பதற்குள் இரவு முடிந்துவிடும். இப்படியெல்லாம் இருந்தாலும் இந்த அலப்பறைகளோடு தீபாவளியைக் கொண்டாடும் சுகம் இருக்கே.. அது வேற ஃபீலிங்.