வென்ற கண்கள்!

வென்ற கண்கள்!
Updated on
3 min read

உத்தரப் பிரதேசத்தில் உள்ளது அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம். அங்கு ஒரு நல்ல மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆம், அங்கு கடந்த மாதம் நடைபெற்ற‌ மாணவர் பேரவைத் தேர்தலில், முதன்முறையாக மூன்று மாணவிகள் பேரவை நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் பழமையான மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஒன்று அது. 1875-ம் ஆண்டில் சர் சையது அகமது கான் என்பவரால் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் முஸ்லிம் கலாச்சாரம் நிறைந்தது. தலையில் தொப்பி, தாடி மற்றும் ஷெர்வானி உடை என ஆன்மீகத் தோற்றத்தில் ஆங்கில வகுப்புகளுக்குச் செல்லும் முஸ்லிம் மாணவர்களைச் சாதாரணமாகப் பார்க்கலாம்.

கண்கள் மட்டும் தெரியும் வகையில் பர்தா அல்லது தலைக்கு மட்டும் முக்காடு இட்டபடி பல மாணவிகளும் வெளியூர்வாசிகளை ஆச்சரியப்படுத்து கின்றனர். அதேபோல, முஸ்லிம்கள் அதிகம் பயிலும் இதன் மாணவர் பேரவைத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நிர்வாகிகளான டாக்டர் ஜாகீர் உசைன், ஆரீஃப் முகம்மது கான், ஆசம்கான், சாஹிப் சிங் வர்மா உட்பட பலர் பிராந்திய, தேசிய அரசியலில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். இதனால், ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடும் மாணவர்கள் தனிச்சிறப்பைப் பெற்றிருப்பது உண்டு.

பேரவையாக மாறிய மேடை

பல்கலைக்கழகத்தின் ஆரம்ப நாட்களில் அதன் நிறுவனர் சர் சையது அகமது கான், மாணவர்களுக்காக‌ ‘விவாத மேடை’ ஒன்றை ஏற்படுத்தியிருந்தார். இதில், பல மாணவர்கள் கலந்துகொண்டு பல்கலைக்கழகம், மாணவர்களின் முன்னேற்றம் ஆகியவை குறித்து தங்களின் கருத்துகளை துணைவேந்தரை வைத்துக்கொண்டு விவாதிப்பதுஉண்டு.

இது நவீன காலங்களில் மாணவர் பேரவையாக உருவெடுத்து அதற்குத் தேர்தலும் நடைபெறத் தொட‌ங்கின. அதில், ‘விவாத மேடை’ காலத்தில் இருந்த‌ நடைமுறைகளே இப்போதும் பின்பற்றப்படுகின்றன. உதாரணமாக, பிரச்சாரத்தின் இறுதி நாளில் அனைத்து வேட்பாளர்களும் பல்கலை மாணவர் பேரவை அரங்கில் இறுதி உரையாற்றுவார்கள்.

இதில் மாணவர், ஆசிரியர் மற்றும் நிர்வாகம் குறித்த பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி அளிக்கப்படும் ஆவேச உரையைக் கேட்க ஆயிரக்கணக்கில் மாணவர்கள் குவிவது உண்டு. இதுவும் துணைவேந்தர் முன்னிலையில் அவரையும் விமர்சிக்கும் பேச்சுக்களை மாணவர்கள் ரசித்துக் கேட்பது வழக்கம். அதேபோல, தேர்தலில் வெற்றி பெற்றவ‌ர்களுடன், தோல்வி பெற்ற மாணவர்களும் நன்றி உரை மற்றும் தாங்கள் செய்ய விரும்புவதை முன் வைப்பார்கள்.

இது முஸ்லிம் பல்கலைக்கழகம் என்பதால் இந்த உரைகள் பெரும்பாலும் உருது மொழியில்தான் இருக்கும். இதனால், இந்தி மற்றும் ஆங்கிலம் அறிந்தாலும், உருது மொழி அறிந்திருத்தல் மட்டுமே போட்டியிடும் முக்கியத் தகுதியாகக் கருதப்படுகிறது. உருது அறியாதவர்கள் போட்டியிட்டால் அவருக்குப் பேசவரவில்லை என வாக்குகள் கிடைப்பதில்லை.

முன்னுதாரணமான தேர்தல்

இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாடப் பிரிவுகளில் சுமார் 37 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில், வாக்குரிமை பெற்ற 17 ஆயிரம் மாணவர்களில் 70.46 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை அளித்துள்ளனர். நாட்டின் மற்ற கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் நடைபெறும் தேர்தலைப் போன்ற சூழலை இங்கு பார்க்க முடியாது.

தாரை, தப்பட்டை, மேளதாளம், ஆட்டங்களுக்கு இவர்கள் இடமளிப்பதில்லை. அரசியல் கட்சிகளுக்கும், கட்அவுட் மற்றும் சுவரொட்டிகளுக்கும் இங்கு வேலை இல்லை. அரசியல் கட்சிகளின் மாணவர் பிரிவுகள் இங்கில்லை. இப்படி மற்ற கல்லூரி, பல்கலைக் கழகங்களில் நடைபெறும் மாணவர் தேர்தலுக்கு இங்கு நடைபெறும் தேர்தல் முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

இந்தக் காரணங்களால் டெல்லியின் ஜவாஹ‌ர்லால் நேரு மற்றும் டெல்லி பல்கலைக்கழகங்களில் நடைபெறும் தேர்தலுக்கான முக்கியத்துவம் அலிகருக்குக் கிடைப்பதில்லை. ஆனால், கடந்த அக்டோபர் 9‍-ம் தேதி நடைபெற்ற அலிகர் பல்கலை மாணவர் பேரவைத் தேர்தல் திடீரென பிரபலமடைந்து முக்கியத்துவம் பெற்றது. இதற்கு, அதன் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்குப் போட்டியிட்ட, சதப் ரசூல், லபீபா ஷெர்வாணி மற்றும் கஜாலா அகமது ஆகிய மூன்று மாணவிகள் முதன் முறையாக வென்றதே காரணம்.

பேரவைக்குத் தேர்வான பெண்கள்

“மற்ற பல்கலைக்கழகங்களை விட அலிகரில் மாணவிகள் போட்டியிடுவது மிகவும் கடினம். ஏனெனில், இங்குள்ள முஸ்லிம் கலாச்சாரம் காரணமாக மாணவர்களுக்கு இணையாக மாணவிகளால் பிரச்சாரம் செய்ய முடிவதில்லை. இதற்கு அவர்களின் பர்தா முறை உட்படப் பல்வேறு காரணங்கள் உண்டு” என்கிறார் இங்கு மறையியல் ஆய்வு மாணவி கைக்காஷான் கானம்.

“தற்போது, பட்டமேற்படிப்பு மாணவர்கள் பேரவையிலிருந்து பல்கலையின் கீழ் இயங்கும் மாணவிகள் பட்டப்படிப்புக் கல்லூரிக்குத் தனியாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. இவை இரண்டும் ஒன்றாக இருந்தபோது, ஒருமுறை தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட மாணவிகளால் வெல்ல முடியாமல் போனது. கடந்த தேர்தலில் முதன்முறையாக நான் செயற்குழு உறுப்பினராகப் போட்டியிட்டு வென்றேன். ஆனால், இந்தமுறை ஒரே சமயத்தில் மூன்று மாணவிகள் வென்றிருப்பது ஆச்சரியமான விஷயம்” என்பவர், இந்தத் தேர்தலில் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இத்தனைக்கும் இவர் கடந்த தேர்தலில் செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்ற ஒரே மாணவி. இந்தப் பதவிக்குப் போட்டியிட்ட முதல் மாணவியாக ஜெஹரா நக்வீ கருதப்படுகிறார். அது நடந்தது 1953‍-ம் ஆண்டு! ஆனால் அதன் பிறகு மாணவிகள் பெருமளவில் போட்டியிட முன்வரவில்லை.

கண்கள் மட்டும் தெரியும்படி பர்தா அணியும் கைக்காஷானை, அடிக்கடி பார்ப்பவர்கள் மட்டுமே பர்தாவுடன் அடையாளம் காண முடியும். இதனால் இவர் ஒரே சமயத்தில் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யலாம் என பல்கலை மாணவர்களிடையே கிண்டலுக்கு ஆளானார். அதாவது, இவரைப் போல பர்தா அணிந்து இவர் பெயரில் பிரச்சாரம் செய்தால் கண்டுபிடிக்க முடியாது என்பது அதன் பொருள் ஆகும்.

மாணவர்கள்போல 3 அல்லது 4 பேர் ஒரே பைக்கில் தொற்றிக்கொண்டு கோஷமிட்டபடி ஊர்வலமாகச் செல்ல மாணவிகளால் முடியாது. பெண் என்றாலே அடக்கம், அமைதி, பர்தாவுடன் கோஷா என்ற கட்டுப்பாடுகளுக்கு இடையே பிரச்சாரம் செய்ய வேண்டி இருந்துள்ளது. எனினும், இவர்களுக்காக மாணவர்களே பதாகைகள் ஏந்தி அதிகமாகப் பிரச்சாரம் செய்ய வேண்டியதாயிற்று.

வெற்றி பெற்ற மாணவி சதப் ரசூல் கூறும்போது, “இங்கு பல மாணவர்கள் விடுதிகளில் தங்கிப் படிப்பவர்கள். இதனால், மாணவிகள் விடுதிகளின் உள்ளே நுழைந்து மையப் பகுதியில் நின்று பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆனால், முதன்முறையாக மாணவிகளும் போட்டியிட்டதால் அவர்களுக்கு மாணவர்கள் விடுதிகள் நுழைந்து பிரச்சாரம் செய்ய அனுமதி கிடைக்கவில்லை.

எனினும் வழக்கத்திற்கு மாறாக மாணவிகள் போட்டியிட மாணவர்களின் ஆதரவு பெருகியுள்ளது. இந்த வருடம் மாணவிகளுக்கான புதிய தொட‌க்கமாக இருப்பதால் வரும் ஆண்டுகளில் தேர்தலில் வெற்றி பெறும் மாணவிகளின் எண்ணிக்கை மாணவர்களை மிஞ்சும் என்று நம்புகிறோம்” என்றார்.

அந்த நம்பிக்கை நிஜமாகட்டும் தோழி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in