

உலகில் கின்னஸ் சாதனைகளுக்குப் பஞ்சமே இல்லை. கின்னஸ் சாதனையாக இதைத்தான் படைக்க வேண்டும் என்று எந்த வரையறையும் கிடையாது. வங்கதேசத்தைச் சேர்ந்த ரசெல் இஸ்லாம் என்கிற இளைஞர் ஸ்கிப்பிங்கில் புதிய சாதனை படைத்திருக்கிறார். ஸ்கிப்பிங் செய்வதெல்லாம் ஒரு சாதனையா என்று நீங்கள் நினைக்கலாம். வழக்கமாக நாம் செய்யும் ஸ்கிப்பிங் போன்று இவர் செய்வதில்லை. பம் ஸ்கிப்பிங் (Bum skipping) என அழைக்கப்படும் தரையில் அமர்ந்தபடி ஸ்கிப்பிங் செய்து சாதனை புரிந்திருக்கிறார். 30 நொடிகளில் 117 முறை இப்படி ஸ்கிப்பிங் செய்து கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். இவருடைய ஸ்கிப்பிங் சாகச வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.
வாட்ஸ் அப் வாக்கெடுப்பு: காலையில் கண்விழிப்பதில் தொடங்கி இரவில் உறங்கச் செல்லும் வரை வாட்ஸ் அப்பில் நேரத்தைச் செலவிடுவோர் அதிகம். வாட்ஸ் அப்புக்கு உள்ள இந்த வரவேற்பின் காரணமாக அதில் புதிய அப்டேட்கள் அவ்வப்போது வெளியாவது வழக்கம். அந்த வகையில், வாட்ஸ் அப் குழுக்களில் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த தலைப்புகளில் கருத்துக்கணிப்புகளை உருவாக்க அனுமதிக்கும் அப்டேட் வெளியாகவுள்ளது. இந்த அப்டேட் ஐஓஎஸ், ஆண்ட்ராய்ட், டெஸ்க் டாப் என அடுத்தடுத்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கேள்விகளும் பதில்களும் முழுவதும் என்கிரிப்ட் செய்யப்பட்டதாக இருக்கும். குழுவில் உள்ளவர்கள் மட்டுமே வாக்கெடுப்பையும் முடிவுகளையும் பார்க்க முடியும்.
கார் மனிதர்: புதிய பொருட்களை அடிக்கடி வாங்குவதில் சிலர் ஆர்வம் காட்டுவார்கள். இந்த விஷயத்தில் புரூணே மன்னர் ஹசன்னல் போல்கியோ அதற்கும் மேலே என்று சொல்லும் அளவுக்கு நடந்துக்கொள்பவர். அவர் அடிக்கடி புதிய கார்களை வாங்கக் கூடியவர். புதிதாகச் சந்தைக்கு வரும் காரை இவருக்குப் பிடித்துவிட்டால், உடனே 100 கார்களை வாங்கி விடுவாராம். 1967ஆம் ஆண்டு முதல் புரூணேவை ஆண்டுவரும் இவரிடம் மொத்தம் ஏழாயிரம் கார்கள் இருக்கின்றனவாம். இவர் வைத்துள்ள கார்களின் மதிப்பு மட்டுமே 500 கோடி அமெரிக்க டாலர்களைத் தாண்டும். அந்த அளவுக்கு கார் மீது இவருக்கு கொள்ளை ஆசை. இதனால், உலகிலேயே அதிக கார்களை வைத்திருக்கும் நபர் என்கிற புகழுக்கும் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். என்னதான் கார் மீது ஆசை இருந்தாலும், எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் ஓட்ட முடியுமா?