

கிரிக்கெட்டில் சாதனை மேல் சாதனை படைத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ட்விட்டரிலும் புதிய சாதனையைச் சத்தமில்லாமல் படைத்திருக்கிறார். ட்விட்டரில் அப்படி என்ன சாதனை படைத்தார் என்று கேட்பது தெரிகிறது. ட்விட்டரில் ஐந்து கோடிப் பேர் பின்தொடரும் விளையாட்டு நட்சத்திரமாக கோலி உருவெடுத்திருப்பதுதான் அந்தச் சாதனை. இந்தியாவில் இந்தச் சாதனையைப் படைத்த முதல் விளையாட்டு வீரர் இவர்தான். உலக அளவில் மூன்றாவது வீரராகவும் உள்ளார்.
முதல் இரு இடங்களில் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோலை 10.3 கோடிப் பேரும் கூடைப்பந்து வீரர் லெப்ரானை ஜேம்ஸை 5.2 கோடிப் பேரும் ட்விட்டரில் பின்தொடர்ந்துவருகிறார்கள். இதேபோல இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் விராட் கோலியை 20 கோடிப் பேர் பின்தொடர்கிறார்கள். இதன்மூலம் கிரிக்கெட் வீரர்களிலேயே அதிகம் பேரால் பின்பற்றப்படுபவர் என்கிற பெருமையும் விராட் கோலிக்குக் கிடைத்துள்ளது. கிரிக்கெட்டில் ‘கிங் கோலி’ என்கிற செல்லப் பெயர் அவருக்கு உண்டு. இப்போது கிரிக்கெட்டில் மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களிலும் ‘கிங்’ ஆகியிருக்கிறார்.