இது டாய் ஃபிரெண்ட் அல்ல.. பாய் ஃபிரெண்ட்!

இது டாய் ஃபிரெண்ட் அல்ல.. பாய் ஃபிரெண்ட்!
Updated on
1 min read

“இது பெங்களூருவில் உள்ள நம்பகமான ஓர் இணையதளம். நாங்கள் ஆண் நண்பர்களை நாள் அடிப்படையில் வாடகைக்கு வழங்குகிறோம்” - இப்படி கோக்குமாக்காகத் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்கிறது ‘டாய் பாய்’ என்கிற ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம். பெங்களூருவில் உள்ள பொறியியல் பட்டதாரிகள்தாம் இதற்கான செயலியை வடிவமைத்திருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களை மையப்படுத்தி அளிக்கப்பட்டுள்ள இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டுவருகிறது. இதன் பின்னணி என்ன? தகவல் தொழில்நுட்பத் துறை அதிகப்படியான பணிச்சுமையும் சவால்களும் நிறைந்த ஒரு துறை. இதில் பணிபுரிபவர்கள் மணிக்கணக்கில் மன அழுத்தத்துடன் வேலை செய்ய வேண்டியிருக்கும். இந்த அழுத்தங்களிலிருந்து வெளிவர முடியாமல் வேலையைத் துறப்பவர்களும் உண்டு.

ஆனால், பெரும்பாலானோர் பணிச் சூழலால் ஏற்படும் அழுத்தத்திலிருந்து விடுபட ‘வீக் எண்ட்’டைச் சிறப்பாக அனுபவிப்பார்கள். அருகில் உள்ள பிடித்த இடங்களுக்குச் செல்வது, திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பது, ரிசார்ட்டில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் நேரத்தைக் கழிப்பது, இவ்வளவு ஏன் பப்களுக்குச் சென்றும் தங்களை ரிலாக்ஸ் செய்துகொள்வதுண்டு.
பணிச் சூழலால் ஏற்படும் மன அழுத்தம் ஒரு புறம் இருக்க, காதல் பிரேக் அப், லிவிங் டூ கெதரில் சிக்கல், மண முறிவு போன்ற புறக் காரணிகளாலும் அழுத்தங்களோடு பணியாற்றுவோரும் உண்டு. இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து ஆண்கள் குறுகிய காலத்தில் வெளியே வந்துவிட்டாலும், பெண்கள் பல்வேறு உளவியல் சிக்கலுக்கு ஆளாவதுண்டு. இவர்களைக் குறிவைத்தே இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ‘டாய் பாய்’ என்கிற செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

தனித்து வாழும் பெண்கள் தங்கள் சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்ள நேர அடிப்படையில் ஆண் நண்பர்களை இந்தச் செயலி மூலம் வாடகைக்கு வைத்துக்கொள்ளலாம் என்று பகீர் கிளப்புகிறார்கள். மேலை நாடுகளில் இதுபோன்ற சேவைகள் இருக்கின்றன. அதைத்தான் இங்கும் கடைவிரித்திருக்கிறார்கள். நம்முடைய பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ள, காதுகொடுத்து கேட்க ஒருவர் இருக்கிறார் என்றாலும், நமக்குப் பரிச்சயமில்லாத அந்நிய நபர் ஒருவரிடம் எல்லாவற்றையும் எப்படிப் பகிர்ந்துகொள்வார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது. இதுபோன்ற சேவைகளில் பெண்களைவிட வயது குறைந்தவர்களே ‘டாய் பாய்’ ஆக இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதுபோன்ற ஆப்களால் ஒரு பிரச்சினையிலிருந்து வெளியேற நினைத்து வேறொன்றில் சிக்கிக்கொள்ளவும் நேரிடலாம்; இணையவெளியில் முன்பின் அறியாத நபர்களிடத்தில் பழக வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் இதுபோன்ற சேவைகள் ஆபத்தில் முடியலாம் என்று அபாய சங்கும் ஊதப்படுகிறது.
தற்போது இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்தச் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள முடியுமாம். விரைவில் மற்ற நகரங்களுக்கும் இந்த ‘கான்செப்ட்டை’ கொண்டுசெல்ல முடிவு செய்துள்ளதாகக் கூறுகிறார்கள் ‘டாய் பாய்’ நிறுவனத்தினர். ரைட்டு, பிரச்சினை புல்லட்டில் வருது!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in