

இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்துக்கு ‘யூடியூப் கிராமம்’ என்றே பெயர் சூட்டிவிட்டார்கள். அந்தக் கிராமம் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது. துள்சி என்கிற கிராமம்தான் ‘யூடியூப் கிராமம்’ என்கிற திருநாமத்தைப் பெற்றிருக்கிறது. இதற்குக் காரணம் இந்த ஊரில் ஏராளமானோர் யூடியூப் அலைவரிசையை நடத்திவருவதுதான். மூன்றாயிரம் பேர் வசிக்கும் இந்தக் கிராமத்தில், பாதிக்கும் மேற்பட்டோர் யூடியூப் அலைவரிசைகளோடு தொடர்பில் இருப்பவர்கள். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சுக்லா, ஜெய் வர்மா ஆகிய இரண்டு இளைஞர்கள் அரசுப் பணியை விட்டுவிட்டு, யூடியூப் அலைவரிசையைத் தொடங்கி அதிக வருமானம் ஈட்டினர். இதைக் கண்டுதான் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பலரும் யூடியூப் அலைவரிசைகளைத் தொடங்கினார்கள். இந்தக் கிராமத்துக்கு சென்றால் பலரும் கேமராவும் கையுமாகச் சுற்றுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
சிரிக்கும் இயந்திரம்: மனிதர்களுக்குப் பதில் மனித இயந்திரங்களை வேலை செய்யவைக்கும் ஆராய்ச்சிகள் ஜப்பானில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. அதற்கேற்ப ஏற்கெனவே ‘ஹுமனாய்ட் ரோபோ’க்கள் எனப்படும் மனித ரோபாட்கள், மனிதர்களைப் போலவே யோசிக்கவும் பேசவும் செயல்படவும் வடிவமைக்கப்பட்டுவருகின்றன.
அதில் ஆராய்ச்சியாளர்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியிருக்கிறார்கள். மனிதர்களைப் போலவே சிரிக்கும் ரோபாட்டை ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு உருவாக்கியுள்ளது. சூழலுக்கு ஏற்ப மாறுபட்ட சிரிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த ரோபாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பேசும் ரோபாட்டுக்கு சோபியா என்ற பெயரிட்டவர்கள், சிரிக்கும் ரோபாட்டுக்கு எரிகா என்று பெயரும் சூட்டியுள்ளனர்.
சும்மா வந்தால் சம்பளம்: சும்மா இருந்தால் யாராவது காசு கொடுப்பார்களா? ஆனால், ஜப்பானில் ஒருவர் சும்மா இருப்பதற்காகச் சம்பளம் வாங்கிவருகிறார். அந்த அதிர்ஷ்டக்கார நபரின் பெயர் சோஜி மோரிமோட்டோ. 38 வயதான அவர், ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் இருக்கிறார்.
நண்பர்கள் இல்லாமல் தனியாக சினிமா, ஷாப்பிங், ஹோட்டல் செல்ல சிலருக்குப் பிடிக்காது. அப்படிப்பட்டவர்கள் சோஜியை ஆன்லைன் மூலம் தொடர்புகொண்டு அழைத்தால் போதும். உடன் வருவார். நண்பரைப் போலவே உடன் சுற்றுவார். அப்படி உடன் வருவதற்கு இந்திய மதிப்பில் ரூ. 5 ஆயிரத்துக்கு மேல் சம்பளமாகப் பெறுகிறாராம். இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுடன் துணைக்குச் சென்றுள்ள சோஜியின் இந்தப் பணி ஜப்பானில் பேசுபொருள் ஆகியிருக்கிறது.