10 ஆண்டுகள்; 10 மாற்றங்கள்

10 ஆண்டுகள்; 10 மாற்றங்கள்
Updated on
3 min read

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இன்று இல்லை. தொழில்நுட்ப பாய்ச்சல்களாலும் விதவிதமான ஸ்டைல்களாலும் இளைஞர்களின் வாழ்க்கை முறை மாறியிருக்கிறது. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களில் சில இவை:

திறன்பேசி: இருபது ஆண்டு களுக்கு முன்பு பேஜர் என்கிற குறுஞ்செய்திக் கருவியிலிருந்து தொடங்கிய தொலைத்தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி திறன்பேசியாகப் பரிணமித்துவிட்டது. திறன்பேசி இல்லாத இளைஞர்கள் இன்று கிடையாது என்றாலும், அதை ஒட்டிப் பிறந்த குழந்தையைப் போல அவர்கள் பாவிக்கின்றனர்.

சமூக வலைத்தளங்கள்:பத்து ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளங்கள் அறிமுக நிலையில் இருந்தன. இன்றோ அது தனிமனித வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டது. ஒரு நாளின் பெரும் பகுதியை இளைஞர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில்தான் செலவிடுகின்றனர். இணையவெளியில் அவர்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது.

ஆன்லைன் ஷாப்பிங்: ‘கையில காசு; வாயில தோசை’ என்கிற சொலவடையே இன்று காணாமல் போய்விட்டது. கையில் காசு இல்லாமல் நினைத்த ஷாப்பிங்கை முடிக்க முடிகிறது. அதற்குப் பாதை அமைத்துக் கொடுத்திருக்கின்றன ஆன்லைன் ஷாப்பிங்கும் டிஜிட்டல் பரிவர்த்தனையும். இதற்காகவே விதவிதமான பணப் பரிவர்த்தனை செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் குவிந்து கிடக்கின்றன.

கூகுள் மேப்: ஒரு நொடிக்குள் உலக உருண்டையின் ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்துக்கு கூகுள் மேப்பின் உதவியால் தாவிச் செல்ல முடிகிறது. கூகுள் மேப்பின் உதவியின்றி இன்று பயணங்கள் இல்லை என்றாகிவிட்டது. ஸ்ட்ரீட் வியூவ்கள் நம் வீட்டையே ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் அளவுக்கு அதன் வளர்ச்சி விரிவடைந்திருக்கிறது.

ஸ்மார்ட் வாட்ச்: பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை நேரம் பார்க்க மட்டுமே பயன்பட்டுவந்த கைகடிகாரங்கள் இன்று ஸ்மார்ட் வாட்ச்களாக இளைஞர்களைப் பற்றிக்கொண்டிருக்கின்றன. திறன்பேசியில் உள்ள பல அம்சங்கள் ஸ்மார்ட் வாட்ச்களிலும் வந்துவிட்டன. கூடவே நம் உடல்நலனையும் கண்காணிப்பதால், அதன் மீது பெரியவர்களுக்கும் ஈர்ப்பு வந்துவிட்டது.

கேமிங்: வீடியோ கேம்கள் புதிதல்ல. பல இடங்களிலும் பிளே ஸ்டேஷன்கள் நிறுவப்பட்டு விளையாடப்பட்டுவந்தன. கணினியும் இணையமும் கைகோத்த பின்னர் பிளே ஸ்டேஷன்கள் காணாமல் போய், இணைய விளையாட்டுகள் வேகமெடுத்தன. இன்று ஆன்லைன் விளையாட்டுகள் பல இளைஞர்களையும் அடிமையாக்கி வைத்துள்ளன.

புளூடூத்: ஹெட் செட்கள் நீண்ட காலமாகவே உபயோகத்தில் இருப்பவைதான். நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியில் அதுவும் மாறி, கழுத்துப் பட்டை புளூ டூத்கள், வயர்லெஸ் புளூ டூத்கள் என்று பரிணாமம் பெற்றுவிட்டன.

பைக்: இன்றைய இளைஞர்கள் இறக்கைக் கட்டிக்கொண்டு பறக்க ஆசைப் படுகிறார்கள். அவர்களைக் குறிவைத்தே புதிய பைக்குகளும் வந்தவண்ணம் உள்ளன. 80 சிசி இன்ஜினில் உருட்டிச் சென்றவர்கள், இப்போது 250சிசி திறன் கொண்ட வாகனங்களில் பறக்கத் தொடங்கிவிட்டனர். அதனால், விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

டாட்டூக்கள்: பச்சை குத்திக்கொள்வது பழைய வழக்கம்தான். ஆனால், இன்று டாட்டூ என்கிற பெயரில் அதன் வடிவம் மாறிவிட்டது. மேல்தட்டு இளைஞர்கள் மட்டுமன்றி நடுத்தரக் குடும்பத்து இளைஞர்களும் பெண்களும் தங்கள் உடல் முழுவதும் டாட்டூக்களை வரைந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

பென்டிரைவ்: 1.44 எம்.பி அளவில் ஃபிளாப்பி டிஸ்க்கில் கோப்புகளைச் சேகரித்த முறை, பின்னர் 700 எம்.பி சிடியாக மாற்றம் கண்டது. இப்போது இந்த இரண்டும் வழக்கொழிந்து சுண்டுவிரல் அளவேயுள்ள பென் டிரைவ் அல்லது தம்ப் டிரைவ்வாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்த விரலடக்கக் கருவியை எப்போதும் கையிலேயே வைத்திருக்கிறார்கள் இந்தக் கால இளைஞர்கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in