இளைஞர்களைத் துள்ளவைத்த 10 பாடல்கள்

இளைஞர்களைத் துள்ளவைத்த 10 பாடல்கள்
Updated on
3 min read

‘தீப்பொறி திருமுகம்’ போல எது செய்தாலும் இளைஞர் உலகம் நம்மை உற்றுப்பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இளைஞர்களை மையப்படுத்தி இசை மீட்டும் இசையமைப்பாளர்கள் இருக்கவே செய்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் நம் இளைஞர்களின் மொபைல் போன்களின் ரிங்டோனிலும் காலர் டியூனிலும் பல பாடல்கள் இடம்பிடித்தன. இளைஞர்களை ‘வைப்ரேஷன்’ நிலையிலேயே வைத்திருந்த 10 யூத்ஃபுல் பாடல்களைக் கேட்போம், சாரி படிப்போம். (இது தரவரிசைப் பட்டியல் அல்ல)

பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிய தங்கிலீஷ் பாடல்; இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பலரையும் வெறிபிடிக்கவைத்தது. 2012இல் வெளியான ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல், யூடியூபில் 56 கோடிப் பார்வைகளைப் பெற்றது. அந்தப் பாடலின் வரியை டி ஷர்ட்டில் அச்சிட்டு அலப்பறை செய்தவர்களும் உண்டு.

ஊர்த் திருவிழாக்களில் கட்டாயம் இடம்பிடிக்கும் இந்தப் பாடல், கன்னியரைக் கவர காளையர்களின் காதலுக்குத் தூதுபோகும் விதமாக அமைந்தது. ரிப்பன், அப்பன்; பொம்மி, மம்மி என்று ரைமிங் வரிகளோடு கலர்ஃபுல்லாக அமைந்தது. 2013இல் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்தில் இடம்பெற்ற ‘ஊதா கலரு ரிப்பன்’ பாடல் யூடியூபில் 1.8 கோடிப் பார்வையாளர்களை முணுமுணுக்க வைத்தது. இதே படத்தில் இடம்பெற்ற ‘என்னம்மா இப்படிப் பண்ணுறீங்களேம்மா..’ பாடலும் இளைஞர்களின் தேசிய கீதமானது.

மெட்ராஸ் பாஷையில் புள்ளிங்கோக்களைப் புல்லரிக்கவைத்து, கிராபிக்ஸில் கலக்கியது ‘ஐ’ படத்தில் இடம்பிடித்த ‘நான் மெர்சலாயிட்டேன்..’ பாடல். 2015 இல் வெளியான இப்பாடலுக்குப் பிறகு காதலியின் நினைவில் லுங்கிபோல் நைட்டியை அணிந்து ரவுசு காட்டினார்கள் பல ராக்ஸ்டார்கள். யூடியூபில் 5.4 கோடிப் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது இப்பாடல்.

விழாக்கள் எதுவாக இருந்தாலும் எல்லா வயதினரையும் டண்டணக்கா போட்டு தெறிக்கவிட்ட பாடல் இது. வியாபாரிகள் நடத்தும் விழாக்களிலும் ஆட்டோ ஓட்டுநர்களின் ஆயுதபூஜை கொண்டாட்டங்களிலும் அமுதகானமாக ஒலிக்கும் பாடல் இது. இளசுகளின் ரிங்டோனில் கெத்து காட்டிய இப்பாடல், யூடியூபில் 10.9 கோடிப் பார்வைகளைப் பெற்றுள்ளது. அது 2015இல் வெளியான ‘வேதாளம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆலுமா டோலுமா’ பாடல்தான்.

சுபகாரியங்கள் என்றால் கட்டாயம் இந்தப் பாடல் ஒலிக்க வேண்டும் என்கிற நிலையை ஏற்படுத்தியது ‘மேயாத மான்’ படத்தில் இடம்பெற்ற ‘எங்க வீட்டு குத்து விளக்கு..’ பாடல். சென்னை வட்டார வழக்கில் இளசுகளைக் குத்தாட்டம் போட வைத்தது இப்பாடல். வசன நடையில் இருந்தாலும் ஆயிரம் பொற்காசுக்கு ஆசைபட்ட தருமிபோல் குஷியாகி டிக்டாக்கில் பலரையும் பாடாய்படுத்திய பாடல் இது. யூடியூபில் 5.7 கோடிப் பார்வைகளை மேயவிட்டது இப்பாடல்.

காலில் ஷூ மாட்டலாம்; கையில் எப்படி மாட்டுவது என்று யோசிக்கக்கூட விடாமல் செய்தது 2018இல் வெளியான ‘மாரி 2’ படத்தின் ‘ரவுடி பேபி..’ பாடல். நடன அசைவில் அனைவரது உள்ளங்களையும் கொள்ளைகொண்ட இப்பாடல், அகிலத்தையும் அலறவைத்தது. யூடியூபில் 140 கோடிப் பார்வையாளர்களைக் குத்தாட்டம் போடவைத்து என்றால் சும்மாவா!

2019 தொடக்கத்தில் ஒரு குத்துப் பாடலைப் போல பட்டையைக் கிளப்பியது, ‘பேட்ட’ படத்தில் வெளியான ‘மரண மாஸ்..’. மொழி தெரியாதவர்களையும்கூட ஆட வைத்த இப்பாடல், யூடியூபில் 21 கோடிப் பார்வைகளைப் பெற்று மாஸ் காட்டியது.

2021 இல் சிஷ்ய பிள்ளைகள் வாத்தியாரை வாழ்த்திய பாடல் இது. சிம் கார்டு சிறிது என்றாலும் செல்போன் பெரிது என்பதுபோல் சில வரிகள் இருந்தாலும் இசையால் எல்லோரையும் தாளம்போட வைத்தது. கல்லூரியில் ‘காப்பி’ ஆற்றியவர்கள் எல்லாம் வாத்தியார்களின் புகழ் பாடினர். யூடியூபில் 39 கோடிப் பார்வைகளைப் பெற்று பேயாட்டம் போடவைத்த அப்பாடல், ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்..’.

2021இல் வெளியான இன்னொரு துள்ளலான பாடல் இது. கல்யாண கச்சேரியில் மணமக்களை ஆட்டம்போடத் தூண்டும் உற்சாக கானம். ஒரு ஸ்டெப்பில் உல்லாச டான்ஸில் உலகம் தொட்ட பாடல். சுட்டிகள் முதல் பாட்டிகள் வரை ‘நாட்டி’யாக டான்ஸ் ஆட வைத்து இன்றும் சமூக வலைதளத்தில் டிரெண்டிங்கில் இருக்கிறது. ‘ஜகமே தந்திரம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஹே ரகிட ரகிட ரகிட..’ பாடல் யூடியூபில் 7.9 கோடிப் பார்வைகளைப் பெற்று அசத்தியது.

இசைக்கு மொழி கிடையாது என்று சொல்வதற்கு எடுத்துக்காட்டாக 2022இல் புரியாத வரியில் வெளியான பாடல் இது. வயது வித்தியாசமின்றி அனைவரையும் ஆடவைத்த பாடலும்கூட. யூடியூபில் 47 கோடிப் பார்வையாளர்களை அரபிக் குத்து போட வைத்தது ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ‘மலம பித்தா பித்தா தே’.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in