

அப்போது எனக்கு 14 அல்லது 15 வயது இருக்கலாம். ஒரு நாள் அரியலூர், மோகன் கஃபேயில் ஐம்பது பைசாவுக்கு ரவா தோசை சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தேன். கொஞ்சம் கூடுதல் காசிருந்தால் கேசரியும் வெங்காய பஜ்ஜியும் சாப்பிட்டிருக்கலாம். ‘கடவுள் நம்மை இப்படி வறிய (?) நிலையில் வைத்திருக்கிறாரே…’ என்று வேதனையுடன் நடந்தபோது, ஒரு லாட்டரி சீட்டுக் கடை வாசலில் அந்த போர்டைப் பார்த்தேன். ‘ராஜஸ்தான் பம்பர் குலுக்கல்: முதல் பரிசு நூறு பேருக்கு, தலா ஒரு லட்ச ரூபாய்’ என்று எழுதியிருந்ததைப் பார்த்தவுடன் நின்றுவிட்டேன்.
எனக்கு லேசாகச் சபலம் தட்டியது. நூறு பேருக்கு முதல் பரிசு. பிராபப்ளிட்டி தியரியை அப்ளை பண்ணிப் பார்த்ததில், நூறு பேருக்கு முதல் பரிசு என்பதால், எனக்கு முதல் பரிசு கிடைப்பதற்கான வாய்ப்பு அமோகமாகத் தெரிந்தது. மறுநாள் ஒரு ரூபாய் கொடுத்து, ஒட்டகம் படத்துடன் இருந்த அந்த ராஜஸ்தான் மாநில லாட்டரி சீட்டை வாங்கினேன். ஒரு மாதம் கழித்துதான் குலுக்கல். அந்த ஒரு மாதம்தான், என் வாழ்க்கையின் மகத்தான பகல் கனவு நாட்கள்.
படிப்பதற்குப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தால், புத்தகமெல்லாம் பணமாகத் தெரிந்தது. ஒரு லட்ச ரூபாய் பணம் வந்தவுடன் என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன். முதலில் அல்பத்தனமாக ஒரு லட்ச ரூபாயில் மோகன் கஃபேயில் இரண்டு லட்சம் ரவா தோசை சாப்பிடலாம் என்று தோன்றியது. நாட்கள் செல்லச் செல்ல ஆக்கபூர்வமான பகல் கனவு காண ஆரம்பித்தேன். பேசாமல் ஒரு பிசினஸ் ஆரம்பித்து, பணக்காரனாகிவிட்டால் என்ன என்று தோன்றியது.
அச்சமயத்தில், ‘மிஸ்டர் பாரத்’ படத்தில் ரஜினி சிவில் கான்ட்ராக்ட் எடுத்து, சீக்கிரமே பணக்காரனாகியிருந்தார். எனவே நான் ‘சுரேந்தர் & பிரதர்ஸ்’ (தம்பிகள் மீதுதான் என்ன ஒரு பாசம்?) என்ற பெயரில் ஒரு கன்ஸ்ட்ரக் ஷன் கம்பெனியை அரியலூரில் ஆரம்பித்தேன். கம்பெனி வளர, எங்கள் அலுவலகத்தை சென்னை, மவுண்ட் ரோடுக்கு மாற்றினேன்.
சென்னை அலுவலகத்தை கமலும், ரஜினியும் ரிப்பன் வெட்டி திறந்து வைக்க, தேவி குத்துவிளக்கு ஏற்றினார். நான் பங்களா கட்டி, நீச்சல் குளத்தில் மிதந்தபடி ரவா தோசை சாப்பிட்டு, க்ளப்பில் ரவா தோசை சாப்பிட்டுக்கொண்டே பில்லியர்ட்ஸ் விளையாடினேன். டாட்டாவின் கம்பெனிகளை நான் மொத்தமாக சிங்கிள் செக்கில் வாங்கி ரிஜிஸ்டர் பண்ணிவிட்டு, அமெரிக்க ஜனாதிபதி ரீகன் எனது பம்பாய் கிளையைத் திறந்துகொண்டிருந்தபோது என் அம்மா கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல், “டேய்… ரேஷன் கடைக்குப் போடா” என்று என்னைத் துரத்திவிட்டார்.
சென்னை அலுவலகத்தை கமலும், ரஜினியும் ரிப்பன் வெட்டி திறந்து வைக்க, தேவி குத்துவிளக்கு ஏற்றினார். நான் பங்களா கட்டி, நீச்சல் குளத்தில் மிதந்தபடி ரவா தோசை சாப்பிட்டு, க்ளப்பில் ரவா தோசை சாப்பிட்டுக்கொண்டே பில்லியர்ட்ஸ் விளையாடினேன். டாட்டாவின் கம்பெனிகளை நான் மொத்தமாக சிங்கிள் செக்கில் வாங்கி ரிஜிஸ்டர் பண்ணிவிட்டு, அமெரிக்க ஜனாதிபதி ரீகன் எனது பம்பாய் கிளையைத் திறந்துகொண்டிருந்தபோது என் அம்மா கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல், “டேய்… ரேஷன் கடைக்குப் போடா” என்று என்னைத் துரத்திவிட்டார்.
குலுக்கல் தினத்தன்று படபடப்புடன் செய்தித்தாளில் ரிசல்ட்டைப் பார்த்தேன். மிக மிக நம்பிக்கையுடன் முதல் பரிசு விழுந்திருந்த நூறு நம்பர்களையும் பார்த்தேன். எப்படி என் நம்பர் விடுபட்டுப்போனது என்று தெரியவில்லை. சரி இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசாவது விழுந்திருக்கிறதா என்று ஏக்கத்துடன் பார்த்தேன். கடைசியில் ஆறுதல் பரிசான பத்து ரூபாய் வரை பார்த்தேன். ம்ஹும்… எனக்கு அழுகை வருவது போல் ஆகிவிட்டது. ஒரு சிறுவனின் பிரம்மாண்டமான பகல் கனவுகள் உடைந்த நாள் அது.
சிறு வயதில் நான் மட்டும்தான் இப்படிப் பகல் கனவு கண்டேனா என்று நண்பர்களிடம் விசாரித்தால், எனக்கு அண்ணன்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஒருவன் பகல் கனவில், ஜனாதிபதியானான். இன்னொருவன் 1990-களில் சச்சின் டெண்டுல்கருக்கு கம்பெனி கொடுக்க இந்திய அணியில் சரியான பேட்ஸ்மேன் இல்லாததால், வேறு வழியின்றி அவனே இந்திய அணியில் பேட்ஸ்மேன் ஆனான்.
பெண்களிடம் அவர்களின் பகல் கனவு பற்றி விசாரித்தால், அனைவரும் மிகவும் கமுக்கமாக இருக்கிறார்கள். ‘அப்படில்லாம் பெருசா ஒண்ணுமில்ல’ என்று மழுப்புகிறார்கள். ஆனால் அப்போது அவர்கள் கண்கள் விரிய, ரகசியமாகப் புன்னகைப்பதைப் பார்த்தால், ‘இங்கிலாந்து ராணி, நிலாவில் ஊஞ்சல் கட்டி ஆடுவது…’ என்ற ரேஞ்சுக்கு இருக்கும் என்று நினைக்கிறேன்.
இளமைக் காலத்தின் மகத்தான சுவாரஸ்யங்களுள் ஒன்று பகல் கனவு. யாரேனும் ஒருவர் நான் பகல் கனவே கண்டதில்லை என்று சொன்னால் அது பொய். டீன் ஏஜ் பருவம்தான், பகல் கனவுகள் உச்சத்தில் இருக்கும் காலம். பகல் கனவுகளுக்கென்று நாம் தனியாக ஒரு மூலையில் அமர்ந்து யோசிக்க முடியாது. நிறைய தொந்தரவு இருக்கும். எனவே பகல் கனவு காண உகந்த நேரம் படிக்கும் நேரம்தான்.
சாயங்காலம் ஆறு மணிக்குப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு உட்கார்ந்து, அப்படியே பகல் கனவில் ஆழ்ந்தால் பரம சுகம். முகம்மது பின் துக்ளக் தலைநகரை டெல்லியிலிருந்து தவுலதாபாத்துக்கு மாற்றி, மீண்டும் டெல்லிக்கு மாற்றுவதற்குள், நீங்கள் பில் கேட்ஸுக்கு மூன்று வட்டியில் கடன் கொடுத்துவிட்டு, வரும் வழியில் ஒலிம்பிக்கில் 10 தங்கப் பதக்கங்களையும் வாங்கி, மஞ்சள் பையில் போட்டுக்கொண்டு ஊருக்கு வந்துவிடலாம்.
பள்ளியில் ஆசிரியர் வகுப்பெடுக்கும் போது, கடைசி பெஞ்சில் ஜன்னலோரமாக அமர்ந்துகொண்டு, வெளிப்புறத்தைப் பார்க்கும்போது மனதில் வெள்ளம் போல் பெருக்கெடுக்கும் பகல் கனவுகளை உங்களால் தடுக்கவே முடியாது.
சரி பகல் கனவு காண்பது நல்லதா? இது பற்றி உளவியலாளர்கள் பலரும், அது உங்களின் தினசரிச் செயல்பாடுகளைப் பாதிக்காத அளவுக்கு அளவோடு இருந்தால் நல்லது என்கிறார்கள். அது உங்கள் படைப்புத் திறனை அதிகரிக்க உதவும் என்கிறார்கள். ஆனால் அதுவே அளவுக்கு மீறிப் போனால் மனநோயாகிவிடும். ஆனால் லட்சியங்களோடு வாழ்பவர்களுக்கு, பகல் கனவுகள் ஒரு மிகப் பெரிய ஊக்கமாக இருக்கும்.
அப்புறம் சொல்ல மறந்துவிட்டேனே... என்னுடைய அடுத்த புத்தகத்துக்கு நான் நோபல் பரிசு வாங்கிவிட்டேன்!
கட்டுரையாளர், எழுத்தாளர். ‘தீராக்காதல்’, ‘ஆண்கள்” உள்ளிட்ட 13 புத்தகங்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: grsnath71@gmail.com