

கிரிக்கெட்டில் சதங்கள் அடிப்பது அரிதான விஷயமில்லை. உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு வீரர் தினமும் சதம் விளாசிக்கொண்டுதான் இருக்கிறார்.
ஆனால், ஒரு சில சதங்கள் வரலாற்றிலும், அந்தச் சதத்தை விளாசும் வீரரின் கிரிக்கெட் வாழ்க்கையிலும் முக்கிய இடத்தைப் பிடித்துவிடும். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி அண்மையில் விளாசிய சதமும் அந்த ரகத்தைச் சேர்ந்ததுதான்.
கிரிக்கெட்டில் காலம் கடந்தும் பேசப்படும் சதங்கள் மிகவும் குறைவு. கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் முதலும் கடைசியுமாக 1983இல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளாசிய சதம் (175 அவுட் இல்லை) காலங்கள் கடந்தும் வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 34 சதங்களை விளாசியிருந்தாலும், ஒரு நாள் போட்டியில் ஒரு சதம்கூட அடிக்கவில்லையே என்ற ஏக்கத்தோடு இருந்த சுனில் கவாஸ்கர், 1987இல் தன்னுடைய கடைசி சர்வதேச போட்டிக்கு முந்தைய போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக அடித்த சதம் (103 அவுட் இல்லை) அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் முத்தாய்ப்பாக அமைந்தது.
இதேபோல ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்களை விளாசி முதலிடத்தில் இருந்தாலும், 1998இல் சார்ஜாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மணல் புயலுக்கு மத்தியில் சச்சின் டெண்டுல்கர் அதிரடியாக விளாசிய சதம் (143), அவருடைய சிறந்த சதங்களில் ஒன்று.
2001இல் கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஃபாலோ ஆன் ஆன பிறகு விவிஎஸ் லட்சுமணனும் (281 அவுட் இல்லை) டிராவிட்டும் (180) இணைந்து விளாசிய சதங்கள், இந்திய டெஸ்ட் வரலாற்றில் ஆராதிக்கப்படுகின்றன. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அடிக்கப்பட்ட முக்கியமான சதங்களைப் பற்றி இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த வரிசையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அடித்த (122 அவுட் இல்லை) சதத்தையும் நிச்சயம் சேர்க்கலாம்.
ஆனால், அந்த அளவுக்கு இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சதமா என்கிற கேள்வியும் கூடவே எழும். விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையைப் பொறுத்தவரை இது ஒரு முக்கியமான சதம். சரியான தருணத்தில் அடிக்கப்பட்ட சதம்.
கிரிக்கெட்டில் சதம் மேல் சதம் விளாசிய எந்த ஒரு வீரரும் நீண்ட காலம் சதம் அடிக்காமல் இருந்ததில்லை. அதுவும் ஆயிரம் நாட்களுக்கும் மேலாக சதம் அடிக்காமல் இருந்ததில்லை. விராட் கோலிக்கு அப்படி ஒரு இக்கட்டான காலமாக கடந்த 3 ஆண்டுகள் அமைந்தன.
டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தன்னுடைய முதல் சதத்தை அடித்த பிறகு சராசரியாக ஒவ்வொரு 4.2 இன்னிங்ஸிலும் (மொத்தம் 27 சதங்கள்) ஒவ்வொரு சதத்தையும் அடித்தவர். ஆனால், 2019, நவம்பர் 22 இல் டெஸ்ட் சதத்தை விளாசிய பிறகு கடந்த 37 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு சதத்தையும் கோலி அடிக்கவில்லை.
ஒரு நாள் போட்டியில் முதல் சதம் அடித்த பிறகு ஒவ்வொரு 4.4 இன்னிங்ஸிலும் ஒரு சதத்தை (மொத்தம் 43 சதங்கள்) விராட் கோலி அடித்துள்ளார். ஆனால், கடைசியாக 2019 ஆகஸ்ட் 14இல் ஒரு நாள் சதத்தை விளாசிய பிறகு 23 இன்னிங்ஸ்களில் ஒரு சதத்தையும் விராட் கோலி அடிக்கவில்லை. ஒட்டுமொத்தமாக 91 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு தற்போதுதான் சதம் விளாசியிருக்கிறார் கோலி.
எந்த ஒரு கிரிக்கெட் வீரருமே ஏற்ற, இறக்கங்களைச் சந்திப்பது இயல்பானதுதான். ஆனால், விராட் கோலி சந்தித்த பேட்டிங் பின்னடைவு, அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பேட்டிங்கில் கவனம் செலுத்தும் வண்ணம், வேலை பளுவைக் குறைப்பதற்காக டி20 கேப்டன் பதவியை கடந்த ஆண்டு அவர் ராஜினாமா செய்தார்.
தொடர்ச்சியாக அவரிடமிருந்து ஒரு நாள் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. வெறுத்து போய் டெஸ்ட் கேப்டன் பதவியையும் அவர் தூக்கி எறிந்தார். குறிப்பாக, ஐ.பி.எல். மூலம் உருவான சிறந்த இளம் வீரர்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்க, கோலியின் பேட்டிங் குறைபாடு, அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியைப் போல மாறிவந்தது.
அதையெல்லாம் உணர்ந்துதான் ஆசிய கோப்பைக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் போட்டி எதிலும் விளையாடாமல் ஓய்வில் இருந்துவந்தார் கோலி. கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாகத் தொடர்ச்சியாக ஒரு மாதத்துக்கு மேல் கிரிக்கெட் மட்டையைத் தொடாமல் இருந்தார்.
இந்த ஆசிய கோப்பையில் ஐந்து இன்னிங்ஸ்களில் விளையாடிய விராட் கோலி, இலங்கைக்கு எதிரான போட்டியைத் தவிர்த்து மற்றப் போட்டிகளில் 2 அரை சதங்கள் உள்பட சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். கடைசி போட்டியில் சதம் அடித்து, ‘பழைய பன்னீர்செல்வ’மாக திரும்பி வந்திருக்கிறார்.
கடந்த காலங்களில் மன அழுத்தம் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து விலகி ஓய்வெடுத்து மீண்டு வந்த வீரர்களின் உதாரணங்கள் உள்ளன. விராட் கோலியும் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய பழைய ஃபார்முக்குத் திரும்பியிருப்பதாகவே உணர முடிகிறது.