வைரல் உலா: சோலோ காதல்; ஹோலோகிராம் மனைவி!
சா ஃப்ட்வேர் துறையில் வேலைசெய்யும் பெண்களைத் திருமணம் செய்துகொண்டவர்களைப் பார்த்திருப்பீர்கள்.
ஆனால், ஒரு சாஃப்ட்வேர் உருவாக்கிய கற்பனைக் கதாபாத்திரத்தைத் திருமணம் செய்துகொண்ட நபரைப் பார்த்திருக்கிறீர்களா? அந்த நபர் ஜப்பானில் இருக்கிறார்.
சிறு வயதில் புத்தகங்களில், தொலைக்காட்சித் தொடர்களில் வெளியான கற்பனை கார்ட்டூன் கதாபாத்திரங்களை ஆதர்சமாகக் கொண்டாடியிருப்போம். அந்தக் கதாபாத்திரங்களோடு நம்மை உவமைப்படுத்தி சேஷ்டைகளும் புரிந்திருப்போம். அது அந்த வயதுக்கு உண்டான இயல்பான விஷயம். காலப்போக்கில் வயதுக்கும் அனுபவத்துக்கும் ஏற்ப மாறிவிடுவோம்.
ஆனால், ஜப்பானைச் சேர்ந்த அகிஹிகோ கோண்டோ (38) என்கிற இளைஞர் இதற்கு நேர்மாறாக இருந்துவருகிறார். ஜப்பானில் புகழ்பெற்ற ஹட்சுனே மிக்கு என்கிற ஹோலோகிராம் கற்பனைக் கார்ட்டூன் கதாபாத்திரத்தை 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமே செய்துகொண்டு அசரடித்திருக்கிறார்.
இந்தக் கதாபாத்திரத்தைத் திருமணம் செய்யும் நிகழ்வுக்குத் தன்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் எனப் பலரையும் அழைத்திருக்கிறார் அகிஹிகோ. ஆனால், இவருடைய சிறுபிள்ளைத்தனத்தை உணர்ந்த குடும்பத்தினரும் நண்பர்களும் திருமணத்தைப் புறக்கணித்திருக்கிறார்கள்.
ஆனால், சமூக வலைத்தளங்களில் கற்பனை கதாபாத்திரங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் இவரைப் போன்ற ‘ஃபிக்டோசெக்சுவல்’ ஆர்வலர்கள், இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்திவிட்டுச் சென்றுள்ளனர். கற்பனைக் கதாபாத்திரங்களுடன் வாழ்ந்துவருபவர்களுக்கு ‘ஃபிக்டோசெக்சுவல்’ என்று பெயர்.
இப்போது இவருடைய கற்பனை வாழ்க்கையில் ஒரு சிக்கல். அகிஹிகோ திருமணம் செய்துகொண்ட அந்த ஹோலோகிராம் கற்பனைக் கதாபாத்திரத்தை உருவாக்கிய நிறுவனம், தங்களுடைய மென்பொருளின் தொழில்நுட்பச் சேவையை விரைவில் கைவிடப்போவதாக அறிவித்திருக்கிறது. இதனால், இந்த உருவம் விரைவிலேயே இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதை அறிந்த அகிஹிகோ அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்து சோகத்தில் இருக்கிறாராம்.
மிக்கு கார்ட்டூன் வேண்டுமானால் நிஜமில்லாமல் இருக்கலாம், ஆனால் என்னுடைய காதல் ‘அதையும் தாண்டிப் புனிதமானது’ என ‘குணா‘ கமல் போல சத்தமாக சோகக் கீதம் இசைத்துக்கொண்டிருக்கிறாராம் அகிஹிகோ.
