

அந்தக் காலத்தில் அப்பன், பாட்டன், பூட்டனெல் லாம் காதில் கடுக்கன் அணிந்திருந்தவர்கள்தான். ஆனால், அதை ஒரு காதில் மட்டும் அணிந்து வீதிக்கு வீதி டெர்ர்ரர் ஸ்டைலாக மாற்றியது சில ஆண்டுகளுக்கு முன்புதான். ஒற்றைக் காதில் கடுக்கன்களை மட்டுமே அணிந்துவந்த இளைஞர் களைக் கவரவே சந்தைகளில் விதவிதமாகக் கடுக்கன்கள் வந்த வண்ணம் உள்ளன.
ஆனால், இந்தக் கடுக்கன்களை அணிவதில் நம் இளைஞர்கள் எவ்வளவோ மேல் என்று நினைக்க வைத்துவிடுகிறார்கள் வெளிநாட்டு இளைஞர்கள். இரும்பு ராடு, பட்டன், ஆணி, ஊக்கு எனக் கையில் கிடைப்பதையெல்லாம் காதுகளில் அணிந்துகொண்டு சுற்றுகிறார்கள். தற்போது இதன்மீதும் வெறுப்பு வந்துவிட்டதோ என்னவோ.
ஷூவை அணிய உதவும் லேஸைக் கொண்ட தோடுகள் மீது ஈர்ப்பு வந்திருக்கிறது. புகழ்பெற்ற பெலன்சிகா என்கிற தோடு உற்பத்தி நிறுவனம், இந்த ஷூ லேஸ் தோடை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.20,847. என்னதான் ஸ்டைலாக இருந்தாலும் விற்பதில் ஒரு நியாயம் வேணாமா?
ரீல்ஸ் விட்டால் காசு
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் அறிமுகமானது முதலே அது பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இன்று விதவிதமான ரீல்ஸ்களைப் பார்ப்பதற்காகவே பலரும் இன்ஸ்டாகிராமிற்கு வரும் அளவுக்கு அது வளர்ந்திருக்கிறது. அதற்கேற்ப நிமிடத்துக்கு நிமிடம் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்கள் பதிவேற்றப்படுகின்றன.
கவனம் ஈர்க்கும் 15 முதல் 30 விநாடிகள் கொண்ட ரீல்ஸ்கள் லைக்ஸ்களையும் ஷேர்களையும் குவிக்கின்றன. தற்போது வருவாய் ஈட்டும் வாய்ப்பையும் ரீல்ஸ்கள் வழங்கிவருகின்றன. அதற்கான புதிய அம்சத்தை மெட்டாவெர்ஸ் அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஒருவருக்கு ஒரு ரீல்ஸ் பிடித்தால், அதற்கு ஸ்டாரை அனுப்பும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இப்படி சேரும் ஸ்டார்களை ரீல்ஸ் பதிவிடும் நபர் பணமாக மாற்றிக்கொள்ளலாம். ஆனால், குறைந்தபட்சம் ஆயிரம் ஃபாலோயர் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும்.
தோசைக்கல்லுக்கு ஆபத்து
தோசைக்கல்லுக்கு ஆபத்து தோசையை பேப்பர் போலவும் முறுகலாகவும் சாப்பிட விரும்பாதவர்கள் குறைவு. அதேவேளையில் இந்தப் பாணியில் தோசையை வார்க்கும் கைப்பக்குவம் எல்லோருக்குமே வந்துவிடாது. ஆனால், இனி அந்தக் கவலையே வேண்டாம். அதற்காகவே வந்துவிட்டது ஓர் இயந்திரம். பார்ப்பதற்கு இது பிரிண்டர் போலவே இருக்கிறது.
இந்த இயந்திரம் தொடர்பாக ட்விட்டரில் ஒருவர் காணொளியைப் பகிர, அது வைரலாகிவிட்டது. அந்த இயந்திரத்தில் மாவை ஊற்றி டைமரில் நேரத்தைக் குறிப்பிட்டு வைத்தால், சூடாகவும் முறுகலாவும் பேப்பர் போலவும் தோசையை இயந்திரம் வெளியே தள்ளிவிடுகிறது. முறுகலான தோசை மட்டுமல்ல, தோசை எப்படி வேண்டுமோ, அதற்கேற்ப மாற்றவும் வசதி இயந்திரத்தில் இருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால், தோசைக் கல்லுக்கு ஆபத்து வந்தாலும் வியப்பில்லை.
தொகுப்பு : மிது