யூடியூப் உலா: ஒரு யூடியூபர்; ஓஹோவென டாப்பர்

யூடியூப் உலா: ஒரு யூடியூபர்; ஓஹோவென டாப்பர்
Updated on
2 min read

ஒரே நாளில் கோடீஸ்வரராவது எப்படி என்று விளக்குவதாகக் கூறி கட்டணம் பெற்று, கூட்டத்தைக் கூட்டி வடிவேலு ஒரு திரைப்படத்தில் வாங்கிக் கட்டிக்கொள்வார். இன்னும் சிலர் சுயமுன்னேற்ற நூல்களை எழுதிக் குவித்து அந்தப் புத்தகங்களை விற்றே சுயமாக முன்னேறிவிடுவார்கள்.

ஓவர் நைட்டில் ஒபாமா, ஒரே பாட்டில் பில்லியனர் என்பதுபோன்று, தமிழ் சினிமாப் பாடல்களில் வரும் நாயகர்களைப் போல குறுகிய காலத்துக்குள் சம்பாதிக்க வேண்டும், பிரபலமடைய வேண்டும் என்பது இன்றைய இளைஞர்களின் கனவாகவே இருக்கிறது. அதற்குப் பல வழிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதில் ஒன்றுதான், யூடியூப் அலைவரிசையைத் தொடங்குவது என்பது.

ஓயும் அலைவரிசை

இன்றைக்குப் பலரும் அடுத்தவர்களைப் பார்த்து அவசரகதியில் ஒரு யூடியூப் அலைவரிசையைத் தொடங்கிவிடுகிறார்கள். அலைவரிசையில் என்ன செய்வது என்று தெரியாமல், எதுவும் திட்டமிடாமல் சமையல் செய்வது, சுற்றுலா செல்வது என்று சில மாதங்கள் காணொளிகளைப் பதிவிடுவார்கள். பிறகுதான் பார்வையாளர்களுக்காகவும் லைக்ஸ்களுக்காகவும் குட்டிக்கரணம் அடிக்கத் தொடங்குவார்கள். விளைவு, தொடங்கிய வேகத்தில் அலைவரிசை அலையடித்து ஓய்ந்துவிடும்.

இது போன்றவர்களுக்கு மத்தியில் வேறு சிலர் எந்த வழியிலாவது சந்தாதாரர்களைப் பெற்றுவிட வேண்டும் என்று வித்தியாசமான, விபரீதமான முயற்சிகளிலும் துணிந்து இறங்குவார்கள். ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல’ என்கிற முன்னோர் வாக்கைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கல்லா கட்டப் பார்ப்பார்கள். அவர்களில் ஒருவர்தான் பி.டெக் பட்டதாரியான ஹர்ஷா சாய்.

யார் இந்த ஹர்ஷா?

ஆந்திரா, தெலங்கானாவில் ஹர்ஷா சாயைத் தெரியாதவர்களே இருக்க முடியாது என்கிற அளவுக்கு யூடியூப் அலைவரிசை புகழ் வெளிச்சத்தில் மிளிர்ந்துகொண்டிருக்கிறார். அதுவும், ஒன்றுபட்ட ஆந்திரத்தில் உள்ள யூடியூபர்களின் சூப்பர் ஸ்டார் என்கிற அளவுக்கு ஹர்ஷா சாய் கொடிகட்டிப் பறக்கிறார். இவருடைய யூடியூப் அலைவரிசை கொஞ்சம் வித்தியாசமானது. பல யூடியூபர்கள் புதிய இடத்துக்கோ சுற்றுலாத் தலத்துக்கோ செல்லும்போது, அதைக் காணொளியாக்கிப் பதிவிடுவதைப் பலரும் பார்த்திருப்போம். ஆனால், இவரோ தமிழ், தெலுங்குப் படங்களை அதிகமாகப் பார்ப்பவரோ என்னவோ, போகிற இடங்களில் எல்லாம் சமூக சேவை செய்கிறேன் என்று வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டு, அதை யூடியூபில் பதிவேற்றி காசாக்கவும் செய்கிறார்.

இந்த உத்தியை 2020ஆம் ஆண்டில்தான் பின்பற்றத் தொடங்கினார். அதற்கு ரோடு போட்டுக் கொடுத்தது, அவர் வாங்கிய கார் உத்திதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வித்தியாசமான முயற்சியாக 20 லட்சம் ரூபாய் காரை வாங்குவதற்கு 5 ரூபாய் நாணயங்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு சென்று ஷோரூமில் கொடுத்து காரை வாங்கினார்.

இதற்காகக் காசைச் சேகரிப்பது முதல், அதை மூட்டையாகக் கட்டியது, ஷோ ரூமுக்குக் காசு மூட்டைகளை தூக்கிச் சென்றது, ஷோ ரூம் ஊழியர்களைக் கதிகலங்கச் செய்தது, சில்லறையை எண்ண வைத்தது வரை எல்லாவற்றையும் வீடியோவாக்கி, அதை யூடியூபில் பதிவேற்றினார். அந்தக் காணொளி கண்டபடி வைரலாக, ஒரே நாளில் ஹீரோவானார். பார்வையாளர்களும் பார்வைகளும் குவிய வருமானம் பார்க்கவும் செய்தார்.

அடடே உத்திகள்

இந்த உத்தி ஒர்க் அவுட் ஆகவே, பெட்ரோல் விற்கிற விலைக்கு இலவச பெட்ரோல் கொடுத்து அதைக் காணொளியாக்கிக் காசாக்கினார் ஹர்ஷா. அதேபோல சைக்கிள் கேட்ட ஒரு சிறுவனுக்கு சைக்கிள் வாங்கித் தந்தது, குடிசை வீட்டில் இருக்கும் ஏழை எளியவர்களின் வீட்டு வாசலில் ரூபாய் நோட்டுக் கட்டுகளை வைத்துவிட்டு கதவைத் தட்டி எழுப்பி ஆச்சரியத்தில் ஆழ்த்துவது, வீடில்லாத முடி திருத்தும் தொழிலாளிக்கு வீடு கட்டிக் கொடுத்தது என்று இவரது யூடியூப் அலைவரிசை சேவைகள் தொடர்கின்றன. ஹர்ஷாவின் திடீர் ‘சமூக சேவை’ காட்சிகள் அவரை வெளியுலகத்துக்கு இன்னும் வெளிச்சம் போட்டுக் காட்டின.

தற்போது பான் இந்தியா சினிமாக்கள் வந்துகொண்டிருப்பதுபோல் யூடியூபில் புதிய முயற்சியாக இவரது ‘சமூக சேவை’ காணொளிகள் தமிழ், இந்தி, தெலுங்கு என்று பல்வேறு மொழிகளில் வெளியாகி அதன் வழியாகவும் ரசிகக் கண்மணிகளைப் பெற்று பல யூடியூபர்களை பொறாமைப்பட வைத்திருக்கிறார் இந்த 2கே கிட்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in