

வாஷிங்டன், கலிபோர்னியா, டென்வர், அயோவா, பாஸ்டன் ஆகிய ஐந்து அமெரிக்க மாநிலங்களில் ‘இன்டர்நேஷனல் விசிட்டர் லீடர்ஷிப் புரோக்ராம்’ அமெரிக்காவின் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகத்தால் சமீபத்தில் நடத்தப்பட்டது. அமெரிக்காவில் திருநங்கைகள் குறித்த நிலையைப் புரிந்துகொள்வதும் இந்தியாவில் அவர்களைப் பற்றிய நிலையைப் பகிர்ந்துகொள்வதும்தான் இந்தச் சந்திப்பின் நோக்கம்.
இந்தியாவிலிருந்து சென்ற 8 பேரில் தமிழகத்திலிருந்து ஒரே ஒருவர் மட்டும்தான் அந்த நிகழ்வில் கலந்துகொண்டார். அவர், திருநங்கைகளின் நலன்களுக்காகச் செயல்பட்டு வரும் ‘சகோதரன்’ அமைப்பின் பொது மேலாளரான ஜெயா. அவரிடம் இந்தப் பயணத்தின் வழியாகப் புரிந்துகொண்ட விஷயங்களைப் பற்றியும் அவர்களிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் குறித்தும் கேட்டதிலிருந்து...
“அமெரிக்காவின் ஐந்து மாநிலங்களில் 21 நாட்கள் நடந்த இந்தப் பயணத்துக்கு ‘சகோதரன்’ அமைப்பின் நிறுவனர் சுனில் மேனன் அவர்களின் வழிகாட்டுதலின்படி சென்று வந்தேன். கல்லூரிகள், தன்னார்வ அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், வெள்ளை மாளிகை இப்படிப் பல இடங்களுக்கும் சென்றோம். என்னைத் தவிர தென்னிந்தியாவில் தெலங்கானாவிலிருந்து இரண்டு பேரும் வட இந்தியாவிலிருந்து ஐந்து பேரும் பங்கேற்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தன்பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் மற்றும் மூன்றாம் பாலினச் சமூக மக்களின் பிரச்சினைகளுக்காக எந்தெந்த வழிகளிலெல்லாம் ‘சகோதரன்’ அமைப்பு போராடிவருகிறது என்பதையும், தமிழகம் முழுவதும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் மூலமாக காவல் துறையினர் பாலின சமூக மக்களை எப்படி அணுக வேண்டும் என்னும் விழிப்புணர்வை அளித்தது பற்றியும் அந்நாட்டில் உள்ள தன்னார்வ அமைப்பினருடன் பகிர்ந்துகொண்டேன்.
நம் நாட்டில் அடிப்படை உரிமைகளுக்கே இன்னமும் நாம் போராடிக்கொண்டிருக்கும்போது, அமெரிக்காவில் சமூகத்தின் எல்லா நிலைகளிலும், எல்லாத் துறைகளிலும் (வழக்கறிஞர், நீதிபதி, பாடகர், பேராசிரியர், மருத்துவர்கள்) மாற்றுப் பாலின மக்களைப் பார்க்க முடிந்தது. அதோடு அவர்கள் தங்களை இந்தப் பாலின வகைகளைச் சேர்ந்தவர்கள் என வெளிப்படையாக அறிவித்துக் கொள்வதையும் அந்தச் சமூகத்தில் இயல்பாகப் பார்க்க முடிந்தது. இது எல்லாவற்றுக்கும் அரசின் சட்டபூர்வமான ஆதரவு இருப்பதையும் உணர முடிந்தது.
சமூகத்தின் பல பிரிவுகளில் இருப்பவர்களுக்கும் மூன்றாம் பாலினச் சமூகத்தைப் பற்றிய கவனத்தை ஏற்படுத்துவதற்கென்றே புரிந்துணர்வு மையங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. ஒரு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் பாலினச் சமூக மக்களுக்கென தனித் தனிக் கழிப்பிட வசதிகள்கூட இருப்பதைப் பார்த்து வியந்தேன்.
எல்லாவற்றையும்விட முக்கியமானதும் இந்தியாவில் உடனடியாகச் செயல்படுத்த வேண்டிய விஷயமாகவும் நான் உணர்ந்தது, மூன்றாம் பாலினச் சமூகத்தைச் சேர்ந்த பெற்றோர்களுக்காக ஒரு சங்கத்தை நடத்துவது. அமெரிக்காவில் அப்படி ஒரு சங்கம் இருக்கிறது. அதற்குப் பெயர் P-FLAG (Parents For Lesbian And Gay). பாலின மாறுபாட்டோடு ஒரு குழந்தை உருவாகும்போது அந்தக் குழந்தைக்குக் குடும்பத்திலிருந்து கிடைக்க வேண்டிய ஆதரவு இயல்பாகக் கிடைக்க உதவுகிறது இந்த அமைப்பு.
இந்தியாவில் சிறப்பாகச் செயல்படும் ஒரு கட்டமைப்பு ஜமாத். இதில் பல நிறை, குறைகள் இருந்தாலும் வயதான திருநங்கைகளைப் பராமரிப்பதற்கு இந்தியாவில் இந்தக் கட்டமைப்பு பெரிதும் உதவுகிறது. ஆனால், அமெரிக்காவில் ஆதரவற்ற திருநங்கைகள் அதிகம்.
அமெரிக்காவில் அடித்தட்டைச் சேர்ந்த திருநங்கைகளுக்கான அமைப்பாகச் செயல்படுகிறது ‘காசாரூபி’. இங்கிருக்கும் பெரும்பான்மையானவர்கள் கறுப்பினத்தைச் சேர்ந்த திருநங்கைகள்தான்.
இந்தியாவில் தமிழகத்தில் தொடங்கப்பட்டிருக்கும் திருநங்கைகள் வாரியம் முதல் அனைத்து விஷயங்களும் அங்கிருப்பவர்களுக்கு உடனடியாகத் தெரியும் அளவுக்கு இந்தியாவுடனான தகவல் தொடர்பு பலமாக இருப்பதைப் பார்க்க முடிந்தது.
வெள்ளை மாளிகையில் மக்கள் தொடர்பு சார்ந்த பணிகளுக்கான முதுநிலை இணை இயக்குநரான ராஃபி ஃப்ரீட்மென் என்பவரும் ஒரு திருநங்கைதான் என்பதைப் பயணத்தில் முத்தாய்ப்பான விஷயமாக நான் உணர்ந்தேன்!” என்கிறார் ஜெயா.