

பேருந்துகளில் பயணிக்கும் ஆண் பயணிகளை எச்சரிக்கும் வகையில் அண்மையில் அரசு வெளியிட்ட உத்தரவைப் படித்ததுமே, பேருந்துப் பயண ஃபிளாஷ்பேக் கொசுவத்தி மனத்தில் சுழல ஆரம்பித்துவிட்டது. ஒரு காலத்தில் வாலிபப் பசங்களுக்கெல்லாம் இந்தப் பேருந்துகள்தாம் காதல் ரதமே.
தமிழ் சினிமாவைப் பார்த்து வளர்ந்த 80’ஸ் கிட்ஸ், ‘வளையோசை கலகலகலவென..’ என்று ‘சத்யா’ படத்தின் பாடலைப் பாடித்தான் காதலையே மொட்டுவிட வைத்தார்கள். அப்படியென்றால், 90’ஸ் கிட்ஸுக்கு எதுவுமில்லையே என்று அவசரப்பட்டு நினைத்துவிடாதீர்கள்.
‘எனக்கென ஏற்கெனவே பிறந்தவள் இவளோ..’ என்கிற ‘பார்த்தேன் ரசித்தேன்’ படப் பாடலின் வழியாகத்தான் காதலுக்கு இவர்கள் கிரீன் சிக்னல் கொடுத்தார்கள். நம்ம 2கே கிட்ஸுக்கு, ‘ஆடி போனா ஆவணி... அவ ஆள மயக்கும் தாவணி..’ என்று ‘அட்டகத்தி’ படத்தின் பாடல் தெய்விக ராகமானது. இப்படிப் பேருந்திலேயே காதல் வளர்த்த இளைஞர்கள் ஏராளம்.
‘12பி’ படக் கதையைப் போல பேருந்தில் ஏறினால் ஒரு ஆள்; பஸ் ஸ்டாப்பில் நின்றால் ஒரு ஆள் என்று சுற்றிய ‘மிஸ்டர் ரோமியோ’க்களை ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பிலும் பார்க்கலாம். பேருந்துகளைச் சுற்றி ‘புள்ளிங்கோ’க்களின் இப்படியான கதைகள் இருந்தாலும், பேருந்துகளில் பெயர் வாங்கிய ‘ஆண் பாவ’ங்களும் நிறையவே இருக்கிறார்கள்.
சீட்டில் உட்கார்ந்து எதுவும் தெரியாததுபோல சிலர் மொபைல் போனை நோண்டிக்கொண்டிருந்தாலும், தான் அமர்ந்திருக்கும் சீட்டைக் கர்ப்பிணிகளுக்கோ, வயதானவர்களுக்கோ, உடல்நலம் குன்றியவர்களுக்கோ விட்டுக்கொடுக்கும் ஆண்களைக் காணாத பேருந்துகள் இருக்கின்றனவா?
‘சரியான சில்லறை கொடுத்து டிக்கெட் வாங்கவும்’, ‘டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் ரூபாய் 500 அபராதம்’, ‘திருடர்கள் ஜாக்கிரதை’ என்பது போன்ற வாசகங்களை ஆண்கள் அமரும் இருக்கை பக்கமாக ஒட்டியிருந்தாலும், அதையெல்லாம் கண்டும் காணாததுபோல இருக்கும் ஆண் குலத்தின் தியாகம்தான் எப்பேர்ப்பட்டது?
இன்னொரு பக்கம், பெண் பயணிகளுக்கு முதலில் சில்லறையைக் கொடுத்துவிட்டு, “மிச்ச காசை இறங்கும்போது வாங்கிக்கோ” என்று பேருந்தின் நடுப்பகுதியில் பஸ் கம்பியைப் பிடிக்காமல் ‘மொக்கச்சாமி’ வடிவேலுபோல சவுண்டு விடும் கண்டக்டர்களிடமிருந்து, சில்லறையை வாங்க ஆண் பயணிகள் படும் பாடு இருக்கே... மறந்துவிடக் கூடாது என்பதற்காக கண்டக்டர் போகும்போதும் வரும்போதும் அதைக் கேட்டு, திட்டு வாங்கி.. அந்த வேதனை இருக்கே, வேதனை…
இப்படியான இந்தக் காதல் ரதத்தில் தொந்தியோடு முந்திச்சென்று இளசுகளைவிட சில பெருசுகள் பேருந்தில் செய்யும் ரவுசுகளுக்காகத் தர்ம அடி வாங்கிய கதைகளை எத்தனை பேருந்துகள் பார்த்திருக்கின்றன. இப்படியெல்லாம் பேருந்துப் பயண வரலாறுகள் இருந்தாலும், புதிய உத்தரவு மூலம் ‘காதல் மன்னர்’களின் ரவுசுகள் குறைந்தால், பெண் பயணிகளுக்குப் பேருந்துப் பயணம் இனிமையான பயணமாக மாறும் என்று நம்பலாம்.