

அண்ணல் அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறிய 60-ம் ஆண்டு இது. அதையொட்டி, அம்பேத்கரியர்கள் நாடு முழுவதும் இலக்கியக் கூட்டங்கள், அம்பேத்கரிய மாநாடுகள், ஓவியக் கண்காட்சிகள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார்கள். அந்த நிகழ்வுகளின் மூலம் அம்பேத்கரின் கருத்துகளையும், பவுத்த மத மேன்மைகளையும் அடித்தட்டு மக்களிடம் கொண்டு செல்ல முயன்று வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.
அப்படி ஒரு நம்பிக்கை தரும் நிகழ்வு சமீபத்தில் நாக்பூரில் நடந்திருக்கிறது. அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவிய 60-ம் ஆண்டைக் கொண்டாடும் வகையில் அங்கு அம்பேத்கரியர்களால் ‘லிபரேஷன் 60’ என்ற தலைப்பில் மாநாடு ஒன்று கூட்டப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக ‘அம்பேத்கரிய பவுத்த ஓவியர்’ என்று அழைக்கப்படும் ஓவியர் சவி சாவர்க்கரின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள கரோபா மைதான் எனும் இடம், காலம் காலமாக அம்பேத்கரியச் செயல்பாடுகளுக்குப் பெயர் போன பகுதி ஆகும். அங்கு 1961-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி மகர் இனத்தில் பிறந்தார் சவிந்தர் சாவர்க்கர் எனும் சவி சாவர்க்கர். 1956-ம் ஆண்டு அம்பேத்கரின் பெருமுயற்சியால் பலரும் புத்த மதத்தைத் தழுவினர். அவர்களில் சவி சாவர்க்கரின் குடும்பமும் ஒன்று.
சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் ஈடுபாடு கொண்டிருந்த சவி சாவர்க்கர், நாக்பூர் பல்கலைக்கழகத்தில் ஓவியக் கலையில் பட்டம் பெற்றார். பின்னர் பரோடா பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்புப் படித்தார். அப்போது அவர், அங்கிருந்த தேவதாசிகள் குறித்து வரைந்த ஓவியங்கள் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றார். 1970 மற்றும் 80-களில் பரோடாவில் தங்கியிருந்த கேரள ஓவியர்களால் ‘நரேட்டிவ் மூவ்மென்ட்’ எனும் ஓவிய பாணி காத்திரமாக வளர்ந்து வந்தது. அப்போது பல ஜென் குருக்களும் ஓவியம் வரைவதில் ஈடுபட்டுவந்தார்கள். அவை எல்லாம் சேர்ந்து சவி சாவர்க்கரின் மேல் தாக்கம் செலுத்த, அவர் பவுத்த அழகியல் தொடர்பான ஓவியங்களை வரைய ஆரம்பித்தார்.
தன் ஓவியங்களுக்குள் தலித் பிரச்சினைகளைக் கொண்டுவந்த முதல் ஓவியர் இவர்தான். தன்னுடைய தலித் பவுத்த ஓவியங்கள் குறித்து சவி சாவர்க்கர் கூறும்போது "புத்தர் என்பவரைக் கண்களை மூடி அமர்ந்திருக்கும் படிமமாக நான் பார்க்கவில்லை. விழிப்புடன், ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று, அன்பை போதித்து, மீண்டும் ஒருமுறை ஞானத்தை வழங்குபவராகப் பார்க்கிறேன்" என்கிறார். அவரின் ஓவியங்கள் சில, உங்கள் பார்வைக்கு...