

தமிழகத்திலேயே தனிக் கலாச்சாரம் கொண்ட நகரம், சென்னை. குறிப்பாக வடசென்னை. இதன் பாஷையும் விசேஷமானது. தெலுங்கு, உருது, தமிழ் இன்னும் பல மொழிகள் கலந்த பாஷை.
இங்குள்ள கானா பாட்டும் கூத்தும் தமிழகக் கலாச்சாரத்தில் தனித்துவமானவை. அதுபோல்தான் விளையாட்டும். நாடு முழுக்க இளைஞர்கள் கிரிக்கெட் மட்டைகளும் பந்துமாகச் சுற்றிவர, வடசென்னையில் கால்பந்தும் போட்டிகளுமாக ஓடிக்கொண்டிருப்பார்கள். கால்பந்து விட்டால் கேரம். இரண்டும் இல்லாதவர்கள் துணியைக் கையில் சுற்றிக்கொண்டு குத்துச்சண்டையில் இறங்கிவிடுவார்கள்.
கால்பந்து மையம்
சென்னையின் இந்தப் பன்முகத்தன்மை, காலனிய ஆதிக்கத்தால் வந்ததாக இருக்கலாம். வடசென்னையின் கால்பந்துக்கு நூறு வயதுக்கு மேலிருக்கும். வியாசர்பாடிதான் வடசென்னை கால்பந்தின் மையம். அங்கே முல்லை நகரில் பல ஆண்டுகளுக்கு முன்பே கால்பந்து பயிற்சி மையம் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. வியாசர்பாடிப் பகுதியை ‘இந்தியாவின் பிரேசில்’ என்றும்கூடச் சொல்வதுண்டு.
1894இல் சென்னையில் முதல் கால்பந்துத் தொடர் ஜிம்கானா கிளப்பில் நடைபெற்றுள்ளது. நந்தகுமார், தனபால் கணேஷ் போன்ற வடசென்னை வீரர்கள், தேசிய அளவில் பிரபலம் அடைந்து, வடசென்னையின் கால்பந்து வரலாற்றுக்குப் பெருமை சேர்த்தார்கள். தொண்ணூறுகளில் தமிழகத்தின் மற்ற நகரங்களில் டெண்டுல்கர்களும் கங்குலியும் குறுக்கும் நெடுக்குமாகச் சுற்றிய காலகட்டத்தில் மரடோனாக்கள் வடசென்னை வீதிகளில் கால்பந்தை உதைத்துக்கொண்டிருந்தனர்.
குத்துச்சண்டைப் பரம்பரைகள்
கால்பந்துபோல் குத்துச்சண்டைக்கும் வடசென்னையே மையம். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே கால்பந்துபோல் இந்த விளையாட்டும் இந்தப் பகுதியில் பரவத் தொடங்கியது. 1934இல் மதராஸ் மாகாணமாக இருந்த தமிழகத்தில் முதல் குத்துச்சண்டைச் சங்கம் தொடங்கப்பட்டது. வடசென்னைப் பகுதியில் இருந்த ஆங்கிலோ - இந்தியர்கள் இந்த விளையாட்டில் தொடக்கக் காலத்தில் கொடிகட்டிப் பறந்துள்ளனர்.
மீனவச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இதில் சிறந்து விளங்கியுள்ளனர். இன்றும் பல குத்துச்சண்டை கிளப்புகள் வடசென்னையில் இருக்கின்றன. இந்த விளையாட்டு ஒருகாலத்தில் மிகப் பிரபலமாக இருந்தது. வடசென்னையில் இருந்த கிளப்புகளுக்கு இடையில் மோதுவதே இவர்களின் செயல்பாடாக இருந்தது. அதனால் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் இவர்கள் கவனம் செலுத்துவது இரண்டாம்பட்சமாகத்தான் இருந்தது.
இந்தப் போட்டியில் பல பரம்பரைகள் இருந்துள்ளன. இந்தப் பரம்பரை வீரர்கள் கடுமையாக மோதிக்கொண்டுள்ளனர். தேசிய அளவில் பிரபலமாக இருந்த சென்னை குத்துச்சண்டை கிளப் போட்டியைக் காண, சர்வதேசக் குத்துச்சண்டை நட்சத்திரம் முகமது அலி சென்னைக்கு வந்து உலகப் புகழைப் பெற்றுத் தந்திருக்கிறார்.
கேரம் கெத்து
வடசென்னையின் அடுத்த அடையாளம், கேரம். வடசென்னைக் குடியிருப்புகளில் இளைஞர்கள் வீதியிலேயே கேரம் போர்டுகளை வைத்துக் காயைச் சுண்டும் காட்சி, அந்தப் பகுதியின் அன்றாட காட்சிகளில் ஒன்று. கால்பந்து, குத்துச்சண்டைக்குப் பிறகுதான் கேரம் வடசென்னையில் பிரபலமானது.
ஆனால், மிக வேகமாக வளர்ந்தது. இதுவரை 70க்கும் மேற்பட்ட வீரர்களைத் தேசிய கேரம் போட்டிகளுக்குத் தந்துள்ளது வடசென்னை. கானா, மொழி வழக்கு போன்ற சுவாரசிய அடையாளங்கள், வடசென்னைக்குத் தனித்துவம் அளிப்பவை. இந்த விளையாட்டு அடையாளங்கள், வடசென்னைக்குப் பெருமையையும் சிறப்பையும் சேர்க்கின்றன.