அது ஒரு அழகிய ‘மொஃபா’ காலம்!

அது ஒரு அழகிய ‘மொஃபா’ காலம்!

Published on

அதிவேக பைக்குகளில் மிரட்டியபடி செல்லும் இன்றைய இளைஞர்கள், இரு சக்கர வாகன மெக்கானிக்குகளை நட்பு பிடித்து வைத்துக்கொள்வதைப் போல, எண்பதுகளில் சைக்கிள் கடை வைத்திருப்பவர்களிடம் நட்பை ஏற்படுத்திக்கொள்வது அன்றைய இளைஞர்களின் வழக்கம்.

வாடகைக்கு சைக்கிளை எடுக்க, டயர்களில் காற்று நிரப்ப, வீல்களில் பெண்டு எடுக்க, பஞ்சர் ஒட்ட, பிரேக் சரிசெய்ய என்று அவ்வப்போது சைக்கிள் கடைக்குச் செல்லாதவர்கள் அன்று குறைவு.

சைக்கிள் கடை உரிமையாளர்களும் ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் வரும் கவுண்டமணி போல ‘பில்டப்’ கொடுப்பார்கள். இரு சக்கர வாகனங்கள் அதிகம் புழக்கத்தில் இல்லாத அந்த நாட்களில் சைக்கிள்தான் சொகுசு ரதம். மாட்டுப் பொங்கலுக்கு மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணமடித்து அலங்காரம் செய்வதுபோல சைக்கிள்களைத் தினமும் துடைத்து, அழகுபடுத்தும் பொருட்களை இணைத்து சைக்கிளை அழகு பார்த்தது அந்தக் காலம்.

வந்தது மொஃபா

சைக்கிள்கள் கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் அந்த வண்டியும் நம்ம ஊருக்கு வந்து இறங்கியது. ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்திலிருந்து வெளியான அந்த வண்டியின் பெயர் மொஃபா. சைக்கிளுக்கும் ஸ்கூட்டருக்கும் இடைப்பட்ட ஒரு வஸ்துவாக அந்த வாகனம் தோற்றமளித்தது.

‘மொபெட்’ என்று அதனைச் சொல்வார்கள். ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷ் ஓட்டிவருவாரே, அதே வண்டிதான். வடிவத்தில் இன்றைய எலெக்ட்ரிக் சைக்கிளுக்கு முன்னோடி இந்த மொஃபா. இன்றைக்கு இளைஞர்கள் சர்வசாதாரணமாக 125 சிசி பைக்குகளில் சாலைகளில் சீறிப் பாயும் நிலையில், வெறும் 22 சிசி திறன்கொண்ட இன்ஜினுடன் லிட்டருக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த வண்டியில் அப்போது செல்ல முடிந்தது.

அப்போது சைக்கிள் வாடகைக்கு விடும் பல கடைகளில் மொஃபாவும் வாடகைக்குக் கிடைத்தது. அப்போதெல்லாம் சைக்கிளுக்கு ஒரு மணி நேர வாடகையாக 50 பைசா வாங்குவார்கள். மொஃபாவுக்கு ஒரு மணி நேரத்துக்கு வாடகையாக சென்னையில் 5 ரூபாய் வாங்கினார்கள். 80களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய்தான்.

வாடகைக்குக் கிடைத்த வாகனங்கள்

நடுத்தர வயதினர் அதிகமாக உபயோகிக்கும் வாகனங்களாக ‘சேட்டக்’, ‘கைனடிக் ஹோண்டா’, ‘யமஹா ஆர்.எக்ஸ் 100’, ‘ராஜ்தூத்’ போன்ற வாகனங்கள் இருந்ததென்றால் பதின் பருவத்தினரின் விருப்பத் தேர்வாக மொஃபா, லூனா போன்ற வாகனங்கள் அன்றைக்கு இருந்தன.

சேட்டக், லூனா, மொஃபா போன்ற வாகனங்களில் செல்வது அன்றைக்கு கவுரவமாகப் பார்க்கப்பட்டது. வசதிபடைத்தவர்களால் மட்டுமே வாங்க முடிந்த வாகனங்களாக இவை இருந்தன. எனவே, மொஃபா, லூனா போன்ற வாகனங்கள் மட்டும் சைக்கிள் கடைகளில் வாடகைக்கு விடப்பட்டு வந்தன.

தொண்ணூறுகளுக்குப் பிறகு உலகமயமாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி சைக்கிள்கள், மொபெட்கள் போன்ற இரு சக்கர வாகனச் சந்தைகளிலும் எதிரொலித்தது. அதுவரை சக்கரங்களின் வேகத்தில் சுழன்றுகொண்டிருந்த சைக்கிள் கடைகள், இரு சக்கர வாகனங்களின் பெருக்கத்தால் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய சுழற்சியை நிறுத்தும் நிலைக்குச் செல்லத் தொடங்கின.

இன்று கிராமங்களில் மட்டும் சைக்கிள் கடைகள் உயிர்ப்புடன் இருக்கின்றன. ஆனால், பெரும்பாலான நகரங்களில் அதன் தடத்தை இழந்துவருகின்றன. சைக்கிள் கடைகளைப் போலவே, வாடகைக்கு எடுத்து ஓட்டிப் பழகிய சைக்கிள்களும் மொபெட்களும் காலமாற்றங்களுக்கு உள்ளாகி இன்று மின் வாகனங்களாகப் பரிணமித்துவருகின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in