

இந்திய இளைஞர்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஹர்னித் கவுர், கவிதை எழுதுவதைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இவர் மும்பையின் புனித சேவியர் கல்லூரியில் முதுநிலை பொதுக் கொள்கை படித்துக்கொண்டிருக்கும் மாணவி. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ‘தி இன்எபிலிட்டி ஆஃப் வோர்ட்ஸ்’ (The inability of words) கொல்கத்தா ‘ரைட்டர்ஸ் வொர்க் ஷாப்பில்’ வெளியிடப்பட்டது. இந்தத் தொகுப்பு, அமேசான் இணையதளத்தில் அறிமுகமான முதல்நாளே கவிதை நூல்களில் ‘பெஸ்ட் செல்ல’ராக இடம்பெற்றது.
இருபத்தியொரு வயதில் ஹர்னித் எழுதியிருக்கும் கவிதைகள் பல தரப்பினரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது. இந்தக் கவிதைத் தொகுப்பில் 66 கவிதைகள் ஆறு பகுதிகளில் இடம்பெற்றிருக்கின்றன. மனித உணர்வுகளின் பலவிதமான வளர்ச்சி நிலைகளை நேர்மையாகப் பிரதிபலிக்கும்படி இவருடைய கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. “எனக்கு எழுத்தின்மீது ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தவர் என்னுடைய அம்மா. அவர் ஓர் ஆங்கிலப் பேராசியர். அவரால் எனக்கு இலக்கியங்கள் சிறு வயதிலேயே அறிமுகமாகிவிட்டன. அதனால், பன்னிரண்டு வயதிலேயே கவிதை எழுத ஆரம்பித்துவிட்டேன். என்னுடைய கவிதைகளைப் படித்து ஒளிவுமறைவின்றி நேர்மையாக விமர்சிக்கும் முதல் விமர்சகர் அவர்தான்” என்கிறார் ஹர்னித்.
ஹர்னித்தின் முதல் கவிதைத் தொகுப்பு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருந்தாலும், இந்திய மொழிக் கவிதைகளை வாசிப்பதைப் பழக்கமாக வைத்திருக்கிறார். “இந்தி, ஆங்கிலம், உருது, பஞ்சாபி, குஜராத்தி, மணிப்புரி மொழிக் கவிதைகள் எனக்குப் பரிச்சயம். எந்த மொழியாக இருந்தாலும் என்னைப் பாதித்த கவிதைகளின் தாக்கத்தை ஏதாவது ஒருவிதத்தில் என்னுடைய கவிதைகளில் பிரதிபலித்துவிடுவேன். என்னுடைய கவிதைகளைப் படிக்கும் வாசகர்கள் தங்களுடைய எண்ணங்களுடன் பயணம் செய்வதைப் போலத்தான் உணர்வார்கள். நான் அலங்காரமாக எழுதுவதைவிட நேர்மையாக எழுத வேண்டும் என்பதில்தான் அதிக அக்கறை எடுத்துக்கொள்வேன்” என்கிறார் அவர்.
ஹர்னித்தின் தந்தை ஓர் ஐ.பி.எஸ். அதிகாரி. அந்தத் தாக்கத்தால், ஐ.ஏ.எஸ்., கனவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறார் இந்த இளம் கவிஞர். “எனக்கு இயல்பிலேயே அரசியல், வரலாறு, சமூகவியல் பிடிக்கும். நான் ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்று முடிவெடுத்ததற்கு அதுவும் ஒரு காரணம். இந்தத் தாக்கத்தில் சில அரசியல் கவிதைகளையும் எழுதியிருக்கிறேன். அவை ‘எகானமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி’ போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. என்னுடைய இரண்டாவது தொகுப்பும் விரைவில் வெளியாக இருக்கிறது. கவிதை, ஐ.ஏ.எஸ்., என்ற என்னுடைய இரண்டு கனவுகளையும் ஒன்றாகப் பின்தொடரப் போகிறேன்” என்று உறுதியோடு சொல்கிறார் அவர்.
இது தவிர, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் இளம் கவிஞர்களின் அரசியல் கவிதைகளைச் சொல்லாடல் பாணியில் தொகுத்துகொண்டிருக்கிறார் ஹர்னித். இந்தத் தொகுப்பு 2017-ல் வெளியாகவிருக்கிறது. “இளைஞர்கள் தங்களுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்த இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், நாம் என்ன சொல்கிறோம் என்பதைக் கேட்பதற்கு இன்று நேர்மையான வாசகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில், இந்தத் தலைமுறையில் எழுதுபவர்கள் அதிர்ஷ்டசாலிகள்” என்று சொல்கிறார் ஹர்னித்.
கவிதை எழுத விரும்பும் இளைஞர்களுக்கு ஹர்னித் சொல்லும் ஆலோசனை இதுதான்: “படைப்பாற்றல் என்பது மேஜிக் இல்லை. அது கடின உழைப்பு, பயிற்சி. உறுதியுடன் ஒரு விஷயத்தைச் செய்வதால் மட்டுமே வரும். தினமும் எழுதுங்கள். படைப்பாற்றல் ஒரு தசையைப் போலத்தான். தொடர் பயிற்சியின் மூலம் அதை ஒரு வலிமையான ஆயுதமாக மாற்ற முடியும். ஊக்கம் கிடைப்பதற்காகக் காத்திருக்காதீர்கள். ஊக்கத்துக்கான விஷயத்தை நீங்கள் தேடிச் செல்லுங்கள். நிச்சயம், உங்களுடைய கவிதை உலகத்தைக் கண்டடைவீர்கள்!”
ஹர்னித்தின் வலைப்பூவை வாசிக்க: >foreverawkwardandlearning.wordpress.com