‘அண்ணா’ சேரலாதன்!

‘அண்ணா’ சேரலாதன்!
Updated on
2 min read

கபடி உலகக் கோப்பை மீண்டும் இந்தியா வசம். கடந்த அக்டோபர் 22-ம் தேதி, இறுதிப் போட்டியின் முதல் பாதியில் 18-13 என்ற புள்ளிக் கணக்கில் ஈரான் ஆதிக்கம் செலுத்த, இரண்டாம் பாதியில் அருமையான ரெய்டுகளால் இந்தியா போட்டியை தன் வசமாக்கியது. 12 நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில் இந்திய அணியின் மிகச்சிறந்த வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த வெற்றி அணியில் இடம்பெற்ற ஒரே தமிழக வீரர் தஞ்சை மாவட்டம் திருச்சினம் பூண்டி என்ற ஊரைச் சேர்ந்த சேரலாதன் மட்டுமே.

இந்திய கபடி அணியில் தடுப்பாட்டக்காரராக வலம் வரும் சேரலாதன் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர். சிறுவயதிலேயே கபடியில் சிறப்பாக விளையாடியவரை சிவந்தி ஆதித்தனாரால் ஏற்படுத்தப்பட்ட கபடிக் குழுவில் சேர்ந்து, திறமைகளைக் கூர் தீட்டுவதற்காகத் திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தனர் பெற்றோர்கள். அங்கிருந்து மாநிலப் போட்டிகள், ரயில்வே மண்டலங்களுக்கு இடையிலான போட்டிகள் என இவரின் ‘கரியர் கிராஃப்’ ஏறிக் கொண்டே போனது.

உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்ற முதல் தமிழக வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான இவர், ஹைதராபாதில் தென்மத்திய ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். இவர், நமக்குத்தான் சேரலாதன். அணியில் உள்ளவர்களுக்குச் செல்லமாக ‘அண்ணா’. உலகக் கோப்பை வெற்றி மகிழ்ச்சியில் இருந்தவரிடம் பேசியதிலிருந்து…

“தேசியப் போட்டிகளில் பங்கேற்று 1997-ம் ஆண்டில் ரயில்வேயில் பணியில் சேர்ந்தேன். பல சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற பின், 2010-ம் ஆண்டு ஓமனில் நடைபெற்ற ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியின் கேப்டனாக இருந்தது மறக்க முடியாத அனுபவம். இந்திய அணியில் இடம்பெறுவது என்பது மிகவும் கடினம். 16 ரெயில்வே மண்டலங்களும் பங்கேற்கும் தேசியப் போட்டியில் சிறப்பாக விளையாடும் 35 பேரைத் தேர்ந்தெடுத்து அதிலிருந்து 12 பேர் மட்டுமே ரயில்வே அணியில் இடம்பெறுவார்கள். மீண்டும் நாடு முழுவதுமிருந்து வரும் போட்டியாளர்களுடன் களம் கண்டுதான் இந்திய அணியில் இடம்பெற முடியும். இதற்கு நாம் நல்ல ஃபார்மில் இருக்க வேண்டும். உடலில் காயங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று கூறும் சேரலாதன் இந்தியாவிலேயே அதிக அளவிலான தேசிய கபடிப் போட்டிகளில் பங்கேற்ற ஒரே வீரர்!

“தேசியப் போட்டிகளில் பங்கேற்ற போது இந்தி மொழியை முதலில் கற்றுக் கொண்டேன். பிறகு மண் தரையில் ஆடிய அனுபவத்திலிருந்து ‘மேட்’டில் ஆட வேண்டியிருந்தது. மண் தரையில் அடிபடாது. ஆனால் ‘மேட்’ டில் அடிக்கடி அடிபடும். இதற்காக ‘ஷூ’ அணிய வேண்டும். 2008-ம் ஆண்டுக்குப் பின்னர் அனைத்து விளையாட்டு அரங்கத்திலும் ‘மேட்’ போடப்பட்டுவிட்டது. ஒவ்வொரு முறையும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டு என்னை நானே வலுப்படுத்திக் கொண்டே இருந்தேன்” என்பவர் எதிராளியின் மனநிலையைக் கணித்துத் திட்டமிடுவதில் நிபுணர்.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாக இருந்தாலும் தேசிய, சர்வதேசப் போட்டிகளில் தமிழர்களின் பங்கேற்பு குறைவாகவே இருக்கிறது. ‘ப்ரோ-கபடி லீக்’ போட்டிகளுக்குப் பின் நிறைய வீரர்கள் உருவாகிவருகிறார்கள். பொதுவாகக் கபடி வீரர்களுக்கு ஒழுக்கம், உணவுக் கட்டுப்பாடு ரொம்ப முக்கியம். ட்ரை ஃப்ரூட்ஸ், பழங்கள், தானியங்கள் சாப்பிட்டாலே உடலில் நல்ல வலு உண்டாகும். மாமிசம் சாப்பிட்டாக வேண்டும் என்று கட்டாயமில்லை. ரன்னிங், ஜாகிங், ஜிம் வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

“என்னுடைய 25 ஆண்டு போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இந்த உலகக் கோப்பை. இதுபோன்று உழைக்கத் தயாராக உள்ள திறமையாளர்கள் தமிழகத்தில் நிறைய கிராமங்களில் இருக்கிறார்கள். அவர்களைக் கண்டறிந்து சிறந்த பயிற்சியை வழங்க ஒரு கிளப்பைத் தொடங்க வேண்டும் என்பதே என் குறிக்கோள்” என்கிறார்.

கட்டாயமாக ப்ரோ!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in