Published : 16 Aug 2022 03:36 PM
Last Updated : 16 Aug 2022 03:36 PM

மாத்தி யோசி 9: ஆக, இனி செல்ஃப் மார்க்கெட்டிங் பண்ணுங்க!

இப்போதெல்லாம் செய்தித் தாள்களில் அதிகமாக வருகிற செய்திகள் மாணவர்களின் தற்கொலைகள் பற்றியதுதான். அதிலும் தேர்வு முடிவுகள் வெளிவரும் காலகட்டத்தில் மாணவர்கள் பெறப்போகும் மதிபெண்களைவிட அவர்களின் மனநலன் பற்றிய கவலைகள் பெற்றோர்களுடன் சேர்ந்து மற்றவர்களும் கவலைப்படும் அளவுக்கு மாறிவிடுகிறது.

சரி, விஷயத்துக்கு வருவோம். எப்போதும் தோல்வி என்பது முடிவும் அல்ல, வெற்றி என்பது நிரந்தரமும் அல்ல. ஏனெனில் இரண்டும் வாழ்வில் ஒருமுறை மட்டுமே வருவதில்லை. வாழ்வில் நம்மை நிலை நிறுத்திக்கொள்ள தொடர் முயற்சிகள் மட்டுமே அவசியம். தொடக்கக் காலத்தில் தோல்வியடைந்தவர்கள்தான் இன்று நம் முன் வெற்றிகரமான ஆளுமைகளாக இருக்கிறார்கள் எனபதை மறந்துவிடக் கூடாது.

இப்பவும் உங்களுடைய நினைவில் நிற்கிற மாதிரி கஷ்டப்பட்டு உழைத்த விஷயங்கள் எவை என்று கேட்டால், எல்லோர்க்கும் சொல்வதற்கு ஒன்றிரண்டு விஷயங்கள் நிச்சயமாக இருக்கும். விரும்பி செய்த செயல்கள் 1௦௦ சதவீத வெற்றியைத்தான் தந்திருக்கிறது என்பது கல்வெட்டு போல உங்கள் மனதில் பதிந்திருக்கும்.

ஆனால், “படிச்சதோ நல்ல படிப்பு, நல்ல கல்லூரி. திறமை இருந்தும் இன்னும் வேலை கிடைச்சபாடில்லை. நான் தொடங்கிய இடத்திலேதான் இன்னும் நிற்கிறேன்.” என கூறுபவரா நீங்கள்....

வேலை வாய்ப்பை தேடிப்போனது அந்தக் காலம். நமக்கான வாய்ப்களை நாமே உருவாக்கிக்கொள்வது இந்தக் காலம். அதற்கு பெயர்தான் ‘செல்ஃப் பிராண்ட்’ (Self Brand). உங்கள் திறமை என்ன என்பதை மற்றவர்கள் அறியும்படி செய்வது. இதுவும் ஆதிகாலத்தில் இருந்து வருவதுதான். உலகில் முதல் ‘மார்க்கெட்டர்’ யார் தெரியுமா? ஆதாம் ஏவாள் பற்றிய கதையில் வரும் பாம்பு என்றுதான் சொல்வேன். அதுதானே, விலக்கப்பட்ட கனி என்ற இருவரின் நம்பிக்கையைத் தகர்த்து அந்தக் கனியைச் சாப்பிட வைத்தது.

ஊதியத்துக்கு ஏற்ற வேலை கிடைக்க வேண்டும் அல்லது வாங்குகிற ஊதியத்துக்கு வேலை செய்தால் போதும் என்ற வலையில் விழாமல் மாற்றி யோசித்து கடமைகளையும் பொறுப்புகளையும் உரிமை என நினைத்தால் அவர்களை நிறுவனம் தன்னுடைய தலையில் வைத்து கொண்டாடுவது மட்டுமின்றி தலைமையிடத்தில் வைத்தும் கொண்டாடும் .

நம்முடைய திறமைகளை வெளிக்காட்ட பல வழிகள் இருக்கின்றன. அதில், ஒன்றை தேர்ந்துதெடுத்து அதில் செயல்பட்டு நமது அடையாளத்தை அழுத்தமாகப் பதிவு செய்துவிட்டால் அங்கீகாரம் தேடி வருவது நிச்சயம். அதற்கு பெயரும் செல்ஃப் பிராண்ட்தான்.

சிலர் இதை தற்பெருமை என்று சொல்லக்கூடும். ஆனால், தற்பெருமையையும் செல்ஃப் பிராண்ட்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. தற்பெருமை என்பது இல்லாத ஓர் உயர் பிம்பத்தை தானும் நினைத்துகொண்டு மற்றவர்களிடமும் அதைப் பற்றியே பேசுவது. இதன் விளைவால் எரிச்சல்களையும் கோபங்களையும் மட்டுமே அறுவடை செய்ய முடியும். ஆனால், செல்ஃப் பிராண்ட் என்பது உள்ளபடி உண்மையான திறமையை அனைவருக்கும் உணர்த்துவது.



இன்று நமக்காக, வீட்டுக்காக வாங்கும் அநேகப் பொருட்கள் நிறுவனங்களின் ‘பிராண்டட்’ பொருட்களே. அவை எல்லாம் தரமாக இருப்பதாக நம்பி வாங்குகிறோம் என்பது இரண்டாவது விஷயம். முதலில் அவை எல்லாம் தொலைகாட்சி, செய்தித்தாள் மூலமாக நம்மை நோக்கிதான் முதல் அடியை எடுத்து வைக்கின்றன.வாடிக்கையாளர்களை உருவாக்கிக்கொள்ளவும் தக்கவைத்துகொள்ளவும் தங்கள் நிறுவனங்கள் ‘பிராண்ட்’ங்கில் கவனம் செலுத்துவது போல், நாமும் ஏன் நாம் முன்னேற்றதுக்காக ‘பிராண்’டிங்கைப் பயன்படுத்தக் கூடாது.

நம்மை பற்றிய விவரங்களையும் அவ்வப்போது செய்து வரும் சாதனைகளையும் சமூக வலைதளத்தில் பதிவிடுவது, தமது துறையில் முன்னணியாக இருக்கும் சாதனையாளர்களுடன் அறிவுபூர்வமான நட்புறவை தொடர்வது, நிறுவனத்தில் புதிதாக ஒரு திட்டத்தைத் தொடங்கினால். நாமே ஆர்வமாக அதில் ஒரு வாய்ப்பு கேட்பது என நம் திறமயை நிரூபிக்க அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

நமக்கான காலம் இன்னும் கடந்து விடவில்லை. திறமையை வெளிபடுத்த ‘செல்ஃப் பிராண்ட்’ என்ற உத்தியை செயல்படுத்திப் பாருங்கள். அது உங்கள் முன்னேற்றத்துக்கான ஒரு திறவுகோல்!

(இன்னும் யோசிப்போம்)
கட்டுரையாளர்: தனியார் கல்லூரி மேலாண்மை துறைத் தலைவர்
தொடர்புக்கு: karthikk_77@yahoo.com


‘இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x