இந்தியா 75: பாய்ச்சல் காட்டிய தொழில்நுட்பங்கள்

இந்தியா 75: பாய்ச்சல் காட்டிய தொழில்நுட்பங்கள்
Updated on
3 min read

உள்ளங்கையில் உலகம் என்று சொல்லும் அளவுக்கு இன்று திறன்பேசிகளின் காலமாக உள்ளது. வானொலி, தொலைக்காட்சி, கணினி, கேமரா எனத் தனித்தனியாகத் தேவைப்பட்ட மின்னணுக்கருவிகள் எல்லாம் இன்று ஒரு கருவியான திறன்பேசியிலேயே கிடைத்துவிடுகின்றன.

ஆனால், கடந்த 75 ஆண்டுகளில் ஒவ்வொரு தொழில்நுட்பத்தையும் கடந்துதான் இந்தியா வளர்ந்து வந்திருக்கிறது. இந்தியா சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளில் அதன் காலப் பயணத்தைத் திரும்பிப் பார்ப்போம்.

ஒலிச் சேவை

பிரிட்டிஷ் இந்தியாவிலேயே வானொலி சேவை தொடங்கிவிட்டது. இந்தியாவில் முதன்முறையாக 1922-23இல் வானொலி ஒலிபரப்புச் சேவை தொடங்கியது.

1930 களில் சோதனை முயற்சியாக சில மாநிலங்களில் வானொலி ஒலிபரப்புச் சேவை தொடங்கியது. பின்னர் 1936 இல் ‘அகில இந்திய வானொலி’யாக மாறின. நாடு சுதந்திரமடைந்தபோது மதராஸ், திருச்சி உள்பட ஆறு இடங்களில்தான் வானொலி நிலையங்கள் இருந்தன.

இன்று பெரிய அளவில் பேசப்படும் எஃப்.எம். ரேடியோவின் முதல் சேவை 1977இல் மதராஸில்தான் தொடங்கியது. 1950களில் தொடங்கி டெஸ்லா, மர்பி, ஷார்ப், பிலிப்ஸ் போன்ற வானொலிப் பெட்டிகள் ஹார்மோனியப் பெட்டித் தோற்றத்தில் வீடுகளை அலங்கரித்தன. சிறிய அளவிலான டிரான்சிஸ்டர்களும், பாக்கெட் ரேடியோக்களும் இல்லாத வீடுகளே இல்லை என்கிற நிலை 1970-80களில் உருவானது.

ஒளிச் சேவை

வெறுமனே ஒலியை வானொலியில் கேட்டு வந்தவர்களுக்கு ஒளியையும் சேர்த்துப் பார்க்கும் வாய்ப்பைத் தொலைக்காட்சி வழங்கியது. இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பிறகுதான் தொலைக்காட்சி அறிமுகமானது. 1951ஆம் ஆண்டில் ஜபல்பூரில் உள்ள பொறியியல் கல்லூரியில்தான் முதன்முதலில் ‘தொலைக்காட்சி டிரான்ஸ்மிட்டர்’ அமைக்கப்பட்டது.

1959ஆம் ஆண்டில் டெல்லியில் தொலைக்காட்சி நிலையம் அமைக்கப்பட்டுச் சோதனை முயற்சியாக ஒளிபரப்புச் சேவை தொடங்கியது. பின்னர் ஒவ்வொரு பகுதிக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்பட்டது.

1975இல் செயற்கைக்கோள் மூலமாகத் தொலைக்காட்சி சோதனை (Satellite Instructional Television Experiment) தொடங்கப்பட்டது, தொலைக்காட்சியின் வளர்ச்சி வேகமெடுக்க வழிகாட்டியது. ஒரு சோதனை செயற்கைக்கோள் திட்டமாகத்தான் இது தொடங்கப்பட்டது.

இதன்பிறகே பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி மூலம் வரத் தொடங்கின. 1980களில் தொடங்கி தொலைக்காட்சி மிகப் பெரிய வளர்ச்சியை நோக்கிப் பயணித்தது. பணக்காரர்களின் அந்தஸ்துக் குறியீடாக வீடுகளில் தொலைக்காட்சி கருதப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் சாலிடர், டயனோரா, கெல்ட்ரான், ஒனிடா, பிபிஎல் உள்படப் பல நிறுவனங்களின் தொலைக்காட்சிப் பெட்டிகள் இந்தியர்களின் வரவேற்பறைகளை அலங்கரித்தன.

இன்று இந்தியத் தொலைக்காட்சி சந்தை வேறு வடிவத்தை எட்டிவிட்டது. 850க்கும் மேற்பட்ட அலைவரிசைகள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. அன்று ஷட்டர் வைத்த டி.வி. வைத்திருந்த காலம் மாறி, இன்று ஒல்லியான ஸ்மார்ட் டி.வி.களின் வருகையால் வீட்டில் தொலைக்காட்சியைப் பார்க்கும் தரமும் தலைகீழாக மாறியிருக்கிறது.

வந்ததே கணினி

மனிதக் கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது கணினி என்று மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சொல்வார். எல்லாச் சேவைகளையும் ஒரு புள்ளியில் இணைத்தவை கணினிகள்தாம். இந்தியாவில் கல்கத்தாவில் உள்ள புள்ளியியல் நிறுவனத்தில் 1955ஆம் ஆண்டில் முதன்முறையாகக் கணினி நிறுவப்பட்டது.

இந்த முதல் கணினியை வாங்குவதற்கு ரூ.10 லட்சம் வரை செலவு செய்யப்பட்டது. அன்று கணினி மிகவும் விலை உயர்ந்த பொருளாகவே இருந்தது. இதனால், இந்தியாவிலேயே கணினியை உருவாக்கும் முயற்சியில் இந்தியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

அதன் ஒரு பகுதியாக மும்பையில் உள்ள டாடா ஆய்வு நிறுவனத்தில் 1950-60களில் முதன் முறையாகக் கணினி உருவாக்கப்பட்டது. அதற்கான நிரல்களும் அங்கேயே எழுதப்பட்டன. 1980களுக்குப் பிறகுதான் இந்தியாவிலேயே கணினியை உருவாக்கும் தொழில்நுட்பங்கள் பெருகின.

‘பரம்’ என்கிற பெயரில் சூப்பர் கணினிகள் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டன. 90களுக்குப் பிறகு கணினியின் வளர்ச்சி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விரிவடைந்தது.

குறிப்பாக 1991இல் உலகமயமாக்கல் நிகழ்வுக்குப் பிறகு கணினி சார்ந்த வேலைவாய்ப்பும் இந்தியாவில் பெரிய அளவில் உருவானது. இதனால், இந்தியாவில் கணினிப் புரட்சி ஏற்பட்டது. இன்று கணினி இல்லாத இடமே இல்லை என்றும் சொல்லும் அளவுக்கு எல்லா இடங்களிலும் கணினியும் அதன் சேவையும் வியாபித்திருக்கின்றன.

உடன் வரும் ‘பேசி’

மொபைல் போன்களின் முன்னோடி தொலைபேசிகள்தாம். ஒரு காலத்தில் வசதியானவர்கள் வீடுகளில் மட்டுமே தொலைபேசிப் பயன்பாடு இருந்த காலம் மாறி, இன்று ஒவ்வொருவரின் கையிலும் திறன்பேசிகள் இருப்பதற்கு மொபைல் போன்களின் வருகை முக்கியக் காரணம்.

இந்தியாவில் முதல் மொபைல் போன் பயன்பாடு 1995இல்தான் தொடங்கியது. ஜூலை 31 அன்று கல்கத்தாவில் இருந்து முதல்வர் ஜோதிபாசு, டெல்லியில் இருந்த தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் சுக்ராமை அழைத்து பேசினார்.

அதன் தொடர்ச்சியாக முதல் இணைய சேவையும் டெல்லியில் அதே ஆண்டு தொடங்கியது. மொபைலும் இணைய சேவையும் ஒருசேர இந்தியாவில் கிடைக்கத் தொடங்கியபோது அதன் வீச்சை அன்று யாரும் கணித்திருக்கமாட்டார்கள்.

இன்று இந்தியாவில் 115 கோடிக்கும் அதிகமான மொபைல் பயனாளர்கள் உள்ளனர். இந்த 27 ஆண்டுகளில் மொபைல் சந்தை பெரும் வளர்ச்சியை அடைத்திருப்பதுபோல இணைய சேவையின் வளர்ச்சியும் ஏறுமுகமாகவே உள்ளது.

திறன்பேசியிலேயே பாட்டு கேட்க முடிகிறது, படம் பார்க்க முடிகிறது, மின்னஞ்சல் அனுப்ப முடிகிறது, ஒளிப்படங்களை எடுக்க முடிகிறது. ஒவ்வொரு சேவைக்கும் ஒரு கருவி என்கிற நிலை மாறி ஒரு கருவிலேயே பல சேவை என்பதற்குத் திறன்பேசிகள் உதாரணமாகிவிட்டன.

சமூக வலைத்தளங்களின் வருகை

இணைய சேவையைப் பற்றி பேசும்போது சமூக வலைத்தளங்களைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. திறன்பேசியும் இணைய சேவையும் இணைந்து இந்தியாவில் சமூக வலைத்தளங்களின் போக்கையே மாற்றியிருக்கின்றன. இந்தியாவில் மின்னஞ்சலோடுதான் இணைய சேவை தொடங்கியது.

1990களின் இறுதியில் சாட்டிங் உள்ளிட்ட இணைய சேவைகள் உலகத்தையே ஒரு குடைக்குள் கொண்டுவந்த உணர்வைத் தந்தன. 2005இல் கூகுள் தொடங்கிய ‘ஆர்குட்’தான் முதல் சமூக வலைத்தள சேவை.

இந்தியாவில் இதற்கு இளைய தலைமுறையினர் அளித்த ஆதரவு அபரிமிதமானது. இந்தத் தளம் சமூகங்களை உருவாக்கவும் ஒன்றிணைக்கும் வகையிலும் இருந்ததால் இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘ஆர்குட்’டின் வெற்றியின் தொடர்ச்சியாகத்தான் ‘ஃபேஸ்புக்’, ‘டிவிட்டர்’ போன்ற சேவைகள் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தன.

வந்த வேகத்திலேயே பெரும் வளர்ச்சியை ‘ஃபேஸ்புக்’ பெற்றது. இந்தியாவில் இன்று சுமார் 75 கோடிக்கும் அதிகமான சமூக வலைத்தள கணக்குகள் உள்ளன. தினமும் சராசரியாக 2.36 மணி நேரத்தை ஒவ்வொரு இந்தியரும் சமூக வலைத்தளங்களில் செலவிடும் அளவுக்கு அதன் மீதான மோகமும் அதிகரித்திருக்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in