

பாப், ராப், பாலே எனப் பன்னாட்டு இசை, நடனங்களை விட, பாரம்பரிய நாட்டுப்புறப் பாட்டுக்கும், தப்பாட்டத்துக்கும் ஆடியே கல்லூரிக் கலை விழாக்களில் மாணவர்கள் அனைவரையும் ‘லைக்’ பட்டனைத் தட்ட வைத்துவிடுவார்கள் சில இளைஞர்கள். ஆனால் ஒரு நிமிடப் பேச்சில்கூட 10 ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தும் அவர்களிடம் முழுக்கவே தமிழில் பேச வேண்டும் என்று வற்புறுத்தினால் இடத்தைக் காலி செய்துவிடுவார்கள் என்றே நம்பியிருப்போம். எனினும் கொஞ்சம் முயற்சி செய்தால் கல்லூரி மாணவர்களிடம் தாய்மொழிப் பற்றை வெளிப்படுத்தி, அனைவரையும் தமிழ்ப் பேச வைக்க முடியும் என்பதை தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சியில் காண முடிந்தது.
கடந்த 14 முதல் 16-ம் தேதி வரை ‘தமிழகப் பெண்கள் செயற்களம்’ சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் நடைபெற்ற 10-ம் தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சியில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முதல் பங்கேற்பாளர்கள் வரை அனைவருமே தமிழில் மட்டுமே உரையாடினார்கள். ‘ஹே… ட்யூட் தேங்க்ஸ்!’ என்று ‘நன்றி’ மறந்த தமிழர்களைத் தமிழில் நன்றி தெரிவிக்கச் சொல்ல வைத்தது, கண்காட்சியின் ‘ஹைலைட்!’.
அறிவியல் நகரத் துணைத் தலைவர் உ. சகாயம் கண்காட்சியைத் தொடங்கி வைக்க, சித்த மருத்துவர் கு. சிவராமன் சிறப்புரை ஆற்றினார். மூன்று நாள் நிகழ்விலும் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றுப் பேசினார்கள். ‘கலக்க வர்றாங்க தமிழ்ப் பசங்க’ எனும் தமிழ்ப் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சியில், விவசாய நிலங்களில் மீத்தேன் வாயு எடுப்பது குறித்த வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை டபிள்யு.சி.சி. மாணவிகள் வழங்கினர். அத்துடன் விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்த நாடகம், துரித உணவு ஏற்படுத்தும் அபாயம், தமிழர் பெருமைகள் என பல்வேறு தலைப்புகளில் நாடகம், நடனம், பல குரலில் பேசுவது என 19 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் அசத்தினர்.
உலகம் தோன்றியது முதல் ஆங்கிலேயர் காலம் வரையிலான தமிழர் வரலாறு, மரபு உணவு வகைகள், விளையாட்டுகள், மாநிலத்தின் 32 மாவட்டச் சுற்றுலா இடங்கள், சிறப்புகள், தலைவர்களின் வரலாறு அனைத்துமே படக்காட்சிகளாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைவரையும் இது ஈர்த்தது.
இடையிடையே கொக்காரை, தாரை, திருச்சின்னம், தவண்டை இசைக்கருவிகளைத் தாங்களே ஆர்வத்துடன் இசைத்துப் பார்த்து மகிழ்ந்தனர் கல்லூரி மாணவர்கள். ஆங்கிலத்தில் பேசுவதுதான் பெருமை என நினைக்கிறார்கள். ஆனால் தமிழில் கெத்து, மாஸ், சூப்பரு என்ற வார்த்தைகளுக்கு இணையான, அதை விட அருமையான தமிழ் வார்த்தைகள் உள்ளன. என்ன, அதையும் ஒரு திரைப்படக் கதாநாயகன் சொல்ல வேண்டும் என்று கொஞ்சம் ஆதங்கப்பட்டார் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாணவர் செந்தில்குமார்.
இந்தக் கண்காட்சியில் தமிழ் மண் சார்ந்த பயன்தரும் மூலிகைகள், அதன் விளக்கங்களுடன், இலவச சித்த மருத்துவ முகாமும், மரபு உணவு அரங்குகளும் களை கட்டின. அத்துடன் தாய்மொழியில் கையெழுத்திடவும் வலியுறுத்தியதைப் பலரும் பின்பற்றுவதாக உறுதியேற்றனர்.
மறந்துபோன தமிழர் மரபுகளை நினைவுகூர இந்தக் கண்காட்சியைத் தொடர்ந்து 10 ஆண்டுகளாகத் தமிழகப் பெண்கள் செயற்களம் நடத்துகிறது என்கிறார் அதன் ஒருங்கிணைப்பாளர் இசைமொழி. “மொழியையும், வரலாறையும் மறக்கும் இனம் தன் பெருமையையும் இழந்துவிடும். இந்தக் கால மாணவர்களுக்கு மொழியின் பேரால் உணர்த்தப்பட வேண்டியது நிறைய இருக்கிறது.
அதனால்தான் ‘தமிழகப் பெண்கள் செயற்களம்’ தொடர்ச்சியாக தமிழரின் பண்பாட்டைக் கொண்டு சேர்க்க தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சியை நடத்துகிறது. விரைவில் சென்னையைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இந்தக் கண்காட்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்றார் அவர். என்னதான் பேபி, பெப் எனக் கத்திக் கதறும் இந்த இளைஞர்கள், மகிழ்ச்சி, சிறப்பு எனத் தமிழை வரவேற்று, மரபின் மீது பார்வையை;j திருப்பியிருக்கிறார்கள் என்பது சற்று மகிழ்ச்சிதான்.
தமிழ் வாழ்க!