

என்னைச் சந்திக்க வந்திருந்தனர் அந்த இளம் ஜோடி. “முடியலை சார். எதுக்கெடுத்தாலும் சந்தேகப்படறார். யாரும் என்கிட்டே பேசக் கூடாதுங்கறார். எப்படி சார் அப்படி இருக்க முடியும்? பால்காரன் முதல் கொண்டு கேபிள் பையன்வரை என்னை இணைச்சு வெச்சு சந்தேகப்படறார். நான் தப்பு செய்யலேன்னு அவருக்கு நல்லாத் தெரியும். சமயங்கள்ல அவர் முகத்தை மூடிட்டு அழறதைப் பார்க்கப் பாவமா இருக்கு. எங்களோடது லவ் மேரேஜ்ங்கிறதால என் அம்மா வீட்டுக்கும் போக முடியாது. இவர் வீட்டிலும் யாரோட சப்போர்ட்டும் இல்லே. என் மீது அவ்வளவு பிரியம் வச்சிருப்பார். இப்போ ஆறு மாசமா எங்க நிம்மதியே போச்சு” என்று வெதும்பலாக ஆரம்பித்தார் அந்த இளம் மனைவி. கையில் எட்டு மாதக் குழந்தை.
“எனக்காக அவங்க வீட்டில தனி ஆளா போராடினா. கல்யாணமாகி அஞ்சு வருஷமாகுது. சொன்னா நம்ப மாட்டீங்க. இதுவரைக்கும் அம்மா வீட்டுக்குனு அவ போனதே இல்லை. போகவும் விரும்பவில்லை. நான்னா அவளுக்கு உயிர் சார்… ஆனா இப்போ அவ சரியில்லே சார்” என்றார் அந்த இளைஞர்.
இல்லம் சங்கீதம்
வீட்டின் பின்புறத்தில் சிறியதாக வொர்க்ஷாப் வைத்து நடத்துகிறாராம்.
“நாள் முழுக்க அவர் கண் பார்வையிலேயே இருக்கிறேன். குழந்தையைப் பார்க்க, சாப்பிடன்னு ஒரு நாளுக்குக் குறைஞ்சது ஏழு முறையாவது வீட்டுக்கு வந்து போய்க்கிட்டுத்தான் இருப்பார். தன் சந்தேகம் அர்த்தமில்லாதது, அபத்தமானதுன்னு அவருக்கே தெரியுது. ஆனா பாவம் எதனாலோ இப்படி ஆகிட்டார். எப்படியாச்சும் சரி பண்ணுங்க டாக்டர்” என்று இயலாமையும் ஆற்றாமையும் கலந்து புலம்பினார் அந்தப் பெண்.
சின்ன விஷயத்துக்கெல்லாம் முணுக் முணுக்கென்று கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்குப் போகும் பெண்களுக்கு மத்தியில் ஐந்து ஆண்டுகளாகத் தன் பிறந்த வீட்டுக்குப் போகாத அந்தப் பெண்ணை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. இவர்களின் காதல்தான் பிறந்த வீட்டின் எதிர்ப்புக்குக் காரணமாம். சரி... விஷயத்துக்கு வருவோம்.
“உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்கா?” என்று கேட்டேன். “ம்…” என்று தலையாட்டினார். “முன்னெல்லாம் மாசத்துக்கு ரெண்டு முறைதான் குடிக்கப் போவார். இப்போ கொஞ்சம் அதிகமாகக் குடிக்கிறார். வாரத்துல ரெண்டு நாளாவது குடிச்சிடுவார். கேட்டா, ‘வேலை கஷ்டமா இருக்கு. உடல் வலி தெரியாம இருக்க குடிக்கிறேன்’னு சொல்றார். குடிச்சிட்டா கலாட்டா எல்லாம் பண்ண மாட்டார். இதனால ஏதும் பிரச்சினையா டாக்டர்?” என்று அப்பாவியாகக் கேட்டார் அந்தப் பெண்.
காதல் என்பதன் சக்தியைப் பாருங்கள். கணவன் லேசாகக் கையை ஓங்கியதற்காகக் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்குப் போய் அழுது ஆர்ப்பரித்தார் ஒரு பெண். இவர் ஒன்று சொல்லப்போக, அது ஒன்பதாகிப்போய் அந்தப் பெண்ணின் அண்ணன்மார்கள் முஷ்டியை உயர்த்த, பிறகென்ன… விஷயம் இப்போது மகளிர் போலீஸில். போன வாரம் இப்படி ஒரு விவகாரத்தைப் பார்த்தேன்.
ஆரோக்கியமற்ற பொறாமை
ஆனால் இந்தத் தம்பதியின் விஷயத்திலோ கணவர் அனாவசியமாகச் சந்தேகப்படுகிறார். ஆனால் இருவருக்கும் பரஸ்பரம் காதல் இருக்கிறது. இருவருமே காதலில் ஜெயிக்கப் பாடுபட்டிருக்கிறார்கள். ஆக என்ன சிரமம் வந்தாலும் நமக்குள் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியில் நிறையத் தாங்குகிறார் அந்தப் பெண். ஒழுக்கமாக இருக்கும் ஒரு பெண்ணை எந்த ஆதாரமும் இல்லாமல் அவள் காதல் கணவனே தவறாகப் பேசுவது என்பது கொடுமையிலும் கொடுமை.
என்ன ஆயிற்று அந்த இளைஞனுக்கு? அவருக்கு ஏற்பட்டிருப்பது ஒருவித உளவியல் கோளாறு. ஆரோக்கியமற்ற ஒரு பொறாமை (Morbid jealousy) என்று சொல்லலாம். ஆண், பெண் உறவில் அவ்வப்போது சின்னப் பொறாமைகள் வருவது இயல்பே. நம்மவர் மீதுள்ள அதீதப் பற்றின் காரணமாகவும் நம் மீதே நமக்குள்ள தாழ்வு மனப்பான்மை, பாதுகாப்பற்ற உணர்வு இவை காரணமாகவும் பொறாமை வரலாம். ஆனால் அதுவே எல்லை மீறிப்போகும் போதுதான் பல சிக்கல்கள் எழுகின்றன.
அலைக்கழிக்கும் சந்தேகம்
பார்ட்னரை ஃபாலோ செய்வது, அவரது சமூக வலைத்தள தொடர்புகளைத் திருட்டுத்தனமாக ஆராய்வது, வீட்டில் கேமராவை வைத்து ரெகார்டு செய்யலாமா அல்லது ஏதேனும் தனியார் உளவாளிகளை ஏற்பாடு செய்யலாமா என யோசிப்பது என்று இவர்களின் சந்தேகம் பல கோணங்களில் பரவும். விளைவு? தினமும் வீட்டில் சண்டையும் சச்சரவும்தான். வாக்குவாதம் முற்றினால் போட்டு உதைக்க வேண்டியது. பிறகு போலீஸ், வழக்கு, விசாரணை இத்யாதிகள்.
மனைவி தனக்கு துரோகம் இழைக்கிறார் என்ற இந்த ஒரு நினைப்பு, பல உளவியல் கோளாறுகளுக்கான ஒரு அறிகுறி. மனச்சிதைவு நோய், மிதமிஞ்சிய மதுப்பழக்கம், போதை வஸ்துக்களுக்கு அடிமையாவது, இருதுருவக் கோளாறு மற்றும் ஆளுமைக் கோளாறுகள்… இப்படிப் பல கோளாறுகளின் ஒரு வெளிப்பாடாக இருக்கலாம் இந்தச் சந்தேக நோய்.
எங்கே போனாய், எதற்கு இவ்வளவு நேரம், அவன் எதற்கு உனக்கு ஹலோ சொன்னான், நான் கறுப்பாக இருப்பதால் உனக்கு சலித்து விட்டதா என்பன போன்ற இம்சைகள் தொடங்கி உச்சகட்டமாக படுக்கை விரிப்புகளைச் சோதனை செய்வதுவரை இவரின் நடவடிக்கைகள் எல்லை தாண்டிய பயங்கரவாதம் போலத்தான் இருக்கும்.
இல்லாத ஒன்றை இருப்பது போல் நினைப்பதை ‘டெல்யூஷன்’ (Delusion) என்கிறது உளவியல். மருட்சிக் கோளாறு (Delusional disorder) அல்லது எண்ண மாயை என்று அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் ஒரு கதாபாத்திரத்துக்கு இப்படி ஒரு சந்தேக நோய் இருந்தது. அதனால் இந்நோயை ‘ஒதெல்லோ சிண்ட்ரோம்’ (Othello syndrome) என்றே அழைப்பார்கள்.
சாத்தியப்படுத்திய காதல்!
நல்ல மருத்துவச் சிகிச்சைகள் உள்ளன. மனநல மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளைத் தொடர்ந்து உட்கொண்டாலே பாதி சந்தேகங்கள் தீர்ந்துபோகும். குடி முதலான போதைப் பழக்கங்களை முழுவதும் நிறுத்த வேண்டும். இவை தவிர ஏகப்பட்ட உளவியல் சிகிச்சைகள் உள்ளன. அறிவாற்றல் மற்றும் நடத்தை மாற்று சிகிச்சை (cognitive behaviour therapy) என்பது முக்கியமானது. நமது எண்ணங்களை மாற்றி நடத்தையையும் சீரமைக்கும் ஒரு அற்புதமான சைக்கோதெரபி இது.
சிகிச்சை ஆரம்பித்த மூன்றே வாரங்களில் அந்த இளைஞனிடம் மாற்றம் தெரிந்தது. தொடர்ச்சியான கவுன்சலிங்கும் தரப்பட அவர் வெகுவாகத் தேறினார்.
எத்தனை சிக்கல்கள் வந்தாலும், அது மனநோயாகவே இருந்தாலும் தன் கணவனைப் பிரியாது அவருடனே இருந்து நோயை மாத்திரமல்ல, வாழ்க்கையிலும் ஜெயித்தார் அந்தப் பெண்! அவர்களுக்கிடையே மலர்ந்திருந்த உண்மைக் காதலே இதைச் சாத்தியப்படுத்தியது!
எல்லாமே பேசலாம்! ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும். |
(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com