விநோதமான கால்பந்தாட்டம்

விநோதமான கால்பந்தாட்டம்
Updated on
1 min read

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நாளுக்கு நாள் விறுவிறுப்படைந்து வருகின்றன. இந்நிலையில் கால்பந்து தொடர்பான ஓஷோவின் வேடிக்கையான கதை ஒன்றைப் பகிர்வது பொருத்தமானதாக இருக்கும். இந்தக் கதையில் கால்பந்துப் போட்டி, பிரேசிலுக்கும் ஜெர்மனிக்குமானது அல்ல. ஆனாலும் விறுவிறுப்புக்கும் சுவாரசியத்திற்கும் பஞ்சமில்லாத போட்டி. இனி போட்டி தொடங்குகிறது:

யானைகளுக்கும் பூச்சிகளுக்கும் கால்பந்துப் போட்டி நடந்தது. இப்போது நடந்துவரும் உலகக் கோப்பைப் போட்டியைக் காணப் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருப்பதுபோல இந்தப் போட்டியைக் காணவும் ரசிகர்கள் குவிந்துவிட்டார்கள். போட்டியில் எதிர்பார்த்ததுபோலவே யானைகள்தாம் முன்னணி வகித்தன. ஆட்ட நேர இடைவேளைவரை யானைகள் பத்து கோல்களை அடித்திருந்தன. பூச்சிகளின் நிலைமையோ பரிதாபமாக இருந்தது. அவை ஒரு கோல்கூட அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் ஆட்டம் தொடங்க, பூச்சி டீமின் சார்பில் ஒரு புதிய வீரர் களமிறக்கப்பட்டார். அந்தப் புதிய வீரர் வேறு யாருமல்ல பூரான்தான். பூரான் களமிறங்கியவுடன் ஆட்டம் தலைகீழாக மாறிவிட்டது. பூரான் யானைகளுக்கு இடையே புகுந்து தன் பல கால்களைப் பயன்படுத்தி வரிசையாகக் கோல்களைப் போட்டு ஆச்சரியப்படுத்தியது. ஆட்டத்தின் இறுதியில் பூச்சிகள் குழு இருபதுக்குப் பத்து என்ற கணக்கில் வென்றது. விளையாட்டு வீரர்கள் களத்தைவிட்டு வெளியேறும்போது, யானை டீமின் கேப்டன், பூச்சி டீமின் கேப்டனிடம், “உங்கள் முன்னணி ஆட்டக்காரர் பூரானை ஏன் முதல்முதலில் இறக்கவில்லை?”எனக் கேட்டது. அதற்குப் பூச்சிக் கேப்டன், “அது வேறொன்றுமில்லை பூரான் தன்னோட நூறு கால்களுக்கும் பூட்ஸ் மாட்ட அவ்வளவு நேரமாகிவிட்டது”

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in