பாப்கார்ன்: குகையில் இசைக் கச்சேரி

பாப்கார்ன்: குகையில் இசைக் கச்சேரி

Published on

இந்தியாவில் இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கும் பகுதியாக உள்ளன வட கிழக்கு மாநிலங்கள். இயற்கையைப் பாதுகாப்பதை வலியுறுத்தியும் வருங்கால இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கவும் மேகாலயாவைச் சேர்ந்த நாட்டுப்புற இளம் பாடகர்கள், குகையில் இசைக் கச்சேரியை நடத்தியிருக்கிறார்கள்.

சோஹ்ரா என்கிற இடத்தில் அமைந்துள்ள அர்வா என்கிற குகையில்தான் இந்த இசைக் கச்சேரி நடந்தேறியிருக்கிறது. இதில் பங்கேற்ற நாட்டுப்புற பாடகர்கள் சுற்றுச்சூழல் சார்ந்த சிறப்புப் பாடல்களைப் பாடினர். இந்த இசைக் கச்சேரியைக் காண மக்களும் கூடினர். பெரும் வரவேற்பு பெற்ற இந்த இசைக் கச்சேரி, இந்தியாவில் முதன்முறையாகக் குகையில் நடைபெற்ற இசைக் கச்சேரி என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது.

தேவையா இந்த ரீல்ஸ்?

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கைத் திறந்தாலே ரீல்ஸ்கள் வண்டி வண்டியாக அணிவகுக்கின்றன. ரீல்ஸ் வைக்காவிட்டால் தெய்வ குத்தம் ஆகிவிடும் என்கிற ரேஞ்சுக்கு இளைஞர்களும் இளம்பெண்களும் ரீல்ஸ் மோகத்தில் இருந்துவருகிறார்கள். இந்த ரீல்ஸ் எடுப்பதற்காக இடம், பொருள் என எதையுமே பார்ப்பதில்லை.

தோணும் இடங்களில் எல்லாம் ரீல்ஸுக்காக மொபைல் போனைக் கையில் எடுத்துவிடுகிறார்கள். அண்மையில் ஹைதராபாத் மெட்ரே ரயிலில் இளம் பெண் ஒருவர் ரீல்ஸுக்காக நடனம் ஆடியதைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். இதைக் கண்ட மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் அந்தப் பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ரீல்ஸ் பேர்வழிகள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

நைட்டிக்கு மாறலாமே ஆண்கள்!

ஐரோப்பிய நாடுகளில் சிக்னல்கள், தண்டவாளங்கள் எல்லாம் உருகி ஓடும் அளவுக்கு வெப்பம் அதிகரித்துவருகிறது. வெப்பத்தைத் தாங்க முடியாமல் அலறும் ஐரோப்பியர்களுக்கு பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஜில் டமாடக் என்பவர் யோசனை ஒன்றைக் கூறியிருப்பது வைரலாகிவிட்டது.

கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க பல யோசனைகளை அடுக்கிய அவர், கடைசியாகச் சொன்னதுதான் ஹைலைட். பெண்கள் அணியும் நைட்டி போன்ற ஆடையை ஆண்கள் அணியும்படி சொல்லியிருக்கிறார். யோசனை சொன்னதோடு நிற்காமல் பிலிப்பைன்ஸில் அணியும் அந்த ஆடையையும் அவர் பகிர்ந்திருக்கிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in