

அவர் ஒரு தொழிலதிபர். தொழிலதிபர்னா சில பல ஆசைகள் இருக்கத்தானே செய்யும்.‘ஜிகர்தண்டா’ அசால்ட் சேது போல தலைகீழாகத் தொங்கியாவது சினிமாவில் ஹீரோவாக நடித்துவிட வேண்டும் என்பது அவரது தீராத ஆசை.
அதற்காகத் துணி விற்று மணி (Money) சேர்த்தார். படம் எடுப்பதற்கான பணம் சேர்ந்துவிட்டது. பணம் சேரும். வயது போகவல்லவா செய்யும்? இருந்தாலும் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தனாக விசேஷ விக் வாங்கி மண்டையை மறைத்தார். அனைத்து பியூட்டி கிரீம்களையும் கொஞ்சம் கொஞ்சம் பூசி அழகாக்கிக்கொள்ள முயன்றார்.
தயாரிப்பு, மேக்கப் எல்லாம் ஓகே. ஆனால், படத்தை யாராவது இயக்கியாக வேண்டுமே. இந்தக் கேள்வியுடன் கடையில் குறுக்கும் நெடுக்குமா நடந்தவர் கண்ணில், அந்தக் கடை விளம்பரமே பட்டது. எலி-பூனையை ஞாபகப்படுத்தும் இரட்டை இயக்குநர்களைப் பார்த்து, ‘தன்னை வைத்து ஒரு படம் எடுக்க முடியுமா?’ என வாய்விட்டே கேட்டும்விட்டார்.
கோட்டைவிட்டவன் வாயில் குல்பி ஐஸே விழுந்ததுபோல் குஷியாகிவிட்ட அந்த இயக்குநர்கள் ஆளுக்கு ஒன்று என ‘டபுள் ஓகே’ சொன்னார்கள்.
கொண்டையை மறைக்க மறந்த வடிவேலுபோல், கதை என்கிற வஸ்து வேண்டுமே என்று கையைப் பிசைந்துகொண்டே தலையில் தட்டித்தட்டி யோசித்தார்கள் இயக்குநர்கள். ஆனால், என்ன ஒரு காவாலித்தனம்.
கதை அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. வாத்தியாரின் திரைக்காவியமான ‘உலகம் சுற்றும் வாலிபன்’, தலைவரின் ‘சிவாஜி’ ஆகியவற்றை மிக்ஸியில் தூக்கிப் போட்டார்கள். அரைந்தும் அரையாத மாவாக ஒரு கதை வந்துசேர்ந்தது.
‘நீங்கதான் சார் அடுத்த ‘பிரபஞ்ச ஸ்டார்’ என்று உசுப்பேற்றி, இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அவரை நடக்க வைத்தார்கள். கேமராமேன் எல்லாவற்றையும் ஷூட் செய்துகொண்டே வந்தார்.
சினிமாவில் பயன்படுத்திய துணிகளை எல்லாம் கஸ்டமர்களுக்கு ஆடித் தள்ளுபடியில் விற்றுவிட்டுச் சற்றுப் காலாற உட்காரப் போனவரை, இயக்குநர்கள் விட்டுவிடவில்லை. கையைக் காலை ஆட்டவைத்து டான்ஸ், ஃபைட் என்று நிறையவே வேலை வாங்கினார்கள்.
அப்போதுதான் அந்த மிராக்கிள் நடந்தது. அவருக்குள் தூங்கிக்கொண்டிருந்த ‘ஹீரோ ஆசை’ விழித்தெழுந்துவிட்டது. ஆனால், அவருக்கு அடிக்கடி மயக்கம் வருகிற மாதிரியும் இருந்தது. அதற்காக சிங்கம் களம் இறங்காமல் போய்விடுமா? பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக் எழுதிக் கொடுத்தார்கள். அதையும் அசராமல் பேசிவிட்டார். யார் செய்த புண்ணியமோ படம் எப்படியோ முடிந்துவிட்டது.
எப்படி முடித்தாலும் படம் கடைசியாக தியேட்டருக்குத்தானே வந்தாக வேண்டும்? ஆடித் தள்ளுபடியில் கடைக்கே ஹவுஸ்ஃபுல் போட்டவர்களுக்கு, தியேட்டருக்கா ஆள் வரவழைக்கத் தெரியாது? படத்தில் வரும் அனைவரும் நாயகனைத் திரும்பத் திரும்பப் பாராட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஏன் பாராட்டு கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. டயலாக் அப்படி எழுதப்பட்டிருந்தால், பாவம் அவர்களும் என்னதான் செய்வார்கள்.
நடித்தவர்களே இவ்வளவு பாடுபட்டால், ரசிகர்கள் மட்டும் சும்மா இருக்க முடியுமா என்ன? இடைவேளைவரை உயிரைக் கையில் பிடித்தபடி பார்த்த அனைவரும் இடைவேளையின்போது விளம்பரம் வேண்டாம், படத்தைப் போடுங்கள் என கூச்சலிட்டார்கள். ஒன்றரை மணிநேரத்துக்கு விளம்பரத்தையே பார்த்துக் கொண்டிருந்தவர்கள், வேறு என்னதான் கேட்பார்கள்.
பாப்கார்னையும் பப்ஸையும் கொடுத்து அவர்களை உட்கார வைப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது. ஆனால், அதிசயம், ஆச்சரியம் படம் முடிந்த பிறகு யாருமே தியேட்டரை விட்டு வெளியே வரவில்லை.
படம் அவ்வளவு சிறப்பா இருந்ததா என்று உங்களுக்குச் சந்தேகம் வருதுதானே. படத்தைப் பார்த்த அனைவரும் பழக்கதோஷத்தில் கட்டைப்பை கேட்டு சண்டை போட, அடுத்த ஷோ பார்த்தால் கிடைக்கும் என்றார் தொழிலதிபர். பின்னங்கால் பிடறியில்பட ஓடிய ரசிகர்கள் திரும்பியே பார்க்கவில்லை. அதுவே, அவர்களின் leg-end என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.