

ஷாப்பிங்கிற்காக பஜாருக்குப் போக யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் சென்னை ‘லயோலா இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (லிபா)’ நடத்தும் ‘லி-பஜார்’ முற்றிலும் வித்தியாசமானது. ஒவ்வொரு கல்லூரியிலும் மேலாண்மைப் போட்டிகள் நடத்தப்படுவது வாடிக்கை. அவற்றிலிருந்து லி-பஜாரின் களம்… வேற லெவல்!
கடந்த வாரம் நடைபெற்ற லி-பஜாரில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரபல நிறுவனங்கள் ஸ்டால்கள் அமைத்திருந்தன. அவர்களுடன் வாடிக்கையாளர்களாகிய பொதுமக்களைச் சந்திக்கு வைக்கிற கனெக்ஷன் பாயின்ட்டாக மாறி விடுகிறது லி-பஜார். இங்கு விளையாட்டரங்குடன் கூடிய ஸ்டால்களைப் பார்வையிடும் பொதுமக்களை விளையாட வைத்து, இடையிடையே கேள்விகளைக் கேட்டுக் குறித்துக் கொள்கின்றனர். இதன் மூலம் தங்களுடைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, தொழில்நிறுவனங்களுக்கு வேண்டிய தகவல்களைத் திரட்டித் தருகின்றனர் மாணவர்கள்.
“பொதுவாக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளரின் தேவைகளை அறிந்து கொள்ளும் வகையில் எளிதான கேள்விகளை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். இந்த பதில்களின் அடிப்படையில் ஆராய்ச்சி முடிவுகளை அந்தந்த நிறுவனங்களுக்கு வழங்குகிறோம். இதனால் படிக்கும்போதே நிறுவனங்களில் பணிபுரியும் அனுபவம் ஏற்படுகிறது” என்கிறார் மாணவர் கிருஷ்ணகுமார். அவருடன் பேசியபடியே ஹூண்டாய் நிறுவன ஸ்டாலுக்குள் நுழைந்தால், இந்தக் காரின் முன்புறத்தைப் பார்த்து இது என்ன கார் எனக் கண்டறியுங்கள், எனப் பொது அறிவுக்குப் பொங்கல் வைத்தனர்.
தொடர்ந்து, மலையேற்றத்துக்கு எந்த கார் செட் ஆகும், 6 பேர் குடும்பத்தை எந்த காரில் அழைத்துச் செல்லலாம் எனப் பல ட்ராவலிங் டிப்ஸ்களையும் அள்ளி விடுகின்றனர். அத்துடன் வந்திருக்கும் பிற கல்லூரி மாணவர்களையும், பொது மக்களையும் வைப்ரேஷன் மோடிலேயே வைத்திருக்கும் டெரர் பாட்டு, இசையுடன், இரவில் நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யாவை அழைத்துப் பேச வைத்துக் கலக்கிவிட்டனர் லிபா மாணவர்கள்!