

சென்னை செஸ் ஒலிம்பியாட் கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. இந்தியாவில் முதன் முறையாக நடைபெறும் போட்டி என்பதால், மக்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
2020இல் ஆன்லைனில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் ரஷ்யாவுடன் இணைந்து இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றது. ஆனால், நேரடியாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இதுவரை தங்கப் பதக்கம் வென்றதில்லை என்கிற குறையை இந்திய அணி இந்த முறை போக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா சார்பில் பங்கேற்க உள்ள ஆடவர் செஸ் அணி ஏற்கெனவே அறிவிக்கப் பட்டுவிட்டது. ‘ஏ’ பிரிவில் விதித் குஜராத்தி (27 வயது), பி. ஹரிகிருஷ்ணா (36), அர்ஜூன் எரிகாய்சி (18), எஸ்.எல். நாராயணன் (24), கே. சசிகிரண் (41) ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.
‘பி’ பிரிவில் நிஹல் சரின் (18), டி. குகேஷ் (16), பி. அதிபன் (29), ஆர். பிரக்ஞானந்தா (16), ரோனக் சாத்வானி(16) ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். ‘சி’ பிரிவில் சூர்ய சேகர் கங்குலி (39), கார்த்திகேயன் முரளி (23), எஸ்.பி. சேதுராமன் (29), அபிஜித் குப்தா (32), அபிமன்யு புரானிக் (22) ஆகியோர் இடம்பெற்றுள்ளானர்.
அணியில் 20 வயதுக்குட்பட்டவர்களில் 5 பேர் உள்ளனர். இவர்களில் டி.குகேஷ், ஆர். பிரக்ஞானந்தா, ரோனக் சாத்வானி ஆகியோருக்கு 16 வயதுதான். அர்ஜூன் எரிகாய்சி, நிஹல் சரின் ஆகியோருக்கு 18 வயதே ஆகிறது.
ஆடவர் அணியில் ஹரிகிருஷ்ணா (ஆந்திரம்), அர்ஜூன் எரிகாய்சி (தெலங்கானா), எஸ்.எல். நாராயணன் (கேரளம்), கே. சசிகிரண், டி.குகேஷ், பி. அதிபன், ஆர்.பிரக்ஞானந்தா, கார்த்திகேயன் முரளி, எஸ்.பி. சேதுராமன் (தமிழ்நாடு) ஆகியோர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
குறிப்பாகத் தமிழகத்திலிருந்து 6 பேர் ஆடவர் அணியில் இடம்பெற்றிருக்கிறார்கள். ஆன்லைன் தவிர்த்து நடைபெற்றுள்ள 43 செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் ஒரே ஒரு முறைதான் இந்திய அணி பதக்கம் வென்றது. அது, 2014இல் நார்வேயில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் ஆடவர் அணிக்குக் கிடைத்த வெண்கலப் பதக்கமாகும்.
2014இல் இடம்பெற்ற வீரர்களில் சசிகிரண், அதிபன், எஸ்.பி. சேதுராமன் ஆகியோர் இப்போதும் இந்திய அணியில் இருக்கிறார்கள். எனவே, ஆடவர் அணி மீதான எதிர்பார்ப்பு சற்றுக் கூடுதலாகவே இருக்கிறது. ஏனெனில், ஆடவர் அணி அனுபவமும் இளமையும் கலந்த அணியாகக் காட்சியளிக்கிறது.
நெருக்கடி மிகுந்த தருணத்தில் விளையாடுவதில் அதிக அனுபவம் பெற்ற மூத்த வீரர்களும், சுதாரித்து விளையாடும் திறன் படைத்த இளம் வீரர்களும் கலந்து இருக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே சூழலுக்கு ஏற்ப எப்படி விளையாட வேண்டும் என்கிற நுணுக்கங்களை அறிந்தவர்கள். எனவே ஆடவர் அணி தொடரில் சாதிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.
அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு வகையில் பல முத்திரைகளைக் கடந்த காலங்களில் பதித்திருக்கிறார்கள். அர்ஜூன் எரிகாய்சி கடந்த ஆண்டு கோல்ட்மணி ஆசிய ராபிட் போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றவர். 2020 ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர் விதித் குஜராத்தி.
பி. ஹரிகிருஷ்ணா ஆசியப் போட்டிகளில் தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்றவர். ஏராளமான சாதனைகளைப் படைத்திருக்கும் எஸ்.எல். நாராயணன் இந்த ஆண்டு கிராண்டிசாக்ட்சி கத்தோலிக்கா சர்வதேச ஓபன் தொடரில் முதன் முறையாகப் பட்டம் வென்றவர். அனுபவசாலியான சென்னையைச் சேர்ந்த சசிகிரண் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்றவர்.
சென்னையைச் சேர்ந்த குகேஷ், இளம் வயதில் கிராண்ட் மாஸ்டரான இரண்டாவது இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றவர். மயிலாடுதுறையைச் சேர்ந்த அதிபன், ஆசியப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர். சர்வதேச அளவில் செஸ் விளையாட்டில் கொடிகட்டிப் பறக்கும் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை தோற்கடித்து இந்தியாவை மட்டுமல்ல, செஸ் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் சென்னையைச் சேர்ந்த ஆர். பிரக்ஞானந்தா.
சென்னையைச் சேர்ந்த எஸ்.பி. சேதுராமன் 2014 இல் செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற அணியில் இருந்தவர். தஞ்சாவூரைச் சேர்ந்த கார்த்திகேயன் முரளி 2019 ஆசிய சாம்பியன்ஷிப்பில் இரண்டாமிடம் பெற்றவர். இப்படி அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் கடந்த காலத்தில் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அது, சொந்த மண்ணிலும் தொடர வேண்டும் என்று இந்திய அணியை வாழ்த்துவோம்!