காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022: தங்கம்தான் எங்கள் இலக்கு!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022: தங்கம்தான் எங்கள் இலக்கு!
Updated on
2 min read

பெரிய தொடர்களுக்கு 2020-21ஆம் ஆண்டிலிருந்தே தயாராகிவருகிறேன். சென்ற ஆண்டு நடைபெற்ற தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பத்தாவது முறையாக சாம்பியன் பட்டம் எனக்குக் கிடைத்தது.

நவம்பரில் ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெற்ற போட்டியில் விளையாடினேன். எனவே, பர்மிங்ஹாமில் நடைபெற உள்ள (ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை) காமன்வெல்த் போட்டிக்காகச் சிறப்பான முறையில் பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

2018 கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியைப் போலவே இப்போதும் ஆண்கள் பிரிவில் தங்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. கடந்த முறை ஆடவர் அணியில் நானும் சத்யனும் தங்கப் பதக்கங்களை வென்றோம். ஒற்றையர் பிரிவில் எனக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இந்த முறை இந்தியாவுக்காகத் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள்.

காமன்வெல்த் விளையாட்டும் பெரிய போட்டிதான். ஆனால், இதை ஒலிம்பிக்கோடு ஒப்பிட முடியாது. காமன்வெல்த்தில் இங்கிலாந்து வலிமையாக இருப்பதாக நினைக்கிறேன். நைஜீரியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் வலுவான இடத்தில் இருக்கின்றன.

இந்த நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவிலும் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். நாமும் தங்கம் வெல்வோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. மகளிர் அணியிலும் சிறப்பான வீராங்கனைகள் இருக்கிறார்கள். எல்லாரும் சிறந்த பங்களிப்புகளைச் செய்துவருகிறார்கள்.அதனால், அவர்களிடமிருந்தும் பதக்கங்களை எதிர்பார்க்கலாம்.

என்னைப் பொறுத்தவரை காமன்வெல்த் முடிந்தவுடன் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியிலும் விளையாட வேண்டும். அதற்குத் தகுதிபெற வேண்டும். நான், சத்யன் உள்ளிட்டவர்கள் சிறப்பாக விளையாடினால் ஒலிம்பிக் அணியில் வெற்றிபெறும் வாய்ப்பு இருக்கிறது. அதற்காக விடாமல் முயற்சியும் பயிற்சியும் செய்யத் தொடங்குவோம்.

கரோனாவுக்குப் பிறகு தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகள் குறைவாகவே நடைபெறுகின்றன. கரோனா பரவலால் ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகளில் விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன.

அதனால், எங்களுக்குச் சில உதவிகள் முன்பு போல சுலபமாகக் கிடைப்பதில்லை என்றாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஒலிம்பிக்கில் இருந்ததைவிட இப்போது நிலைமை நன்றாக இருக்கிறது. கிரிக்கெட்டில் இருப்பதுபோல டேபிள் டென்னிஸில் பயோ-பபுள் முறை பின்பற்றுவதில்லை. வழக்கமான கரோனா கட்டுப்பாடுகளைத்தான் பின்பற்றுகிறோம்.

செஸ், ஸ்குவாஷ் போன்ற விளையாட்டுகளுக்கு சென்னையில் உள்ள வரவேற்பு, டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்குக் கிடைப்பதில்லை என்கிற தவறான கருத்து நிலவுகிறது. 13 வயதுக்குக் கீழ் உள்ள வீரர்களில் உலக அளவில் சென்னையைச் சேர்ந்த சிறுமிதான் முதலிடத்தில் இருக்கிறார்.

15 வயதுக்குட்பட்டோருக்கான வீரர்களில் சென்னையைச் சேர்ந்த சிறுவன்தான் முதலிடத்தில் உள்ளார். உலக அளவில் மிகச் சிறந்த தரவரிசையில் இவர்கள் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டிகள் சென்னையில் நடைபெற்றால் நன்றாக இருக்கும். இதன்மூலம் புதிய வீரர்கள் வருவார்கள். இந்த விளையாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள நல்ல வாய்ப்பும் ஏற்படும்.

விளையாட்டுத் துறையில் அரசின் உதவிகள் சிறப்பாகக் கிடைக்கின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் விளையாட்டுக் கொள்கை சிறப்பாக உள்ளது. நிறைய விளையாட்டுகளுக்கு அரசின் ஆதரவு கிடைத்து வருகிறது. விளையாட்டு மைதானங்கள், அரங்குகள் போன்ற உள்கட்டமைப்புகளைச் சரிசெய்ய முடிந்தால் இன்னும் சிறப்பாகச் சாதிக்க முடியும்.

இரண்டாம் நிலை நகரங்களில் உள்கட்டமைப்பைச் சரிசெய்ய வேண்டியிருக்கிறது. விளையாடும் இடம், போதுமான பயிற்சியாளர்கள், உபகரணங்கள் இல்லாமல் இருப்பது பெரிய குறைதான். இதையெல்லாம் செய்துகொடுத்தால் அந்தப் பகுதிகளில் இருந்தும் சிறந்த வீரர்களை உருவாக்க முடியும். பள்ளிகளிலும் விளையாட்டுகளைப் பிரபலப்படுத்தினால் நிறைய பேர் தயாராகி வருவார்கள்.

கட்டுரையாளர்: சர்வதேச டேபிள் டென்னிஸ் வீரர்.

தொகுப்பு: மிது கார்த்தி, ரா.மனோஜ்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in