

நேக்டு க்ரெப், சிலி பி லென்டில் பான் கேக், செமோலினா ஆனியன் மசாலா க்ரெப், டங்க்டு ரைஸ் கேக் டிலைட், ஸ்கிண்டு பிளாக் சிக்பி ஃப்ரிட்டர்ஸ், டங்க்டு டோனட் டிலைட் - வாசித்தவுடன் தலை சுற்றுகிறதா? இவையெல்லாம் மேற்கத்திய உணவுகளின் பெயரோ அல்லது அவற்றின் அறிவியல் பெயர்களோ இல்லை. நம்மூர் இட்லி, தோசை, மெது வடை, மசால் வடைகளின் பெயர்கள்தாம்.
இந்திய உணவு வகைகளைத் தயாரித்து விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனம் ஒன்று தென்னிந்திய உணவுகளுக்கு மேற்கண்ட பெயர்களை வைத்து விற்பனை செய்துவருவது இணைய உலகைச் சுற்றத் தொடங்கியிருக்கிறது. மேற்கத்திய உணவு வகைகளான பீட்சா, பர்கர், டோனட், பாஸ்தா போன்றவை அவற்றின் பெயர்களாலேயே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. அவற்றுக்கு மாற்றுப் பெயர்கள் வைத்து யாரும் அழைப்பதில்லை. உலகம் முழுக்க பீட்சாவை பீட்சா என்றுதான் அழைக்கிறார்கள்.
அப்படியிருக்க, எளிதில் செரிமானமாகக்கூடிய தென்னிந்திய உணவுகளான இட்லி, தோசை, வடைக்கு வாய்க்குள் நுழையாத பெயர்களாகச் சூட்டியிருக்கிறார்கள். இந்த உணவகம் குறித்து வெளியான இணையச் செய்திகளைச் சமூக ஊடங்களில் இந்தியர்கள் பலரும் பகிர்ந்து கடிந்துவருகிறார்கள். அதே நேரம் வட இந்திய உணவுகளான சமோசா, ரசமலாய், கேரட் அல்வா, குலாப் ஜாமூன் போன்றவற்றின் பெயர்களை மாற்றாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார்கள் இட்லி, தோசை பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்.
“சரி, பெயர் போனால் போகிறது, பசிக்கு வாங்கிச் சாப்பிடலாம் என்று போனால் அந்த நேக்டு க்ரெப்பின் (சாதா தோசை) விலை, இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 1,500 ரூபாய்க்கு விற்கிறார்கள். இதுவே இப்படி என்றால், டங்க்டு டோனட் டிலைட் (சாம்பார் வடை), ஸ்கிண்டு பிளாக் சிக்பி ஃப்ரிட்டர் (மசால் வடை) எல்லாம் 1,200 ரூபாய்க்கு நிகராக விற்கப்படுகிறது” என்று அங்கலாய்க்கிறார் அந்த உணவை ருசி பார்க்கச் சென்ற நம்மூர்க்காரர் ஒருவர்.
இந்தியாவில் ஸ்டார் ஓட்டல்களிலேயே சுமார் 300 ரூபாய்க்கு இட்லியையோ, தோசையையோ சாப்பிட்டுவிட முடியும். பெரிய ஓட்டல்களில்கூட அதிகபட்சம் 500 ரூபாய்க்குள் ஒருவர் காலை உணவையே முடித்துவிடலாம். ஆனால், இந்த ஓட்டலில் ஒருவேளை சாப்பாட்டுக்கே 4 ஆயிரம் ரூபாயாவது இருந்தால்தான் கட்டுப்படியாகும்போல என்று நெட்டிசன்கள் பொரிந்து தள்ளியுள்ளனர். இந்த இட்லி, தோசை விவகாரம் ட்விட்டரில் அதிக அளவில் பகிரப்பட்டு 20ஆயிரத்துக்கும் மேலான லைக்குகளையும் 5000க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் பெற்று வைரலாகி வருகிறது.
இந்தியாவின் பாரம்பரிய உணவுப் பொருட்களை ஏற்கெனவே பெயர் மாற்றி அதன் காப்புரிமையையும் அமெரிக்கர்கள் பெற்று வைத்திருக்கிறார்கள். இட்லி, தோசைக்கும் அந்த கதி வந்துவிடுமோ என்னவோ?
பெயர் மாறிய உணவுகள்
அமெரிக்க உணவகத்தில் வழங்கப்படும் மேலும் சில உணவின் பெயர்கள்:
சிலி பி லென்டில் பான் கேக் - ஊத்தப்பம்
செமோலினா ஆனியன் மசாலா க்ரெப் - வெங்காய மசாலா தோசை
டங்க்டு ரைஸ் கேக் டிலைட் - சாம்பார் இட்லி
ஸ்கிண்டு பிளாக் சிக்பி ஃப்ரிட்டர்ஸ் - மசால் வடை
க்ளாசிக் ஆனியன் ஃபிரிட்டர்ஸ் - பக்கோடா
மிஸ்டர் ஸ்பைஸி பொட்டேடோ க்ரெப் - உருளைக்கிழங்கு மசாலா தோசை