பாப் ஆர்ட் தெரியுமா?

பாப் ஆர்ட் தெரியுமா?
Updated on
2 min read

பாப் இசை உங்களுக்குத் தெரிந்திருக்கும். பாப் ஆர்ட் தெரியுமா? பளிச்சென்று கண்ணைப் பறிக்கும் நிறங்கள். ஒளிப்படமா, ஓவியமா என்று சந்தேகப்பட வைக்கும் உருவங்கள். பட்டாசுப் பொறிபோல வெடித்துச் சிதறும் வடிவங்கள், சற்றே பெரிதான வண்ணவண்ணப் புள்ளிகள். இவைதான் பாப் ஆர்ட்டில் பெரும்பாலும் இடம்பெறுபவை.

காமிக்ஸ் புத்தகங்கள், விளம்பரங்கள், சினிமா போஸ்டர்களில் இந்த வகை ஓவியங்களைப் பார்த்திருப்போம். ஆனால், பலருக்கும் இதைப் பற்றிய புரிதல் இருந்திருக்காது. ஓவியங்களில் ‘அப்ஸ்ட்ராக்ட்’, ‘சர்ரியலிஸம்’, ‘கியூபிஸம்’, ‘இம்ப்ரஷனிஸம்’, ‘மாடர்ன் ஆர்ட்’ எனப் பல கலைவடிவங்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் ‘பாப் ஆர்ட்’ என்கிற ஒரு பாணி. இது பிரபலமான பாணி.

19ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை உலகில் ஐரோப்பிய பாணி ஓவியங்களே பெரும்பாலும் வரையப்பட்டுவந்தன. மோனலிசா ஓவியம், இயேசுவின் கடைசி விருந்து போன்றவற்றை இதற்குஉதாரணமாகச் சொல்லலாம்.

ஒரு கட்டத்தில் இந்த வகை ஓவியங்களின் மேல் சலிப்பு ஏற்பட, ஒரு குழுவாகச் சேர்ந்து 1950களில் சினிமா, பத்திரிகை, விளம்பரங்கள் என்று எல்லாவற்றிலும் புதுவிதமான ஓவியப் பாணியை ஓவியர்கள் பின்பற்றத் தொடங்கினர். அதற்கு ‘பாப்புலர் ஆர்ட்’ என்று பெயர் சூட்டினர். இதை ஓர் இயக்கமாகவும் முன்னெடுத்தனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹேமில்டன் ‘பாப் ஆர்ட்’டின் தந்தையாகக் கருதப்பட்டாலும், அமெரிக்காவின் ஆண்டி வார்ஹோல் இதன் முன்னோடியாகக் கொண்டாடப்படுகிறார். ராய் லிச்டென்ஸ்டெய்ன், ஜஸ்பர் ஜான்ஸ், டகாஷி முரகாமி ஆகியோர் பாப் ஆர்ட் ஓவியத்தில் முக்கியமானவர்கள்.

இவர்களில் ஆண்டி வார்ஹோல் ‘பாப் ஆர்ட்’ பாணி ஓவியத்தின் பிதாமகனாகத் திகழ்ந்தவர். திரைப்பட இயக்குநர், இசையமைப்பாளர், எழுத்தாளர் என்று பன்முகத் திறமை கொண்ட இவர் வரைந்த மர்லின் மன்றோ ஓவியம் அந்தக் காலத்தில் பெரிதும் கவனம் ஈர்த்த ஒன்று.

அப்போது விற்பனையில் பெரிதும் சாதனை புரிந்த கேம்பெல் சூப் டின்கள், கோககோலா விளம்பரங்கள் எல்லாம் இவரது கைவண்ணமே.

இந்தக் காலகட்டத்தில்தான் பாப் கார்ட்டூன்கள், பாப் மியூசிக் என்று பாப் ஒரு கலாச்சாரமாக மாறத் தொடங்கியது. 21ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை கோலோச்சிய ‘பாப் ஆர்ட்’ ஓவியங்கள், நவீன ஓவியங்களின் வரவாலும் டிஜிட்டல் புரட்சியாலும் சிறிது சிறிதாக முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கியது.

ஆனால், இன்றைக்கும் ‘பாப் ஆர்ட்’ ஓவியங்கள் டி ஷர்ட்கள், கைப்பைகள், மொபைல் போன் கேஸ்கள், டைரிகள், படக்கதைப் புத்தகங்கள் என நாம் பயன்படுத்தும் பொருட்களில் இடம்பெற்றிருக்கின்றன.

நாமும் அதைப் பற்றி அறியாமலேயே ரசித்துக்கொண்டுதான் இருக்கிறோம். தமிழ், தெலுங்குப் பட சினிமா சுவரொட்டிகளிலும் விளம்பரங்களிலும் இந்தப் பாணியை அடியொற்றியே போஸ்டர்கள் தொடர்ந்து வடிவமைக்கப்பட்டுவருகின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in