

இந்தியாவின் முதல் 3டி தந்திரக்கலை அருங்காட்சியகம் (Trick Art Museum) சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்திருக்கும் விஜிபி ஸ்நோ கிங்டமில் சமீபத்தில் திறக்கப்பட்டிருக்கிறது. ‘கிளிக் ஆர்ட் அருங்காட்சியகம்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த அருங்காட்சியகம் ஓவியர் ஏபி. ஸ்ரீதர் கைவண்ணத்தில் உருவாகியிருக்கிறது.
திறக்கப்பட்ட ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஒளிப்படங்கள் இந்த அருங்காட்சியகத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன. அப்படி என்ன சிறப்பு இந்த அருங்காட்சியகத்தில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ‘தந்திரக்கலை’ அருங்காட்சியகங்களைப் பற்றிய வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
“தந்திரக் கலைக்கு இரண்டாயிரம் ஆண்டுகால நீண்ட வரலாறு இருக்கிறது. மறுமலர்ச்சிக் காலத்தில் தோன்றிய இந்தக் கலையை பிரஞ்சு மொழியில் ‘தோம்பே லோயில்’ (‘Tompe-l’oeil’) என்று சொல்வார்கள். அப்படியென்றால், ‘கண்ணை ஏமாற்றுவது’ என்று பொருள். இரு பரிமாணத்தில் வரையப்பட்டிருக்கும் ஓர் ஓவியத்தை முப்பரிமாண ஓவியமாக மாற்றிக்காட்டும் ஒரு மாயைதான் இந்தத் தந்திரக்கலை.
கிரேக்க, ரோமானிய காலத்தில் இந்தத் தந்திரக்கலை உருவாகியிருக்கிறது. அதற்குப் பிறகு, படிப்படியாக ஐரோப்பாவில் இந்தக் கலை வளர்ந்திருக்கிறது” என்று சொல்கிறார் ஸ்ரீதர்.
உலகம் முழுவதும் பன்னிரண்டு நாடுகளில் நாற்பத்திரண்டு இடங்களில் இந்த மாதிரி தந்திரக்கலை அருங்காட்சியகங்கள் அமைந்திருக் கின்றன. ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட நான்கு தந்திரக்கலை அருங்காட்சியகங்களை மாதிரியாக வைத்து இந்த ‘கிளிக்ஆர்ட்’ அருங்காட்சியகத்தைப் படைத்திருக்கிறார் தர்.
“இந்த அருங்காட்சியகத்தில் 24 தந்திரக்கலை ஓவியங்கள் இடம்பெற்றி ருக்கின்றன. இந்த ஓவியங்களில் பெரும்பாலானவை நகைச்சுவையுடன் படைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கலையின் சிறப்பே அதை முழுமையாக மக்கள் ஏற்றுக்கொள்வதுதான்.
அந்த வகையில், இந்த ஓவியங்கள் எல்லாம் மக்களால்தான் முழுமையாகும்படி படைக்கப்பட்டிருக்கின்றன. இதை ஊடாடும் கலை (interactive art) என்றும் சொல்வார்கள்” என்கிறார் தர்.
சென்னையைத் தொடர்ந்து மும்பையிலும் இதே மாதிரியொரு அருங்காட்சியகம் அமைக்கும் பணியைச் செய்துகொண்டிருக்கிறார் இவர். செல்ஃபி எடுக்க ஒரு சிம்பன்சி, வெனிஸ் படகு பயணம், புருஸ்லீயிடம் அடி வாங்குவது, ஆதாமிடம் ஆப்பிள் வாங்குவது, ஆஸ்காரிடம் ஆஸ்கார் விருது வாங்குவது, பொம்மலாட்டம் ஆடுவது எனப் பல சுவாரஸ்யமான ஓவியங்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
அத்துடன், இந்த ஓவியங்களைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றவும் திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார் ஸ்ரீதர். பொங்கல் சமயத்தில் ஜல்லிக்கட்டு விளையாடுவது, கிறிஸ்துமஸ் சமயத்தில் கலைமான்களுடன் பனிமலைக்குச் செல்வது எனப் புதுமையான தந்திரக்கலை ஓவியங்களை ‘கிளிக்ஆர்ட்’ அருங்காட்சியகத்தில் பார்க்கலாம்.
இந்தக் கோடை விடுமுறைக்கு எங்கே சென்று செல்ஃபி எடுக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் இளைஞர்கள் ‘கிளிக்ஆர்ட்’ அருங்காட்சியகத்துக்குச் சென்று பாதுகாப்பாக செல்ஃபி எடுக்கலாம். இந்த ஓவியங்களுடன் படம் எடுத்துக் கொள்பவர் ஓவியங்களின் ஒரு பகுதியாக மாறிவிடும் மாயமும் நடக்கிறது.
இந்த அருங்காட்சியகத்தில் நுழைவதற்குப் பெரியவர்களுக்கு 150 ரூபாயும், சிறியவர்களுக்கு 100 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
- ஸ்ரீதர்
மேலும் விவரங்களுக்கு:>https://www.facebook.com/clickartmuseum/