

ஸ்கூல் பசங்களுக்கு எல்லாம் ஓட்டுரிமை கொடுத்தா டிடிஎஃப் வாசன் முதல்வராக வாய்ப்பு இருக்கிறது. ‘மோட்டோ விளாகர்’ வாசனின் பிறந்தநாளுக்குக் குவிந்த கூட்டம் அப்படி! கோவையில் கடந்த வாரம் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எட்டாயிரத்துக்கும் அதிகமானோர் குவிய, கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறை திணறியது. ஊடகங்களில் வெளியான பிறகுதான் வாசனைப் பற்றி ‘வயதில் மூத்தோர்’ என்னும் அரிய இனம் அறிந்துகொண்டது.
‘யாருப்பா அந்த வாசன்’ என்று கேட்டவர்கள், ‘பூமர் அங்கிள்/ஆன்ட்டி’ என்னும் பட்டத்தை வாங்கிக் கட்டிக்கொண்டனர். ‘ட்வின் த்ராட்லர்ஸ் ஃபேமிலி’ என்பதைச் சுருக்கி ‘டிடிஎஃப்’ என்கிற பெயரில் யூடியூப் சேனல் நடத்திவரும் வாசனுக்கு இரண்டே ஆண்டுகளில் 28 லட்சம் சந்தாதாரர்கள். பள்ளி மாணவர்கள் தொடங்கி கல்லூரி இளைஞர்கள் வரை ‘அண்ணா.. அண்ணா..’ என்று பாசமழை பொழிகிறார்கள் என்றால், அவர்களைத் தூக்கிச் சாப்பிடும்விதமாக ஒரு அம்மா, ‘எங்க வீட்டுப் பையன் வாசன்’ என்று கத்திக் கூப்பாடு போடுகிறார்.
‘என்னப்பா 250 கி.மீ வேகத்துல பைக் ஓட்டுறதுல்லாம் நல்லதுக்கா?’ என்று யாராவது கடுப்பானால் அதைவிடக் கடுப்பாகிறார்கள் அண்ணன் வாசனின் இளவல்களும் அடி விழுதுகளும். ‘அவர் முடி வளர்த்து கேன்சர் பேஷன்ட்டுக்குக் கொடுத்தாரு. நிறைய நல்லது பண்றாரு. இப்ப வச்சிருக்கிற பைக் ரூ. 3 லட்சம் தெரியுமா’ என்று அப்டேட்டோடு பதிலடி தருகிறார்கள்.
‘பெத்தவங்க சொல்றதைக் கேக்காதீங்க. மனசுக்குப் பிடிச்சதைச் செய்யுங்க’ என்று அவர் பேருரை ஆற்றுவதை யூடியூப் 2கே கிட்ஸ்கள் கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள். சிலர் பிராங்க் வீடியோ போடுகிறேன் என்று வயிற்றில் புளியைக் கரைத்துப் பீதியைக் கூட்டுகிறார்கள். இன்னும் சிலர் சமையல் வீடியோ என்று ஓட்டல் ஓட்டலாகப் படையெடுத்துப் படுத்தியெடுக்கிறார்கள். ‘படிப்பெல்லாம் வேலைக்கு ஆகாதுங்க புரோ’ என்று இவர்களை பின்தொடரும் 2கே கிட்ஸ்கள் இந்த ‘சம்முவ’த்துக்கு சொல்ல வரும் சேதி என்னவென்றே தெரியவில்லை.
கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க தம்பிங்களா.