

கூலிங் கிளாஸ் பொதுவாக எல்லா வயதினரும் அணியும் கண்ணாடியாக இருந்தாலும், அது இளமையின் குறியீடு. ஸ்டைலான நாகரிக உடைகளை அணிந்திருந்தாலும் கூடுதலாக கூலிங் கிளாஸை அணியும்போது, தோற்றத்தை இன்னும் ஒரு படி உயர்த்திக் காட்டும்.
கூலிங் கிளாஸ் என்றாலே கறுப்பு வண்ணத்திலான கண்ணாடிகள் மட்டுமல்ல, ரே-பானும் நினைவுக்கு வரும். 80 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அந்த நிறுவனம் இன்றைய இளைய தலைமுறையும் விரும்பும் கூலிங் கிளாஸ்களையும் சன் கிளாஸ்களையும் காலத்துக்கு ஏற்ப விற்பனை செய்து உலக அளவில் புகழ் பெற்று விளங்குகிறது.
ரே-பான் கூலிங் கிளாஸ் பற்றி இப்போது ஏன் இந்தப் புராணம் என்று நீங்கள் நினைக்கலாம். உலகப் புகழ்பெற்ற ரே-பான் நிறுவனத்தின் நிறுவனர் அண்மையில் (27-06-2022) லியனார்டோ டெல் வெச்சியோ (87) காலமாகிவிட்டார்.
உலகில் கூலிங் கிளாஸ் தயாரிப்பில் உச்சத்தில் இருக்கும் ரே-பான் நிறுவனம், அமெரிக்கா - இத்தாலி பிராண்ட். அமெரிக்காவில் காண்டாக்ட் லென்ஸ் உள்படக் கண் நலம் தொடர்பான பொருட்களை தயாரித்துவந்த பாஸ்க் லோம்ப் என்கிற நிறுவனம்தான் 1936இல் கூலிங் கிளாஸ் தயாரிப்பதற்காக ரே-பான் நிறுவனத்தைத் தொடங்கியது.
பெயரோடும் புகழோடும் செயல்பட்ட ரே-பான் நிறுவனத்தை இத்தாலியில் கண்ணாடி ஃபிரேம்கள் தயாரிக்கும் லக்ஸோடிகா என்கிற குழுமம் 1999இல் வாங்கியது. லக்ஸோடிகாவின் நிறுவனர்தான் லியனார்டோ டெல் வெச்சியோ. 77 ஆயிரத்து 734 பேர் பணியாற்றும் இவருடைய குழுமம், உலகம் முழுவதும் 8 ஆயிரம் ஸ்டோர்களுடன் கிளை பரப்பி இருக்கிறது. இத்தாலியின் இரண்டாவது பணக்காரரான லியனார்டோ, உலகப் பணக்காரர்கள் வரிசையில் 54ஆவது இடத்தில் இருக்கிறார்.
இன்று உலகின் பணக்காரர் வரிசையில் லியனார்டோ இருந்தாலும், சிறு வயதில் ஆதரவற்றோர் ஆசிரமத்தில் வளர்ந்தவர். இவர் பிறப்பதற்கு முன்பே காலமாகிவிட்ட அவருடைய தந்தை வீதியில் காய்கறி விற்பனை செய்தவர்.
‘டூல் அண்ட் டை’, ‘மோல்டிங்’ பணியில் நிபுணத்துவம் பெற்ற லியனார்டோ, பிறகு 1961களில் முகக் கண்ணாடி ஃபிரேம்கள் தயாரிப்பதற்காக லக்ஸோடிகா நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் பல பிராண்ட்களை உருவாக்கிய லியனார்டோ, ரே-பான் நிறுவனத்தையும் வாங்கினார்.
சன் கிளாஸ் ஹட், லென்ஸ் கிராஃப்டர்ஸ், ஓக்லே, ரே-பான் எனப் பல நிறுவனங்களுக்காக அறியப்பட்ட லியனார்டோ டெல் வெச்சியோ, கண்ணாடி, சன் கிளாஸ், கூலிங் கிளாஸ் தயாரிப்புகளில் பிரபலமாக இருந்தவர். உலக அளவில் ரே-பான் நிறுவனத்தை நிலைபெற வைத்ததில் லியனார்டோவுக்குப் பெரும் பங்குண்டு.