90’ஸ் கிட்ஸ்களுக்கு வந்த சோதனையா இது?

90’ஸ் கிட்ஸ்களுக்கு வந்த சோதனையா இது?
Updated on
1 min read

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் வெளியான ‘சின்னதம்பி’ படத்தில் ‘எனக்குக் கல்யாணம், எனக்குக் கல்யாணம்..’ என்கிற வசனம் மிகப் பிரபலம்.

அதில், திருமணம் நடக்காத விரக்தியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கையில் தாலிக்கயிறுடன் ஊர் முழுக்கச் சுற்றித் திரிவார். அதுபோலத்தான் 90’ஸ் கிட்ஸ் குழந்தைகள் பலர் எப்போது கல்யாணம் நடக்கும் என்று ‘விழி’ மேல் வழிவைத்து காத்துக் கிடக்கின்றனர் என்று சமூக ஊடகப் பக்கங்களில் அடிக்கடி கேலி, கிண்டலாகப் பதிவுகள் வருவதைப் பார்க்க முடிகிறது.

‘முன்பக்கம் போனால் முனி அடிக்குது, பின்பக்கம் போனால் பிசாசு அடிக்குது’ என்கிற ரீதியில் எந்தப் பக்கமும் போக முடியாமல் தவியாய்த் தவிப்பது போலவே பதிவுகளை இட்டு, திருமணத்துக்காகக் காத்துக்கிடக்கும் விஷயத்தை 90’ஸ் கிட்ஸ்கள் பறைசாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

அதுவும் 2கே கிட்ஸ்கள் திருமண ஒளிப்படத்தைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டால் போதும், இவர்களின் காதில் புகை வராத குறைதான். ஃபேஸ்புக் காலத்திலும் பிறக்காமல் இன்ஸ்டாகிராமிலும் புழங்காமல் தனித்துவிடப்பட்ட 90’ஸ் கிட்ஸ்களுக்கு இது சோதனையான காலம்தான் போல.

அப்படி ஒரு 90’ஸ் கிட்ஸ் செய்திருக்கிற காரியம் வைரலாகி, பேசுபொருளாகவும் ஆகியிருக்கிறது. திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்ட ஜோடிகள் எல்லாம் மண்டபத்தைச் சுற்றியுள்ள சுவர்களில் வாழ்த்து போஸ்டர்களைத்தான் அடித்து ஒட்டுவார்கள். ஆனால், மதுரையைச் சேர்ந்த மல்லி என்கிற ஜெகன் என்பவர் நான்கு ஆண்டுகளாகியும் பெண் தேடி கிடைக்காமல், கடைசி முயற்சியாக ‘மணமகள் தேவை’ என்று போஸ்டர் அடித்து விளம்பரம் செய்திருக்கிறார். பெயர், வயது, வேலை செய்யும் நிறுவனம், ராசி-நட்சத்திரம் என்று தன் ஜாதகம், பயோடேட்டாவை போஸ்டரில் ஒட்டுமொத்தமாக இறக்கி வைத்திருக்கிறார்.

தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்துவரும் ஜெகன், பகுதி நேரமாக பிரியாணி கடை ஒன்றில் விளம்பர பப்ளிசிட்டி பணியையும் செய்துவருகிறார். ஊருக்கெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டும் வேலையைச் செய்யும் ஜெகன், தனக்காக அடித்து ஒட்டியிருக்கிற போஸ்டர்தான் தற்போது வைரலாகி இருக்கிறது. அதிலும், இந்த போஸ்டரைப் பார்த்துத் திருமணத்துக்குப் பெண் வீட்டார் யாராவது தொடர்புகொள்வார்கள் என்று நினைத்தால், தரகர்கள்தான் தன்னைத் தொடர்புகொள்கிறார்கள் என்று அலுத்துக்கொள்கிறார் ஜெகன்.

90’ஸ் கிட்ஸ் இன்னும் என்னென்ன முயற்சிகளில் எல்லாம் ஈடுபடப் போகிறார்களோ?

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in