Published : 28 Jun 2022 02:38 PM
Last Updated : 28 Jun 2022 02:38 PM

மாத்தி யோசி - 5: படித்த எல்லாருமே ஏன் பெரிய ஆளாக ஆவதில்லை?

‘வாழ்க்கையில் நீ பெரிய ஆளா வருவ..’ - இப்படி ஆசிர்வாதம் வாங்காமல் யாருமே இருக்க மாட்டார்கள். சரி, அப்போ பெரிய ஆள் என்று சொல்வதற்கு இலக்கணம்தான் என்ன? பணமா, படிப்பா, பதவியா? இதென்னெ கேள்வி?எல்லாம் சேர்ந்ததுதான் என்று நிறைய பேர் சொல்லலாம்.

ஆனால், பணம் மட்டும் போதுமா என்று கேட்டால், இன்று பை நிறைய இருக்கிற பணம், நாளைக்குக் கை நழுவிப் போகலாம். படிப்புதான் என்று சொல்லலாம் என்று பார்த்தால், அது ஆண்டுக்கு ஆண்டு டிமாண்ட், டிரெண்டிங் என்று மாறிக்கொண்டே இருக்கிறது. குறுகிய காலத்துக்கு மட்டுமே ஆயுள் இருக்கிற பதவியை எத்தனை ஆண்டுகளுக்கு நம்புவது என்று தெரியாது. அப்படியெனில் எதுதான் நிரந்தரம் என்கிற கேள்விதான் எழுகிறது. இதற்கு விடை தேடினால் பதிலாக கிடைப்பதுதான் ‘தனித்திறமை’.

இந்தத் தனித்திறமையை நீங்கள் புரிந்துகொள்ள எந்தப் பள்ளியும் கல்லூரியும் தனியாக முயற்சி எடுக்காது. விளைவு, தன்னுடைய தனித்திறமை என்னவென்று அடையாளம் தெரியாமலேயே பலரும் படிப்பை முடித்துவிடுகிறார்கள்.
என்னுடைய பள்ளி நண்பர் ஒரு சராசரி மாணவன். பேசினால் மட்டும் பதில் சொல்கிற கூச்ச சுபாவம் உள்ளவர். சொல்லப்போனால் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு அவர் பெயர்கூடத் தெரியாது. ஆனால், இன்று அவர் சிறந்த மேடைப் பேச்சாளர், எழுத்தாளர். அவர் அப்படி மாறுவதற்கு ஒரே ஒரு நிகழ்வு காரணமாக இருந்தது. பலர் கூடியிருக்கிற ஒரு சபையில் ஓர் உரை நிகழ்த்த முடியுமா என்று வேண்டுகோள் வைக்கப்பட, அதற்கு நண்பர் ‘சரி’ என்று ஒப்புக்கொண்டார். அதற்காகத் தயார் செய்யத் தொடங்கினார். பல புத்தகங்களைப் படித்து, அதிலிருந்து மேற்கோள் காட்டி ஐந்து நிமிடங்கள் உரையை அட்டகாசமாகப் பேசி பாராட்டைப் பெற்றார்.

தன்னுடைய தனித்திறமையே பேச்சுதான் என்பதை அன்றைக்குக் கண்டுபிடித்த அவர், இன்று வெற்றிகரமான மேடைப் பேச்சாளர். அது சரி; ஆனால், எல்லாராலும் ஏன் பள்ளி, கல்லூரிக் காலகட்டத்தில் தன்னுடைய தனித்திறமையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கேள்வி கேட்டால், அது 160 ஆண்டுக்கு முன்னால் பயணப்பட்டு, ‘தாமஸ் மெக்காலே’ என்கிற பதிலில் வந்து நிற்கிறது.

மெக்காலே செய்தது என்ன? அறிவியல், பொறியியல், கணிதம் இந்த மூன்று படிப்புகளை முறைப்படுத்தி, கல்வி முறையை அமைத்து, அன்றைய காலனி ஆதிக்க இந்தியாவில் தங்களுக்குத் தேவையான ஊழியர்களை உருவாக்கினார். இந்தக் கல்வி முறைதான் இன்றளவும் சிறு சிறு மாற்றங்களோடு இன்றும் உயிர்ப்போடு இருக்கிறது.

சரி, படித்து யாரும் பெரிய ஆள் ஆவதில்லையா என்பது என் கேள்வி அல்ல. படித்த எல்லோருமே ஏன் பெரிய ஆளாக ஆவதில்லை? படிக்கிற படிப்பும் வாங்கிய டிகிரியும் எல்லோருக்கும் ஒன்றாக இருக்கும்போது, ஏன் எல்லாருக்கும் வேலை கிடைப்பதில்லை? கிடைத்த எல்லாருக்கும் பணியில் முக்கியத்துவமோ பெரிய பதவியோ கிடைப்பதில்லை?

இங்குதான் ‘பெரிய ஆள்’ என்கிற அடையாளம் எப்போது சாத்தியமாகும் என்கிற கேள்வியை எழுப்புகிறது. படிப்புக்குக் கொடுக்கிற முக்கியத்துவம் தன்னோட தனித்திறமைக்கும் கொடுக்கப்படுகிறதா? ‘இல்லை’ என்பதுதான் நிஜம். மற்றவர்களைப் பற்றி மணிக்கணக்கில் நண்பர்களிடத்தில் வம்பிழுப்பது, அரட்டையடிப்பது, போதாததற்கு போனில் அதைத் தொடர்வது, பொழுது ஆக்கத்துக்காக என்றில்லாமல் பொழுது போக்குக்காகச் செலவழிப்பது பழக்கமானால் என்னவாகும்?

உங்களைப் பற்றிய குறைகளைச் சொல்லுங்கள். பலம், பலவீனம் என்ன என்று கேட்டால் தடுமாறுவதுதான் உங்களுக்கு வழக்கமாகிவிடும். தினமும் ஐந்து நிமிடம் ஒதுக்கி, உங்களைப் பற்றி, உங்கள் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அடைய விரும்புவது என்ன, அதை அடையும் வழிகள் என்ன, சிக்கல்களும் தீர்வுகளும் என்னென்ன என்பதை உங்கள் மனமே ஒரு வரைபடத்தை உருவாக்கத் தேடும்.

இறை நம்பிக்கையாளர்கள் கோயில்களில் வேண்டிக்கொள்ளும்போது, அது வேண்டும் இது வேண்டும் என்று எதுவெல்லாமோ வேண்டிக்கொள்வார்கள். தனித்திறமை வேண்டும் என்று மட்டும் கேட்பதில்லை. உண்மையில் நீங்கள் நம்பும் இறைவன் எதற்காகக் காத்திருக்கிறார்? தனித்திறமையுடன் இலக்கை அடைய தனக்குத்தானே உதவி செய்துகொள்ளும் நபர்களுக்கு உதவ எப்போதுமே தயாராக இருக்கிறார்.

ஆக, சற்றே மாற்றி யோசித்து இலக்கு, முயற்சி இந்த இரண்டையும் இணைப்பதற்குத் தனித்திறமை என்கிற பாலத்தை உருவாக்குங்கள். இனி நீங்களும் பெரிய ஆள்தான்!

கட்டுரையாளர்: தனியார் கல்லூரி மேலாண்மை துறைத் தலைவர்
தொடர்புக்கு: karthikk_77@yahoo.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x