

பிரேசில் நாட்டில் 37 வயதுப் பெண் ஒருவர் பொம்மையைத் திருமணம் புரிந்து இணைய உலகைக் கதி கலங்க வைத்திருக்கிறார். மெய்ரிவோன் ரோச்சா மோரேஸ் என்கிற அந்தப் பெண்ணுக்கு நடனமாட ஜோடி இல்லை என்பதால் அவருடைய அம்மா, ஆண் தோற்றத்திலான மார்செலோ என்று பெயரிடப்பட்ட பொம்மையைச் செய்துகொடுத்தார்.
அதன்பிறகு பொம்மையோடு சதா சர்வ காலமும் நேரத்தைக் கழித்த அந்தப் பெண், பொம்மையைக் காதலிக்கத் தொடங்கிவிட்டார். மனிதரைத் திருமணம் செய்துகொண்டால் சண்டை, சச்சரவு என எல்லாமும் நடக்கும் என்பதால், அந்தப் பொம்மையைத் திருமணம் செய்துகொள்ளவும் முடிவுசெய்தார் மோரேஸ்.
இதனையடுத்து திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார் மோரேஸ். திருமணத்துக்காக 250 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பினார். பிறகென்ன? உறவினர்களும் நண்பர்களும் புடைசூழ பொம்மையைத் திருமணமும் செய்துகொண்டார். அதோடு விட்டிருந்தால் பராவாயில்லை.
தங்களுக்கு ஒரு பொம்மைக் குழந்தை பிறந்திருப்பதாகவும் அறிவித்து திகைப்பூட்டியிருக்கிறார். திருமணம் தொடங்கி குழந்தை பொம்மைப் பிறப்பு வரையிலான ஒளிப்படங்கள் அனைத்தையும் சமூக ஊடகப் பக்கங்களில் மோரேஸ் பதிவேற்ற, உலக அளவில் அவை வைரலாகிவிட்டன.
அண்மையில் குஜராத்தைச் சேர்ந்த கஷமா பிந்து என்கிற 24 வயது இளம் பெண் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்து பிரேசில் பெண், பொம்மையைத் திருமணம் செய்துகொண்டுள்ளதாக கூறி வைரல் ஆகியிருக்கிறார். இதெல்லாம் எங்கு போய் நிற்குமோ தெரியவில்லை!
மாரத்தான் தம்பதி பராக்!
மாரத்தான் போன்ற நீண்ட தூர ஓட்டத்தில் ஓடுவது லேசுப்பட்ட காரியமல்ல. 42.19 கி.மீ. தொலைவு கொண்ட மாரத்தான் போட்டியில் பங்கேற்றால் அல்லு விட்டுபோய்விடும்.
ஆனால், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த எம்மா - ஃபே கன்னிங்காம் என்கிற தன்பாலினத் தம்பதி தினந்தோறும் மாரத்தான் ஓடி புதிய சாதனையை அரங்கேற்றியிருக்கின்றனர். இவர்கள் ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ மாரத்தான் ஓடவில்லை. 106 நாட்கள் இடைவிடாமல் மாரத்தான் ஓடி ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கிறார்கள்.
இதனால் ஸ்காட்லாந்தில் ‘மாரத்தான் தம்பதி’ என்கிற பெருமையையும் பெற்றிருக்கிறார்கள். அதெல்லாம் சரி, எதற்காக இந்த மாரத்தான் ஓட்டம்? கன்னிங்காமின் தந்தை டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டு காலமாகிவிட்டார். டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டி உதவுவதற்காக இந்தத் தம்பதி மாரத்தான் ஓடியிருக்கின்றனர்.