நீங்கள் ஹாரி பாட்டர் ரசிகர் இல்லையா?

நீங்கள் ஹாரி பாட்டர் ரசிகர் இல்லையா?
Updated on
2 min read

90’ஸ் கிட்ஸும் 2கே கிட்ஸும் பெரும்பாலான விஷயங்களில் ஒத்துப்போவதில்லை. ஆனால், அவர்கள் ஒத்துப்போகும் விஷயம் ஒன்று உண்டு. அதுதான் ‘ஹாரி பாட்டர்’. பொதுவாக 2கே கிட்ஸ் புத்தகங்களை வாசிப்பதில்லை என்றாலும், அதற்கு விதிவிலக்காகத் திகழ்கிறது ஜே.கே. ரவுலிங் படைத்த ஹாரி பாட்டர்.

கடந்த 25 ஆண்டுகளில் அதிகம் வாசிக்கப்பட்ட புத்தகம் இது. குழந்தை களுக்காக எழுதப்பட்ட புத்தகம் என்று அடையாளப்படுத்தப்பட்டாலும் அனைத்து வயதினரும் இதை விரும்புகிறார்கள். மீண்டும் மீண்டும் படிக்க வைக்கும் மந்திர ஆற்றலை இந்தப் புத்தகம் கொண்டுள்ளது.

ஹாரி பாட்டர் திரைப்படமாகவும் பிரபலமாக இருக்கிறது. ஆனால், அதை வாசிப்பதில் கிடைக்கும் தனி சுகம் திரைப்படங்களில் முழுமையாகக் கிடைக்கவில்லை என்று சத்தியம் செய்கிறார்கள் பாட்டர் ரசிகர்கள்.

ஹாரி ஹாரி…

இந்தக் கதைகளில் ஹாரிதான் ஹீரோ. வோல்டமார்ட்தான் முதன்மை வில்லன். மாயாஜால திறனற்ற ‘மகிள்’ எனும் சாதாரண மனிதர்களை வோல்டமார்ட் வெறுக்கிறார். பிற்காலத்தில் தானும் ஹாரியும் மோதிக்கொள்வோம். இருவரில் ஒருவர் இறந்துவிடுவார் என்பது வோல்டமார்ட்டுக்கு முன்கூட்டியே தெரிந்துவிடுகிறது.

இதன் காரணமாக, ஒரு வயதுக் குழந்தை ஹாரியையும் ஹாரியின் பெற்றோரையும் கொல்ல முயல்கிறார். இதில் ஹாரியின் அம்மாவின் மரணம், ஹாரிக்கு ஒரு மந்திரக் கவசத்தை அளிப்பது, பிற்காலத்தில் வோல்டமார்ட்டுக்கு பின்னடைவாக மாறுகிறது.

பெற்றோரின் மறைவுக்குப் பின்னர், வெறுப்பை உமிழும் அம்மாவின் அக்காவான பெரியம்மா வீட்டில் ஹாரி வாழத் தொடங்குகிறார். தன்னுடைய பெற்றோர் வோல்ட மார்ட்டால் கொல்லப்பட்டதும் தனது மந்திர ஆற்றலும் ஹாரிக்குத் தெரியவருகின்றன.

‘மகிள்’ எனப்படும் சாதாரணரான ஹாரி, 11ஆவது பிறந்த நாளுக்குப் பிறகு மந்திரவாதிகளுக்கான பள்ளியான ஹாக்வார்ட்ஸுக்கு மாந்திரீகம் கற்கச் செல்கிறார். அங்கே ரான், தோழி ஹர்மாய்னி, ரானின் சகோதரி ஜின்னி ஆகியோரைச் சந்திக்கிறார். வோல்டமார்ட்டைப் பற்றியும் அறிந்துகொள்கிறார். பல தியாகங்கள், போராட்டங்களுக்குப் பிறகு கடைசியாக, ஹாரியும் வோல்டமார்ட்டும் யுத்தகளத்தில் சந்திக்கிறார்கள். வோல்டமார்ட்டை ஹாரி கொல்கிறார்.

பொதுவான எதிர்பார்ப்புக்கு மாறாக ஹர்மாய்னியை ரான் மணக்கிறார். ஜின்னியை ஹாரி மணக்கிறார். ஹாரிக்கும் அவருடைய நண்பர்களுக்கும் சிலிர்ப்பான, மகிழ்ச்சியான தருணங்களை வழங்கிய ஹாக்வார்ட்ஸ் பள்ளிக்கே அவர்களுடைய குழந்தைகளும் செல்லத் தொடங்குகிறார்கள் என்பதாக முடிகிறது ஹாரி பாட்டர் கதை.

குறையாத வசீகரம்

ஒன்லைனாகப் பார்க்கும்போது வழக்கமான திரைப்படக் கதைகளைப் போலத் தோன்றினாலும் பல வகைகளில் வேறுபட்டிருப்பதே ஹாரி பாட்டரின் வெற்றிக்கு அடிப்படைக் காரணம். மாறுபட்ட கதாபாத்திர வார்ப்புகள், சாதாரண ‘மகிள்’ மனிதர்களின் உலகையும் மாயாஜாலக் கற்பனை உலகையும் இணைத்த விதம் ஆகியவற்றின் காரணமாக இந்தப் புத்தகம் இன்றைக்கும் பிரபலம் குறையாமல் உள்ளது. அளவில் பெரிதாக இருக்கும்போதும், 7 பாகங்களைக் கொண்டுள்ளபோதும் படித்து முடிக்கும்வரை கீழே வைக்க இந்தப் புத்தகம் நம்மை அனுமதிப்பதில்லை.

இந்தப் புத்தகம் வெற்றி பெற்றதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஒருவடைய தோற்றம், பின்னணி எப்படி இருந்தாலும் அவருடைய திறமைகள், தனித்தன்மைகளுக்காக அவர் பெருமிதம் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவது பெரும்பாலான வாசகர்களைக் கவர்ந்திருக்கிறது. இப்படி மனித உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவத்தை அளித்து ஜே.கே. ரவுலிங் கதையை வார்த்ததே, அதன் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

ஹாரி பாட்டருக்கு வெள்ளி விழா

ஹாரி பாட்டர் புத்தகத்தின் முதல் பாகம் 1997ஆம் ஆண்டு ஜூன் 26 அன்று வெளியானது. பின்னர் 2007 ஜூலை 21 அன்று ஏழாவது பாகம் வெளியானது. ஹாரி பாட்டர் புத்தகத்துக்கு இது வெள்ளி விழா ஆண்டு. 25 ஆண்டுகள் ஆனபோதும் உலக அளைவில் ஹாரி பாட்டர் பேசப்படுவதும் 90’ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ்களைக் கவர்ந்ததும் இதன் இன்னொரு வெற்றியாகச் சொல்லலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in