

சமூக ஊடகங்கள் பயனர்களுக்குப் புதுப் புது வசதிகளை வழங்கத் தொடர்ந்து முயன்று வருகிறது. சமீபத்தில் இன்ஸ்டாகிராம் முழுக் காண் திரையைக் கொண்டுவருவதற்கான சோதனை முயற்சியில் இறங்கியுள்ளது. அதுபோல் முன்னணி சமூக ஊடகங்களில் ஒன்றான டிவிட்டர் இப்போது தனது ட்வீட் சொற்களைக் கூட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது.
2017இல் இதை 140 சொற்களிலிருந்து 280 சொற்களாக விரிவாக்கியது. இப்போது அதை 2,500 சொற்களாக விரிவாக்கும் சோதனை முயற்சியை ட்விட்டர் தொடங்கியுள்ளது.
நீண்ட அறிவிப்புகளை வெயிட விரும்பும் பயனாளர்களுக்கு ஏதுவாக இந்தப் புதிய அம்சத்தை பரிசோதிப்பதாக டிவிட்டர் தெரிவித்துள்ளது. இதன்படி முதற்கட்டமாக
கனடா, கானா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள எழுத்தாளர்களின் ஒரு சிறிய குழுவில் இந்தப் புதிய அம்சம் சோதிக்கப்பட உள்ளது. இரண்டு மாதங்களுக்கு செயல்பாட்டில் இருக்கும் இந்தப் புதிய அம்சத்தில் உள்ள நிறை குறைகளை அதைப் பயன்படுத்தவிருக்கும் எழுத்தாளர்கள் மூலம் அறிந்து அதற்கு ஏற்ப மாற்றங்களைச் செய்ய முடிவெடுத்திருப்பதாக டிவிட்டர் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
ட்விட்டர் சூழலில் பார்வையாளர்களைத் தக்கவைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தப் புதிய அம்சம் மூலம் வாசகர்கள் முதலில் ட்வீக்கான தலைப்பைப் பார்க்க முடியும். அதைக் கிளிக் செய்வதன் மூலம் 2 ஆயிரத்து 500 சொற்களாக விரிவாக்கம் செய்யப்பட்ட அந்தக் குறிப்பை அணுக முடியும்.
நெதர்லாந்தைச் சேர்ந்த நியூஸ் லெட்டர் ஸ்டார் அப் நிறுவனமான ரெவ்யூவை கடந்த ஆண்டு ட்விட்டர் வாங்கியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
2 ஆயித்து 500 சொற்களில் ட்வீர் விரிவாக்கம் செய்யப்படுவதால் இது மற்ற ப்ளாக்கிங் தளங்களுக்குப் போட்டியாக இருக்கும் என சமூக ஊடக நிபுணர் லாரா டூகுட் தெரிவித்துள்ளார். மேலும் இதனால் பல்வேறு தளங்களை, பளாக்குகளைப் பயன்படுத்தும் பயனாளர்கள் ட்விட்டருக்குத் தங்கள் கணக்குகளை மாற்ற வாய்ப்புள்ளதாகவும் அவர் தெர்வித்துள்ளார்.