

உலகில் சென்ற வாரம் என்னவெல்லாமோ நடந்துள்ளது. எதெல்லாமோ நடக்காமலும் போயுள்ளது. ஆனால், பிடிஎஸ் ஆர்மிக்கு அவை எதுவும் முக்கியமல்ல. அவர்களது பிரியத்துக்குரிய பிடிஎஸ் (BTS - Bulletproof Boy Scouts) இசைக் குழு கலைக்கப்பட்டுவிட்டது. இது மட்டும்தான் அவர்களுடைய கவலை.
ஜூன் 12, 2013இல் தென்கொரியாவைச் சேர்ந்த இந்த இசைக் குழு தனது பயணத்தைத் தொடங்கியது. ‘இனி கனவுகள் இல்லை’ (No More Dream) என்னும் தலைப்பிலான இந்தக் குழுவின் பாடல்தான் இவர்களுடைய முதல் இசைப் படைப்பு.
‘ஹே! உங்கள் கனவுகள் என்னென்ன? பெரிய வீடு, பெரிய கார், பெரிய மோதிரம்? உண்மையில் எனக்குக் கனவுகள் இல்லை. எனது சிறிய வாழ்க்கையில் கனவுகளே இல்லை’ என்கிற இவர்களது பாடல், இசை உலகையே திரும்பிப் பார்க்கவைத்தது. யூடியூபில் இந்தப் பாடல் 14 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. அமெரிக்கர்கள் கோலோச்சும் பாப் உலகில் ஓர் ஆசிய நாடு புதிய சகாப்தத்தை இந்தப் பாடல் மூலம் தொடங்கிவைத்தது.
கிம் நம்ஜூன், கிம் சியோக்ஜின், மின் யூங்கி, ஜங் ஹோசோக், பார்க் ஜிமின், கிம் டேஹ்யுங், ஜியோன் ஜங்குக் ஆகிய ஏழு பேர்தான் பிடிஎஸ் குழுவின் அங்கம். ‘பிக் ஹிட்’ என்டெர்டெயின்மெண்ட் என்னும் நிறுவனம் மக்கள் தேர்ந்தெடுப்பு முறையில் இந்த ஏழு பேரைத் தேர்வுசெய்து இசைக் குழுவை உருவாக்கியது.
பாப் இசையால் உலக அளவில் வெகு விரைவில் முக்கியமான இடத்தை இந்த இசைக் குழு பிடித்தது. கிராமி, அமெரிக்காவின் மியூசிக் விருது உள்ளிட்ட பல விருதுகளை இந்தக் குழு பெற்றுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் இக்குழு இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது.
இந்தக் குழுவினர் தங்களுடைய யூடியூப் அலைவரிசை மூலம் உலகின் பல பாகங்களிலும் உள்ள இளைஞர்களைத் தங்கள் இசையால் கவர்ந்தனர். குறிப்பாக இந்தியாவில் இவர்களுடைய பாப் இசைக்கு ஆர்மி ரசிகர்கள் அதிகம். இவர்களது இசையைக் கேட்டபடி பல் துலக்க, பாடம் படிக்க, இவ்வளவு ஏன், பாத்ரூம் போகக்கூட மறந்துபோன தீவிர ரசிகர்கள் அதிகம்.
‘பாய் வித் லவ்’, ‘ஃபேக் லவ்’, ‘ஸ்பிரிங் டே’, ‘ப்ளட், ஸ்வீட் அண்ட் டியர்ஸ்’ போன்ற இவர்களது பாடல்களின் வரிகள் இளைஞர்களுக்கு அத்துப்படி. இந்தப் பாடல்களுக்கெனத் தனியே லிரிக் வீடியோக்களும் (lyric) உண்டு.
பிடிஎஸ் பாடல்களைப் போல் இந்த லிரிக் வீடியோக்களின் பார்வைகளும் கோடிகளைத் தாண்டுகிறது. ‘லைஃப் கோஸ் ஆன்’ என்னும் பாடல் 46 கோடிப் பார்வைகளைப் பெற்றது. இந்தப் பாடலுக்கும் பல லிரிக் வீடியோக்கள் உண்டு. ஒவ்வொரு லிரிக் வீடியோவும் 30, 40 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.
சென்ற வாரம் பிடிஎஸ் குழுவினர் 9ஆம் ஆண்டை ஒட்டி யூடியூப் நேரலையில் வந்தனர். தங்களுக்கு விருப்பமான இசைக் குழுவினர் ஏதோ அறிவிக்கப் போகிறார்கள் என உலகம் முழுவதும் உள்ள அவர்களுடைய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்தியாவில் விரைவில் மெய்நிகர் நிகழ்ச்சி (virtual performance) நடத்த இருப்பதாக இவர்கள் ஏற்கெனவே கூறியிருந்தனர். எனவே, அது சார்ந்த அறிவிப்பாக இருக்கலாம் என இந்திய ரசிகர் படை காத்திருந்தது.
ஆனால், கிடைத்ததோ மிகப் பெரிய அதிர்ச்சி. பிடிஎஸ் பிரியப் போகிறது என்கிற தகவல்தான் அதற்குக் காரணம். ஒன்பது ஆண்டுகளாக அவர்கள் வசித்த அந்த வீட்டில் இரவு உணவைச் சாப்பிட்டபடியே இனி தாங்கள் ஒவ்வொருவரும் என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பகிர்ந்துகொண்டார்கள்.
எல்லோரும் தனித்தனியாக இசைத் துறையில் பயணிக்க இருக்கிறார்கள். ‘எங்களைத் தனியாக அறியும் முன்பே நாங்கள் இடைவேளை எடுத்திருக்க வேண்டும். அதனால், இந்தப் பிரிவு எங்களுக்கு அவசியம்’ எனத் தெரிவித்தனர். பிரிவை அறிவித்த நேரத்தில் குழுவினர் பலரது கண்களும் குளமாகியிருந்ததைப் பார்க்க முடிந்தது. பிடிஎஸ் பிரிந்துபோனாலும் அவர்களது சங்கீதம் இனி தனித்தனியாகப் பிரவாகம் எடுக்கும் எனச் சொல்லப்படுகிறது. அதுதான் இசை ரசிகப் படைகளுக்கு ஒரே ஆறுதல்.