

பாப் உலகின் மோஸ்ட் வாண்டட் பாடகரான ஜஸ்டின் பீபருக்கு இது போதாத காலம் போல. ஏற்கெனவே மனச் சோர்வாலும் பதற்றத்தாலும் பாதிக்கப்பட்டிருந்ததாகச் சொன்னவர் பூச்சிக்கடியால் பாதிக்கப்பட்டதாக 2020இல் அறிவித்தார்.
தற்போது 'Ramsay Hunt Syndrome' என்கிற பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாக இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார். சின்னம்மையை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் தாக்குதலால் ஏற்படும் பாதிப்பு இது. இதனால் தன் முகத்தசைகளை அசைக்க முடியவில்லை என்று பீபர் தெரிவித்துள்ளார்.
தன் உடல்நிலை பாதிக்கப் பட்டுள்ளதால் இந்த மாதமும் அடுத்த மாதமும் அமெரிக்காவில் நடைபெறவிருந்த தனது இசை நிகழ்ச்சிகளை ஜஸ்டின் பீபர் ரத்து செய்திருக்கிறார். நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றமடைய வேண்டாம் என்று தன் ரசிகர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மே 2022 தொடங்கி மார்ச் 2023 வரை 125 இசை நிகழ்ச்சிகளை நடத்த ஜஸ்டின் பீபர் திட்டமிட்டிருந்த நிலையில் அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. அக்டோபர் மாதத்தில் அவர் இந்தியாவில் இசை நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தது. அது நடைபெறுமா இல்லையா என்கிற குழப்பத்தில் இருக்கிறார்கள் இந்திய ரசிகர்கள்.
பாப் கிங்
28 வயதாகும் ஜஸ்டின் பீபருக்கு ஆனாலும் இவ்வளவு சோதனை கூடாது என அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கவலையோடு பதிவிட்டுவருகிறார்கள். கனடாவைச் சேர்ந்த பீபர் 13 வயதில் பாடல் எழுதிப் பாடியபோது ‘இவன் இந்த உலகத்துக்கு ஏதோ சொல்ல வர்றான்போல’ என்று இசை ரசிகர்கள் திரும்பிப் பார்த்தனர். அப்படிப் பார்த்தவர்களில் ஸ்கூட்டர் பிரானும் ஒருவர். திறமை வாய்ந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களது பாடல்களை ஆல்பமாக வெளியிடுபவர் பிரான். பிரான் நடத்தும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் இட்டுப் பாடல் பதிவுசெய்தபோது பீபருக்கு 13 வயது!
தன் முதல் ஆல்பம் வெளிவருவதற்குள் 15 வயதில் பீபர் பாடிய தனிப்பாடல் ‘ஒன் டைம்’ 2009ஆம் ஆண்டுக்கான கனடாவின் சிறந்த 100 பாடல்கள் வரிசையில் 12ஆம் இடத்தைப் பிடித்தது. பாப் பாடல்களைத் தரவரிசைப்படுத்தும் அமெரிக்காவின் ‘பில்போர்டு ஹாட் 100’ பட்டியலில் 17ஆம் இடத்தைப் பிடித்தது. அமெரிக்க பாப் வரலாற்றில் மிக இளம் வயதில் இந்தப் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்தார் பீபர். ‘பாப் இளவரசன்’ என்று கொண்டாடப்பட்டுப் பின் பாப் உலகின் அரசனாக மாறினார்.
ஆல்பம் வெளியிடத் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே ‘டைம்’ இதழ் வெளியிட்ட ‘உலகின் செல்வாக்கான 100 நபர்கள்’ பட்டியலில் இடம்பெற்றார். 17 வயதில், ‘உலகில் 30 வயதுக்குட் பட்டவர்களில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள்’ என ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 18 வயதுக்குள் உலகின் முக்கியமான அங்கீகாரங்களைப் பெற்றார்.
என் ரசிகையாக இருந்திருக்கலாம்
ஒரு பக்கம் பாப் ஆல்பங்களை வெளியிட்டுக்கொண்டிருந்தபோது மறுபக்கம் சர்ச்சைகளுக்குக் குறைவில்லாதபடி வலம்வந்தார். நெதர்லாந்தில் உள்ள ‘ஆன் ஃப்ராங்க் இல்ல’த்துக்கு 2013இல் சென்றவர் அங்கிருந்த கெஸ்ட்புக்கில் பொறித்துவிட்டுவந்த பொன்னெழுத்துகளுக்குப் போதுமான அளவுக்கு வாங்கிக்கட்டிக்கொண்டார்.
இருக்காதே பின்னே... ‘இவங்க ரொம்ப நல்ல பொண்ணுதான். இப்ப இருந்திருந்தா என் ஃபேன் கிளப்ல சேர்ந்திருப்பாங்க’ என்று எழுதியிருந்தார். இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் நடந்த கொடூரங்களைப் பதிவுசெய்த சிறுமியைப் பற்றி இப்படி எழுதினால் சும்மா விடுவார்களா?
ஆனால், இதற்கெல்லாம் சரிந்துவிடக் கூடியதா அவரது மவுசு? குடித்துவிட்டு கார் ஓட்டியதற்காகக் கைது செய்யப்பட்ட பீபரை விடுவிக்கும்படி கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பேர் வெள்ளை மாளிகைக்கு பெட்டிஷன் அனுப்பி திகைக்கவைத்தனர்!
இப்படி மாஸாகப் போய்க்கொண்டிருந் தவரைத்தான் பூச்சிக்கடியும் வைரஸ் தாக்குதலும் சேர்ந்து பாடாய்ப்படுத்துகின்றன. இருந்தபோதும் அவருடைய ரசிகர்கள் மனதைத் தேற்றிக்கொண்டு ‘நீ மீண்டு வா தல’ வகையறா கமென்ட்டுகளை அள்ளித் தெளித்து ஆறுதலடைந்து வருகிறார்கள்.