

தமிழ் சினிமாவில் நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு வெற்றி பெற்றவர் நடிகர் விக்ரம். அண்மைக் காலத்தில் கிரிக்கெட்டில் அப்படி ஒருவரைக் கைகாட்ட வேண்டுமென்றால், தினேஷ் கார்த்திக்கைச் சொல்லலாம். 2004ஆம் ஆண்டில் தொடங்கி அணியில் போவதும் வருவதுமாக இருந்த தினேஷ் கார்த்திக், 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையோடு சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்தே விடைபெறுவார் என்ற எண்ணிய வேளையில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளார்.
தொண்ணூறுகளில் நயன் மோங்கியா விக்கெட் கீப்பராக இந்திய அணியில் சுமார் பத்து ஆண்டுகள் நீடித்த வேளையில் புத்தாயிரத்தின் தொடக்கத்தில் பார்த்திவ் பட்டேல் அணியில் இடம்பிடிக்கத் தொடங்கினார். ஓரிரு ஆண்டுகள்தான் சென்றிருக்கும். அடுத்ததாக, தினேஷ் கார்த்திக் 2004ஆம் ஆண்டு அணிக்குள் வந்தார். அதன்பின் இருவரும் மாறிமாறி அணியில் இடம்பெற்றுவந்தார்கள். அப்போது கேப்டனாக இருந்த சவுரவ் கங்குலி தினேஷ் கார்த்திக்கைத் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உருவாக்கும் திட்டதிலும் இருந்தார். ஆனால், 2004-05ஆம் ஆண்டில் மகேந்திர சிங் தோனி, அணியில் இடம்பிடித்த பிறகு இவை எல்லாமே மாறின. அதிரடி ஆட்டப் பாணியைக் கடைபிடித்தார் தோனி.
இதற்கு முன்பு இந்திய விக்கெட் கீப்பர்கள் யாரும் தோனி அளவுக்கு அதிரடியாக விளையாடியதில்லை. அந்தப் பாணி அணியில் அவருக்கான இடத்தை நிரந்தரமாக்கியது. அப்போது அதிரடி ஆட்டத் தன்மைக்குப் பொருந்தாத பார்த்திவ் பட்டேலும் தினேஷ் கார்த்திக்கும் கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்டார்கள். அதன்பிறகு இருவருமே தோனிக்கு மாற்று வீரர்களானார்கள். இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கின் இடம் என்றுமே நிரந்தரமாக இருந்ததில்லை.
ஆனால், 2007 அவருக்கு நிச்சயம் மறக்க முடியாத ஆண்டாகவே அமைந்தது. அந்த ஆண்டில் மட்டும் அவர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடினார். தோனி விக்கெட் கீப்பராக விளையாட, தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி தினேஷ் கார்த்திக் கவனம் ஈர்த்தார். அந்த ஆண்டில் 1 டெஸ்ட் சதம், 6 அரை சதங்கள் விளாசினார். 2007இல் இந்திய அணி வென்ற முதல் டி20 உலகக் கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றார். அதே ஆண்டில் அதற்கு முன்பாக நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை அணியிலும் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றவர்தான்.
அதன்பின் தொடர்ந்து அணியில் இருந்திருக்க வேண்டியவர் தினேஷ் கார்த்திக். ஆனால், டெஸ்ட் அணியில் அவருக்குத் தொடர்ந்து இடம் கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டம்தான். ஒரு நாள் அணியிலும்கூட 2010ஆம் ஆண்டில் மட்டுமே 15 ஒரு நாள் போட்டிகளில் அவருக்கு விளையாட வாய்ப்புக் கிடைத்தது. பல சந்தர்ப்பங்களில் 15 பேர் கொண்ட அணியில் தினேஷ் கார்த்திக்கின் பெயர் இருக்கும். ஆனால், 11 பேர் கொண்ட அணியில் இருக்க மாட்டார். பெவிலியனில் உட்கார்ந்துகொண்டிருப்பார்.
2014ஆம் ஆண்டு இறுதியில் தோனி டெஸ்ட் போட்டிக்கு குட்பை சொன்னவுடன், அந்த இடத்தை தினேஷ் கார்த்திக் நிரப்புவார் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள். ஏனென்றால், உள்நாட்டுத் தொடர்களிலும் ஐபிஎல் போட்டிகளிலும் தினேஷ் கார்த்திக் சிறப்பாகவே விளையாடிவந்த நேரம் அது. அதனால், அந்த வாய்ப்பு அவருக்கே கிடைத்திருக்க வேண்டும். ஆனால், தோனிக்குப் பிறகு அந்த வாய்ப்பு விருத்திமான் சஹாவுக்குச் சென்றது. வெவ்வேறு ஆண்டுகளில் 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்த சஹாவுக்கு இந்த வாய்ப்புக் கிடைக்க மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் லாபியே காரணம்.
விளைவு, ஒரு நாள் போட்டிகளில் தோனிக்கு மாற்றாகவோ, கோலி, தவான், ரோஹித் போன்ற வீரர்களின் ஓய்வு காரணமாகவோ மாற்று வீரராகத்தான் அணியில் இடம் பிடித்துவந்தார் தினேஷ் கார்த்திக். ஆனால், அப்படிக் கிடைக்கும் வாய்ப்புகளைச் சில சந்தர்ப்பங்களில் அவர் பயன்படுத்தியும் இருக்கிறார்; பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வீணடித்தும் இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு 2018ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த முத்தரப்பு நிதாஷ் கோப்பை போட்டியில்தான் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக முழுமையாகப் பங்கேற்றார். அந்தத் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் எட்டுப் பந்துகளில் 29 ரன்களைக் குவித்துத் தன்னுடைய ருத்ரதாண்டவ ஆட்டத்தால் முத்திரை பதித்தார்.
இதையடுத்து 2019 உலகக் கோப்பை அணியிலும் தினேஷ் கார்த்திக் இடம் பிடிக்க அவருடைய பேட்டிங் செயல்பாடுகள் காரணமாக இருந்தன. ஆனால், 2019 உலகக் கோப்பையில் 3 போட்டிகளில் விளையாடியும் தினேஷ் கார்த்திக் சோபிக்காத நிலையில், அணியிலிருந்து மீண்டும் ஓரங்கட்டப்பட்டார். மேலும், அப்போது அவருக்கு 34 வயதாகிவிட்டதால் அணியில் இனி அவருக்கு இடம் இருக்காது என்றே ஊகங்கள் எழுந்தன. மேலும் அணியில் விக்கெட் கீப்பர்களான கே.எல். ராகுல், ரிஷப் பன்ட் போன்றோரும் அணிக்குள் இருந்ததால், தினேஷ் கார்த்திக்கின் இடம் பறிபோனது.
இந்திய அணியில் இடம் பெறாமல் போயிருந்தாலும் தினேஷ் கார்த்திக் ஐபிஎல்லில் தவிர்க்க முடியாத வீரராகவே, அவர் இடம் பெறும் அணியில் இருந்தார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியிலும் பெங்களூரு அணியைக் கரை சேர்க்கும் அதிரடி ஆட்டக்காரராக விளங்கினார் தினேஷ் கார்த்திக். அதன் விளைவாகத்தான் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்கா தொடருக்கான அணியிலும் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கிடைத்தது. இந்தத் தொடரிலும், குறிப்பாக ராஜ்கோட்டில் நடந்த போட்டியில் தன்னுடைய திறமையை அழுத்தமாக நிரூபித்துக் காட்டினார் தினேஷ் கார்த்திக்.
டி20 போன்ற அதிரடி கிரிக்கெட்டில், ஒரே ஒரு பந்தை எதிர்கொள்ள மட்டுமே வாய்ப்பு என்றால், அந்தப் பந்தை சிக்ஸராக மாற்று என்பதே கிரிக்கெட்டின் அடிப்படை. அதை அழகாக உள்வாங்கி சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதும் இக்கட்டான நேரங்களில் வெளுத்து வாங்குவதும் என முன்னெறியிருக்கிறார் தினேஷ் கார்த்திக். இதன்மூலம் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தினேஷ் கார்த்திக்கும் இடம் பெற வேண்டும் என்ற மூத்த வீரர்கள் எல்லாம் சொல்லும் அளவுக்குத் தன்னை ஒரு டி20 ஸ்பெலிஷ்ட்டாக மாற்றிக்கொண்டிருக்கிறார்.
2007இல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பைத் தொடரில் தினேஷ் கார்த்திக்குடன் விளையாடிய இந்திய வீரர்கள் எல்லோருமே ஓய்வு பெற்றுவிட்டார்கள். தினேஷ் கார்த்திக் மட்டுமே டி20 ரேஸில் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கிறார். 37 வயதில் இருக்கும் தினேஷ் கார்த்திக்கு ஓரிரு ஆண்டுகள் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்தால், அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை ஓரளவாவது முழுமைபெறும்!