Published : 18 Jun 2022 05:09 PM
Last Updated : 18 Jun 2022 05:09 PM

மாத்தி யோசி 4: டேக் இட் ஈசி பாலிசி!

நாம் எல்லோருமே வாழ்க்கையில ஒவ்வொரு காலகட்டத்தைக் கடந்து வந்திருப்போம். குழந்தை, வாலிபப் பருவத்தை கடந்து வயோதிகக் கட்டத்தை நோக்கி நகரும் எல்லோரும் எதிர்கொண்ட அனுபவங்கள் பலரகங்கள். குறிப்பாக, இளைஞர்களுக்கு அப்பா, அம்மா கையைப் பிடித்து பள்ளிக்கு நடந்து போனதிலிருந்து நண்பர்கள் கையைப் பிடித்து வலம்வந்த கல்லூரி காலம்வரை நினைவில் பதிந்திருக்கும் அனுபவங்கள்தான் எத்தனை எத்தனை? இதில் சோதனை நிறைந்த சவாலான காலகட்டம் எது என்று கேட்டால் விதவிதமாகப் பதில்கள் வரும்.

“கல்லூரிப் படிப்பை முடித்ததே எனக்கு பெரிய சோதனையா இருந்துச்சு”, “ சார், என்னைக் கேட்டா கல்யாணத்துக்குப் பிறகு பொறுப்புங்கிற வட்டத்துல மாட்டிகிட்டதுதான்” என்று பேசும் பல இளைஞர்கள்களின் அனுபவங்கள் ஒரு விஷயத்தில் மட்டும் சிக்கலான அனுபவமாக இருக்கும். அது, வேலை!

ஏனெனில் பலருக்கும் படித்து முடித்தபின் எளிதாக வேலை கிடைத்துவிடுவதில்லை. நடைமுறையில் பல மாணவ, மாணவிகள் எதற்காக ஒரு பாடப்பிரிவை பள்ளியில் தேர்ந்தெடுத்து படிக்கிறோம் என்று தெரியாமலேயே படித்து முடித்து விடுகிறார்கள். சரி, கல்லூரிப் படிப்பையாவது தீர்மானித்து படிக்கிறார்களா என்றால், ஒருசிலரை தவிர பலரும் அப்படி தீர்மானிப்பது இல்லை. படிப்புக்கேற்ற வேலை, நிறுவனங்களின் எதிர்பார்ப்பு இவற்றை எல்லாம் யோசித்து செயலாற்றும் முன் தயாரிப்பு பலரிடமும் இல்லை என்பதே யதார்த்தம். இளங்கலை, முதுகலை படிப்பை கடப்பதே வெற்றி என்று நினைப்பது கசப்பான நிஜங்களே.

இதில் பெற்றோர் நினைப்பு என்ன? நல்ல கல்லூரி, நல்லப் பாடப்பிரிவில் சேர்த்து விட்டதோடு அவர்களுடைய வேலை ஓவர். “எம் புள்ளைக்கு வேலைய கல்லூரி வாங்கி கொடுத்திடும்” என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். வளாக நேர்க்காணலில் தேர்வாகிவிட்டால் பெற்றோர்கள் மாணவர்கள் ரெண்டு பேருக்கும் டபுள் சந்தோஷம் கிடைக்கும். ஆனால், துரதிர்ஷடவசமாக எல்லோருக்கும் அந்த சந்தோஷம் கிடைப்பதில்லை!

எதிர்பார்த்த வேலை இல்லாமல் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியே வரும் மாணவ / மாணவிகள் சந்திக்கும் சவால்கள்தான் உண்மையில் ஒரு சோதனையான காலம். வேலை என்கிற வரம் கிடைக்கும் வரை அது அவர்கள் மனதில் நீங்காத பாரமாக ஏறிவிடும். தொடர்ந்து ஐந்தாறு நேர்க்காணலில் தோல்விகளை மட்டுமே சந்திக்கும் இளைஞர்கள், சக நண்பர்கள் பெரிய நிறுவனத்தில் நல்ல வேலை, நல்ல சம்பளம் என்று அமைந்துவிட, தனக்கு மட்டும் அப்படி வாய்ப்பு அமையவில்லையே என்ற ஆற்றாமையில் மனசோர்வுக்கு ஆட்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

இந்தக் கணம்தான் அவர்களுக்கு தாங்கள் வளர்த்து கொள்ளவேண்டிய தகுதிகள் களையப்பட வேண்டிய குறைபாடுகள் எவையெவை என்று யோசிக்க தளம் போட்டுத் தருகிறது. எதிர்பாராத விளைவாக இந்த நிலை இரண்டு, மூன்று ஆண்டுகள் நீண்டுகொண்டே போனால் நேர்க்காணலில் கேட்கிற கேள்விகளைக்கூட சமாளித்துவிடலாம். ஆனால், இந்தப் பக்கத்து வீட்டுக்காரங்க, சொந்தக்காரங்க சமய சந்தர்ப்பம் பார்க்காமல் கேட்கிற கேள்வி எல்லாம் கோபத்தைத் தூண்டும் வகையிலேயே இருக்கும்.

அதில் பாருங்க, ‘எனக்கு தெரிஞ்ச பையன் போன வருஷம்தான் படிப்பை முடிச்சான். நல்ல வேலை கிடைச்சிடுச்சே, இன்னுமா உங்க பையனுக்கு வேலை கிடைக்கல, சும்மா உட்காராம முயற்சி பண்ண சொல்லுங்க’ என்று கேட்காமலேயே இலவச அறிவுரை வழங்கி, அல்ப சந்தோஷம் அடையும் கூட்டம் எல்லாருடைய வட்டத்திலும் உண்டு.

பிள்ளைகளையும் விட்டு கொடுக்க முடியாமல் காரணத்தையும் சொல்ல முடியாமல் தவிக்கும் பெற்றோர் வேதனை ஒரு மடங்கு என்றால், அதனை பார்க்கும் இளைஞர்கள் படும் வலியோ இரு மடங்கு. இங்கேதான் இளைஞர்கள் இரண்டு விதமான உளவியல் ரீதியான தாக்கத்தை எதிர் கொள்கிறாரகள். ஒன்று, எதிர்மறை தாக்கம். வேலைக்கான நேர்க்காணலை எதிர்கொண்டும் வேலை வாய்ப்பு தவறுகிற நிலையில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற கோபத்தில் சம்பந்தபட்ட நிறுவனத்தின் மேலேயே புகார்களை வாரி இறைப்பது, சொந்தகாரர்கள் யார் கேள்வி கேட்டாலும் எரிந்து விழுவது என்று மாறிவிடும். ஒரே வரியில சொல்ல வேண்டுமென்றால் பிரச்சினைக்குத் தீர்வு தேடாமல் தானே ஒரு பிரச்சினையாக மாறுவது.

சீனச் சிந்தனையாளர் லாவேட்ச்சு சொல்வதைப்போல எந்த ஒரு சிக்கலான பிரச்சினைக்கும் தீர்வு இருக்கிறது. அந்த தீர்வை அடைய நினைக்கும் மனோபாவத்தை வளர்த்து கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. இன்னொன்று நேர்மறை சிந்தனையோடு பிரச்சினையை அணுகுவது . இந்த வகையான இளைஞர்கள்தாம். உயர்ந்த இலக்கை அடைவதற்கு அடிப்படை விதி சோதனையைக் கடந்தே சாதனை என்பதை நன்கறிவார்கள் .மாத்தி யோசித்து தீர்வை எட்டுவதில் கிங்கா இருப்பார்கள். நம்மை குறை சொல்றவங்களை குறைத்து மதிப்பிடாமல் தவறுகளை திருத்திகொண்டு தங்களை இன்னும் தகுதிப்படுத்தி கொள்வார்கள்.

அடுத்த மூன்றாண்டு, ஐந்தாண்டு திட்டங்கள் எல்லாம் போட்டு வைத்திருப்பார்கள். கிடைத்த வேலையில் சேர்வது, திறமையை வளர்த்துக்கொண்டு அப்புறம் நினைத்த வேலையை அடைவது என்று தெளிவாக ஸ்கெட்ச்கூட போட்டு வைத்திருப்பார்கள். நிறைவாக ஒன்று, வேலை என்பது சிலருக்கு விரைவில் அமையும். இன்னும் சிலருக்கு கொஞ்சக் காலம் தள்ளி போகலாம். துன்பத்தில் ஆழ்ந்து போகாமல் இலக்கை நோக்கி துணிவுடன் செயல்பட்டு பாருங்கள். வேலை வரும் வேளை விரைவில்!

(இன்னும் யோசிப்போம்)

கட்டுரையாளர்: மேலாண்மை பேராசிரியர்

தொடர்புக்கு: karthikk_77@yahoo.com

‘இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x