

குடும்பத்தில் ஓரிருவர் பாடுவார்கள். வாத்தியங்களை வாசிப்பார்கள். ஆனால், ஒரு குடும்பமே இசையில் மூழ்கி இருப்பதைப் பார்க்க வேண்டுமென்றால், லிடியன் நாதஸ்வரம் குடும்பத்தைத்தான் பார்க்க வேண்டும்.
பேஸ் கிதார், லீட் கிதார், டிரம்ஸ், தபேலா, கீபோர்ட், பியானோ என லிடியன் எந்த வாத்தியத்தைத் தொட்டு வாசித்தாலும் அதிலிருந்து இசை பிரவாகமாக வெளிப்படுவதை, திரைப்பாடல்களை வாசித்து வெளியிடும் அவர்களின் யூடியூப்பில் காண முடியும்.
ஏற்கெனவே அதிவேக பியானோ வாசிப்பில் உலக சாதனை நிகழ்த்தியிருக்கும் லிடியன் நாதஸ்வரம், தற்போது `குரோமேட்டிக் கிரமேடிக்' என்னும் ஜாஸ் இசை ஆல்பத்தை ஜூன் 21 சர்வதேச இசை நாளில் வெளியிடுகிறார். இந்த இசை ஆல்பத்திற்காக லிடியனை இசையமைப்பாளர் இளையராஜா, வீணை வித்வான் ராஜேஷ் வைத்யா, ஜாஸ் பியானோ கலைஞர் லூயிஸ் பேங்க்ஸ், நடிகர் மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து லிடியன் வெளியிட்டிருக்கும் காணொளியில், "இந்த `குரோமேட்டிக் கிரமேடிக்' ஆல்பத்தில் பன்னிரண்டு (வாத்தியங்களின் இசை) பாடல்கள் இருக்கும். ஒரு ஸ்வரஸ்தானத்திலிருந்து ஒரு பாடல் என பன்னிரெண்டு பாடல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. உலகின் பிரபலமான இசைக் கலைஞர்கள் இதில் வாசித்திருக்கின்றனர்" என்று பேசியிருக்கிறார்.
லிடியனின் இந்த முயற்சியைப் பாராட்டியுள்ள ஏ.ஆர். ரஹ்மான், "உலகின் தலைசிறந்த இசைக் கலைஞர்களுடன் உலகப் புகழ் பெற்ற டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட இந்தியாவின் சிறந்த கலைஞர்களும் பங்கெடுத்திருக்கின்றனர். அவரின் இந்த ஜாஸ் ஆல்பம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்" என்று பேசியிருக்கிறார்.
காணொளியைக் காண: https://www.youtube.com/watch?v=QNBK4LCRHPo