

ஜூன் மாத இறுதியில் அயலர்லாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டித் தொடருக்கு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்தியாவில் நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கு கேப்டனாக ரிஷப் பன்ட் செயல்பட்டுவருகிறார். ஜூலையில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள தொடர்களுக்கு ரோஹித் சர்மாவே கேப்டனாக இருப்பார். இப்படி ஒவ்வொரு தொடருக்கும் ஒரு கேப்டனை நியமிப்பது நல்லதா, கெட்டதா?
2007-ஆம் ஆண்டில் டி20 கேப்டனாக நியமிக்கப்பட்ட எம்.எஸ். தோனி, பிறகு ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தோனியால் கேப்டனாகச் செயல்பட முடியாத நிலையிலோ ஓய்வில் இருந்த நிலையிலோ ஒரே ஒரு முறை சுரேஷ் ரெய்னா 2011இல் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்திருக்கிறார். ஆனால், 2014இல் தோனி டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு மட்டுமே கேப்டனாகத் தொடர்ந்தார். 2016 இறுதி வரை கேப்டனாக தோனி இருந்த வரை இடையில் 2015இல் மட்டும் ஒரு முறை டி20 போட்டிகளுக்கு ரஹானே கேப்டனாக இருந்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2021 வரை விராட் கோலி ஒரு நாள் மற்றும் டி20 கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு, அவரால் கேப்டனாகத் தொடர முடியாத காலத்தில் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்திருக்கிறார். கடந்த ஆண்டு ஜுலையில் இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடச் சென்றிருந்தபோது, இலங்கைக்கும் இந்திய அணி சென்றது. இந்திய அணியின் கேப்டன் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இங்கிலாந்தில் இருந்ததால், இலங்கைக்கு எதிரான ஒரு நாள், டி20 தொடர்களுக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டு தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மா காயம் காரணமாக விளையாட முடியாமல் போனதால், கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
தற்போது டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வடிவங்களுக்கும் ரோஹித் சர்மா கேப்டனாக இருக்கும் நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெறும் டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளித்துவிட்டு கே.எல். ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால், காயம் காரணமாக அவர் விலகவே, ரிஷப் பன்ட் கேப்டனாக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்கா தொடரை முடித்துக்கொண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு ஒரு டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள், 3 டி20 போட்டிகளில் விளையாடச் செல்ல உள்ளது. இந்தத் தொடர்களில் விளையாட முழு நேர கேப்டன் ரோஹித் சர்மா, தென் ஆப்பிரிக்க தொடருக்கு கேப்டனாக இருக்கும் ரிஷப் பன்ட் ஆகியோர் இங்கிலாந்துக்குச் சென்று விடுவார்கள்.
எனவே, இடையில் நடைபெற உள்ள அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இளம் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அண்மைக் காலமாக இப்படி ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு கேப்டனாக இந்திய அணியில் செயல்பட்டுவருகிறார்கள். இந்த ஆண்டு அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், அந்தத் தொடருக்கு கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்படும் ரோஹித் சர்மா தொடர்ந்து ஓய்விலேயே அமர வைக்கப்பட்டுவருகிறார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளில் டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரு கேப்டனும், ஒரு நாள், டி20 போட்டிகளுக்கு ஒரு கேப்டனும் என்றும் தனியாகச் செயல்பட்டு வருகிறார்கள். எனவே, அந்தந்த தொடர்கள் நடைபெறும்போது அதற்குரியவரே அணியின் கேப்டனாகச் செயல்படுகிறார்கள். ஆனால், இந்தியாவில் மூன்று வடிவங்களுக்கும் ஒரே கேப்டன் நியமிக்கப்படுவதால், அவரால் விளையாட முடியாமல் போகும்போது புதிய கேப்டனைத் தேடும் நிலை எற்படுகிறது.
விராட் கோலி டெஸ்ட் கேப்டனாகவும் தோனி ஒரு நாள், டி20 போட்டிகளுக்கு கேப்டனாகவும் இருந்த வரையில் இப்படி கேப்டன்கள் மாற்றும் நிலை பெரிய அளவில் ஏற்பட்டதில்லை. ஆனால், விராட் கோலி மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்கும் ஒரு நாள், டி20 போட்டிகளுக்கு ரோஹித் சர்மாவும் கேப்டனாக இருக்கும் சூழல் ஏற்பட்டது. டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகிக் கொண்டதால், அந்தப் பொறுப்பும் ரோஹித் சர்மாவிடமே வழங்கப்பட்டுவிட்டது. அதற்குப் பதிலாக டெஸ்ட் கேப்டன் பொறுப்பை வேறு ஒருவருக்கு வழங்கியிருந்தால், ரோஹித் சர்மா டி20, ஒரு நாள் கேப்டன் பொறுப்பில் தொடர்ந்து ஓய்வுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டிருக்க முடியும்.
இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்லலாம். அயர்லாந்து தொடருக்கு கேப்டனாக ரிஷப் பன்ட் தேவையில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முன்கூட்டியே முடிவு செய்திருந்தால், அந்தத் தொடருக்கும் ஹர்திக் பாண்ட்யாவையே கேப்டனாக நியமித்திருக்கலாம். அவருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கேப்டன்சி அனுபவம் கிடைத்திருக்கும். அதை விடுத்து ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு கேப்டனை நியமிப்பதால் யாருக்கு என்ன பயன்?